உலக கோப்பை கிரிக்கெட்:ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி கணக்கை துவங்கியது இந்தியா

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி கணக்கை துவங்கி உள்ளது.

Update: 2023-10-08 16:39 GMT

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கிய மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தனது வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கிரிக்கெட் போட்டி இந்த முறை இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த  போட்டியானது குஜராத் மாநிலத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த ஐந்தாம் தேதி தொடங்கியது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஆஸ்திரேலியா -இந்திய அணிகளுக்கிடையே என போட்டி மதியம் தொடங்கியது. முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. போட்டி தொடங்கிய முதல் 15  ரன்களுக்குள் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் மூன்று விக்கெட்டுகளை பரிதாபமாக இழந்து பரிதவித்தனர். அதன்பிறகு ஓரளவு சுதாரித்துக் கொண்டு நிதானமாக ஆடினார்கள். இருந்தாலும் இந்திய அணி வீரர்களின் சுழல் பந்து வீச்சையும் வேகப்பந்து வீச்சையும் அவர்களால் சமாளிக்க முடியவில்லை.இறுதியாக 49 .3 ஓவரில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.

200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. ஆனால் இந்திய அணி எளிதாக கருதிய இந்த இலக்கு அபாயகரமானதாக போய்விடுமோன என்ற நிலை தொடக்கத்தில் ஏற்பட்டது. இதற்கு காரணம் இந்திய அணி வீரர்களின் தொடக்க ஆட்டக்காரர்களின் பேட்டிங் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. முதலாவதாக பேட்டிற்கு வந்த கேப்டன் ரோஹித் சர்மா,இஷாந்த் கிஷன் மற்றும் ஸ்ரயாஸ் அய்யர் ஆகியோர் வரிசையாக டக் அவுட் ஆகி வெளியேறினார்கள். இது சென்னை ரசிகர்களை மட்டும் இன்றி உலகம் முழுவதும் உள்ள இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஆனால் அதன் பின்னர் ஜோடி சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி, கேஎல் ராகுலும் சரிவில் இருந்து இந்திய அணியை மீட்டனர். இந்த ஜோடி நிதானமாக நின்று வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது. ஆஸ்திரேலிய வீரர்கள் போட்ட பந்துகளை எல்லாம் நிதானமாக அடித்து ஒன்று இரண்டு ரன்களாக எடுத்தனர். அவ்வப்போது சிக்ஸர் மற்றும் பௌண்டரிகளும் அடித்தனர்.

இந்த நிலையில் 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விராட் கோலி கேட்ச் ஆனார். அதன் பின்னர் கே எல் ராகுலும், ஹர்திக் பாண்டியாவும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி எளிதாக வெற்றியை இந்திய அணிக்கு வாங்கி கொடுத்தது. ஹர்திக் பாண்ட்யா வந்ததும் தனது பங்கிற்கு ஒரு சிக்ஸ் அடித்தார். கே எல் ராகுலும் விளாசிக் கொண்டிருந்தார். அவர் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டம் முடிந்து விட்டது. கடைசியாக ஒரு சிக்ஸ் அடித்து இந்திய அணிக்கு தேவையான 200 ரன்களை எளிதாக பெற்று கொடுத்தார்.

இதன் மூலம் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது .உலகக்கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்திலேயே வலுவான ஆஸ்திரேலிய அணியை இந்தியா வென்று இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. இந்திய அணியின் வெற்றி கணக்கு இதே போல் தொடர்ந்து இருக்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

Tags:    

Similar News