தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற வீரருக்கு உற்சாக வரவேற்பு

தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற வீரருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.;

Update: 2021-07-22 07:15 GMT

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றிப் பெற்று தங்க பதக்கம்  வென்ற சிறுவனுக்கு கிராமமக்கள் மாலை அணிவித்த உற்சாக வரவேற்பு அளித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த படப்பை, காட்டுக் காலனியை சேர்ந்தவர் சுரேஷ். வேன் ஓட்டுனர். இவரது மகன் தனுஷ்குமார் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

சிலம்பம் போட்டியில் ஆர்வம் மிக்க, தனுஷ்குமார், படப்பையை சேர்ந்த தனியார் அகாடமி' யில், ஒன்றரை ஆண்டுகளாக, பயிற்சி பெற்று வருகிறார்.

உள்ளூர் போட்டிகளில் அசத்தி வந்த தனுஷ்குமார், ஜூலை, 17, 18,19 ஆகிய தேதிகளில், கோவாவில் நடந்த, தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்துகொண்டார்.

அதில், 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில், தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில், பல்வேறு மாநிலங்களில் இருந்து, 50 பேர் கலந்து கொண்டனர்.

அதேபோட்டியில், 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில், திருமுடிவாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பதக்கம் வென்று சென்னை திரும்பிய வீரருக்கு ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.செல்வபெருந்தகை பன முடிப்பு கொடுத்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் வெற்றி பெற்ற இரண்டு வீரர்களுக்கும் அப்பகுதி மக்கள் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தி திறந்த வேனில் மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

மேலும் அங்குள்ள பொதுமக்கள் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சால்வை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் தங்களது ஊருக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு இனிப்புகள் ஊட்டியும் பாராட்டி மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News