சர்வதேச போட்டியில் பங்கேற்க செல்லும் திருப்பூர் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள்

சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்காக திருப்பூர் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் தேர்வாகி உள்ளனர்.

Update: 2023-05-13 12:21 GMT

சர்வதேச போட்டியில் விளையாட தேர்வாகி உள்ள திருப்பூர் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள்.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் இருவர் சர்வதேச  போட்டியில் விளையாட தேர்வாகி உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மங்கலம் அக்ஹாரபுதூரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (23), காங்கயத்தை சேர்ந்தவர் லட்சுமண காந்தன் (50). மாற்றுத் திறனாளிகளான இவர்கள், இந்திய கிரிக்கெட் மாற்றுத்திறனாளிகள் அணிக்கு தேர்வாகியுள்ளனர். சாகுல் ஹமீது இடதுகைபேட்ஸ்மேன், பவுலர். இவர், ஆல்ரவுண்டர் பிரிவிலும், லட்சுமிகாந்தன் வலது கை சுழற்பந்து வீச்சாளராகவும் தேர்வாகியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:-

சென்னை அளவில் பல்வேறு மாற்றுத்திறனாளிகள் போட்டிகளில் பங்கேற்றுள்ளோம். அடுத்த மாதம் சிங்கப்பூர், மலேசியா நாடுகளின் கிளப் அணிகளுக்கு எதிராக நடை பெறும் மாற்றுத்திறனாளி களுக்கான சர்வதேச போட்டியில் விளையாட தேர்வாகியுள்ளோம். இந்த இரு நாடுகளுக்கு எதிராக நடைபெறும் டி-20 போட்டி களில் பங்கேற்க உள்ளோம். ஒவ் வொருவரும் தனித்தனியாக பயிற்சி மேற்கொள்கின்றோம். தேர்வுக்குழு எங்களை தேர்வு செய்துள்ளது.

எங்களுடன் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பி.கார்த்திக் (30), மதுரையை சேர்ந்த சச்சின்சிவா (37) ஆகியோரும் தேர்வாகியு ள்ளனர். ஜூன் 11-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை மேற்குறிப்பிட்ட நாடுகளின் கிளப் அணிகளுக்கு எதிரான டி-20 போட்டிகளில் பங்கேற்கிறோம்' என்றனர்.

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் மேலாளர் பி.ஹரிசந்திரன் கூறும்போது, மாவட்டத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் 4 பேரை தேர்வு செய்துள்ளோம். மதுரையை சேர்ந்த பேட்ஸ்மேன் சச்சின் சிவா கேப்டனாக செயல்பட உள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அப்பாஸ் அலி பயிற்சியாளராக உள்ளார் என்றார்.

மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்ற பழமொழிக்கு ஏற்ப மாற்றுத்திறனாளிகள் இருவரும் ஊனத்தை பொருட்படுத்தாது கிரிக்கெட் போட்டியில் ஆர்வத்துடன் பயிற்சி பெற்றதால் சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News