உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்து பாகிஸ்தான் தோல்வியை தழுவியது.;
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை, வங்காளதேசம், நியூசிலாந்து உள்பட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதில் முதல் நான்கு இடங்களை பெறும் அணிகள் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
அரை இறுதி போட்டியில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அந்த வகையில் இதுவரை 17 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த நிலையில் 18 வது லீக் போட்டி இன்று கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முன்னாள் சாம்பியன்களான ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தான் அணியும் மோதின.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல ரன் சேர்த்தனர். அந்த அணியின் வார்னர் 157 ரன்கள் எடுத்தார். இறுதியாக ஆஸ்திரேலியா அணி 367 ரன்கள் குவித்தது. 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பௌண்டரி, சிக்ஸர்கள் அடித்து ரன்களை குவித்தார்கள். இதன் காரணமாக 134 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி இருந்தனர். ஆனால் அதன் பின்னர் அவர்களுக்கு சரிவு தொடங்கியது. இந்த சரிவை அவர்களால் ஈடுகட்ட முடியவில்லை. இறுதியாக 45 .3 ஓவர்களில் பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.