இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் திடீர் ஓய்வு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை நாயகன் இருந்த பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்;

Update: 2022-07-18 15:04 GMT

இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டர்ஹாமில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியுடன், விடைபெற்றுக் கொள்வதாக கூறியுள்ளார்.


இதுதொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், நாளை நடைபெறும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி, என்னுடைய கடைசி போட்டி. இது கடினமான முடிவு என எனக்கு தெரியும். இருப்பினும், ஒருநாள் போட்டிகளில் என்னுடைய முழு திறனையும் வெளிப்படுத்த முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.

என்னுடைய சொந்த மைதானமான டர்ஹாமில் விளையாடிய பிறகு விடை பெற இருக்கிறேன். நிச்சயம் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று, தொடரில் அணி முன்னணி பெறும் நிலையில் விடைபெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இங்கிலாந்து ரசிகர்கள் இவ்வளவு நாள் கொடுத்த அன்பு மறக்க முடியாதது. டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்காக விளையாடுவேன் என கூறியுள்ளார்

பென்ஸ்டோக்ஸின் இந்த முடிவு இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதேநேத்தில் அவரை வெற்றியுடன் வழியனுப்ப இங்கிலாந்து அணியினரும் தயாராக உள்ளனர். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து விடைபெறும் பென் ஸ்டோக்ஸூக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி முதன்முறையாக 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றதற்கு பென் ஸ்டோக்ஸின் சிறப்பான ஆட்டமே காரணம். நியூசிலாந்து அணிக்கு எதிராக தனி ஒருவராக போராடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அன்றுமுதல் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை நாயகன் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.

பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்துக்காக 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் மற்றும் 21 அரை சதங்களுடன் 2919 ரன்கள் எடுத்துள்ளார், மேலும் 74 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Tags:    

Similar News