உலக கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி பெற்று அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.
13ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து நியூசிலாந்து உள்பட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த போட்டியானது கடந்த ஐந்தாம் தேதி தொடங்கியது .
ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மற்ற அணியுடன் மோத வேண்டும் என்பதால் ஒவ்வொரு அணியும் 9 அணிகளுடன் மோதி அதில் அதிக புள்ளிகள் பெறும் ௪ அணிகள் அரையிறுதி போட்டியில் மோதும்.அரை இறுதி போட்டியில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
அந்த வகையில் இந்திய அணியானது இதுவரை தான் பங்கேற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அதிக புள்ளிகளுடன் ரன் ரேட்டுடன் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணி உள்ளது. மூன்றாவது இடத்தில் மிகவும் வலுவான தென்னாப்பிரிக்க அணி இருந்தது.
இந்நிலையில் இன்று மலை நகரமான தர்மசாலாவில் லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மூன்றாவது இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா அணியும் கத்து குட்டி அணி என வர்ணிக்கப்படும் நெதர்லாந்து அணியும் மோதின. நெதர்லாந்து அணி வீரர்கள் முதலில் பந்தடிக்க தொடங்கினார்கள். அப்போது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக சிறிது நேரம் போட்டி தடைபட்டது.
இதனைத் தொடர்ந்து 43 ஓவர்கள் என்ற அடிப்படையில் போட்டியை தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் முதலில் பந்தடித்த நெதர்லாந்து 245 ரன்கள் எடுத்தது. எனவே 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தென்னாப்பிரிக்கா அணி வீரர்களுக்கு ஆரம்பம் முதலே நெதர்லாந்து அணி வீரர்கள் அதிர்ச்சி வைத்தியம் அளிக்க தொடங்கினார்கள்.
இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா அணியினர் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தனர். 50 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை பரிதாபமாக இழந்து தவித்து நின்றனர். தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் மில்லர் வந்து அணியை சரிவில் இருந்து ஓரளவு நிலை நிறுத்த முயன்றார். ஆனால் அவராலும் முடியவில்லை 43 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். இறுதியாக தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன் காரணமாக நெதர்லாந்து 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நெதர்லாந்து அணி இதுவரை உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற்றது இல்லை. வலுவான தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியதன் மூலம் அந்த அணி உலக கோப்பை வரலாற்றில் முதல் வெற்றியை ருசித்து உள்ளது. இந்த வெற்றியின் காரணமாக தென்னாப்பிரிக்கா அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.