டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது

மும்பையில் நடந்த ஐ.பி.எல் - லின் இரண்டாவது லீக் போட்டியில் சென்னை அணியை, டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப் பெற்றது.;

Update: 2021-04-10 19:00 GMT

14-வது ஐ.பி.எல். சீசன் கிரிக்கெட் போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கியது. போட்டியின் 2-வது நாளான நேற்று 2வது போட்டி மும்பை வான்கடே விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஓப்பனிங் பேட்ஸ் மேன்களாக டு பிளசிஸும் ருதுராஜ் கெய்க்வாட்டும் களம் இறங்கினர்.

சென்னை அணி ஆட்டத்தை சொதப்பலாக துவங்கியது. டு பிளசிஸ் ரன் எதுவும் இன்றி எல்.பி.டபிள்யூ ஆகி அவுட்டானார். அடுத்த ஓவரில் ருதுராஜும் 5 ரன்களில் அவுட்டானார். இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ரன்களுக்குள் 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.

3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மோயின் அலி- சுரேஷ் ரெய்னா ஜோடி நிதானமாக விளையாடி படிப்படியாக ரன்களை உயர்த்தி வந்தது. 36 ரன்கள் எடுத்த நிலையில் மோயின் அலி, அஸ்வின் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து வந்த அம்பத்தி ராயுடு சுரேஷ் ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார. இந்த ஜோடி சென்னை அணியின் ரன்களை உயர்த்தியது. சுரேஷ் ரெய்னா 54 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். கேப்டன் தோனி அவர் சந்தித்த 2வது பந்தில் ரன்கள் எதுவுமின்றி போல்டு ஆகி வெளியேறினார்.

இறுதி கட்டத்தில் சாம் கரன் மற்றும் ஜடேஜா அதிரடி விளையாடி அணியின் ரன்ரேட்டை அதிகரித்தனர். குறிப்பாக சாம் கரன் டெல்லி அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். இதனால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சாம் கரன் 34 ரன்கள் விளாசி கடைசி பந்தில் போல்டு ஆனார்.

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் ஓப்பனிங் பேட்ஸ் மேன்கள் ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி சென்னை பந்து வீச்சை விளாசி தள்ளினர்.

இந்த ஜோடியில் பிரித்வி ஷா 72 ரன்களும், ஷிகர் தவான் 85 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஸ்டோய்னிஸ் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில்  ரிஷாப் பண்ட் 15 ரன்களும், ஹெட்மயர் ரன் ஏதும் எடுக்காமலும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

முடிவில் டெல்லி அணி 18.4 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப் பெற்றது.

Tags:    

Similar News