உலகக்கோப்பை கால்பந்து: ஜெயிச்சாலும் தோத்தாலும் பரிசு மழை தான்
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் இம்முறை மொத்தமாக 440 மில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் சுமார் ரூ. 3,640 கோடி) மதிப்பிலான பணத்தை பரிசாக வழங்கியுள்ளது ஃபிஃபா;
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் வென்று சாம்பியன் பட்டம் வென்றால் கோடி, கோடியாய் பண மழை கொட்டும். சில கோடி ரூபாய் அல்ல. பல நூறு கோடி ரூபாய். கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடரில் இம்முறை மொத்தமாக 440 மில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் சுமார் ரூ. 3,640 கோடி) பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் 358 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த மொத்த பரிசுத்தொகை 2018ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பையில் 400 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. இந்த தொகையுடன் மேலும் 40 மில்லியன் டாலரைச் சேர்த்து இம்முறை மொத்தமாக 440 மில்லியன் டாலர் மதிப்பிலான பணத்தை பரிசாக வழங்கியுள்ளது ஃபிஃபா. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 3,640 கோடி ரூபாய் ஆகும்.
இந்த மொத்த பரிசுத்தொகையில், கோப்பையை வென்றுள்ள அர்ஜென்டினா அணிக்கு சுமார் 347 கோடி ரூபாய் (42 மில்லியன் அமெரிக்க டாலர்) பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து தொடரில் இரண்டாம் இடத்தை பிடித்த பிரான்ஸ் அணிக்கு சுமார் 248 கோடி ரூபாய் (30 மில்லியன் அமெரிக்க டாலர்) பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
மேலும், இத்தொடரில் மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்த குரோஷியா மற்றும் மொரோக்கோ அணிகள் முறையே 27 மில்லியன் மற்றும் 25 மில்லியன் அமெரிக்க டாலரை பரிசாகப் பெற்றன.
இவை மட்டுமல்லாமல், ஐந்து முதல் எட்டாம் இடம் வரை பிடித்த ஒவ்வொரு அணிக்கும் தலா 17 மில்லியன் அமெரிக்க டாலரும், ஒன்பதாவது முதல் பதினாறாவது இடம் வரை பிடித்த அணிகளுக்கு தலா 13 மில்லியன் அமெரிக்க டாலரும் வழங்கப்பட்டது
பதினேழாவது இடம் முதல் முப்பத்திரண்டாவது இடம் வரை பிடித்த அணிகளுக்கு தலா ஒன்பது மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 74 கோடி ரூபாய்) வழங்கப்பட்டது. கூடுதலாக, ஒவ்வொரு தகுதி பெற்ற அணியும் போட்டிக்கு முன்னதாக 1.5 மில்லியன் அமெரிக்க டாலரை தயாரிப்பு செலவுகளுக்காகப் பெற்றன.
கடந்த 1994 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் வெற்றிபெற்ற அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை நான்கு மில்லியன் டாலராக இருந்தது. 28 ஆண்டுகள் இடைவெளியில் இது 42 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு, கோப்பையை வென்ற அணிக்கு 35 மில்லியன் அமெரிக்க டாலரும் இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலரும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டன. இப்பரிசுத் தொகை 2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் முறையே 38 மில்லியன் டாலர் மற்றும் 28 மில்லியன் டாலராக உயர்ந்தது.
ஆண்களுக்கான கால்பந்து உலகக் கோப்பை பரிசுத்தொகை ஒருபுறம் கிடுகிடுவென உயர்ந்துகொண்டிருந்தாலும், மகளிர் கால்பந்துக்கான பரிசுத்தொகையிலோ வணிகத்திலோ இதே அளவு வளர்ச்சி இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறியே. 2023ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் கால்பந்து உலகக் கோப்பையில் மொத்தம் 60 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளதாக ஃபிஃபா அறிவித்துள்ளது.
இது 2022 கத்தார் உலகக்கோப்பையில் வழங்கப்பட்ட பரிசுத்தொகையை விட இது சுமார் ஏழு மடங்கு குறைவு. 2019ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பையில் மொத்த பரிசுத்தொகை 30 மில்லியன் டாலர் மட்டுமே இருந்த நிலையில், 2023 உலகக்கோப்பையில் இது 60 மில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.