உலக கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.;
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியாவில் உலகக்கோப்பை திருவிழா போட்டி கடந்த ஐந்தாம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா. இங்கிலாந்து. பாகிஸ்தான். வங்காளதேசம், ஆஸ்திரேலியா, இலங்கை ,நியூசிலாந்து, நெதர்லாந்து உள்பட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதில் அதிக புள்ளிகள் எடுக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும். அரை இறுதி போட்டியில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதி போட்டியில் விளையாடும்.
அந்த வகையில் 21வது லீக் போட்டி தர்மசாலாவில் இன்று பகல் இரவு ஆட்டமாக தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியினர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தனர். நியூசிலாந்து அணியினர் முதல் பந்திலேயே ஒரு விக்கெட்டை இழந்தார்கள். முதல் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டு விக்கெட் பறிபோனது. அதனைத் தொடர்ந்து வந்த மிட்சலும் அவருடன் ஜோடி சேர்ந்த இந்திய வம்சாவளி வீரர் ரச்சின் ரவீந்திராவும் நங்கூரம் போட்டு நின்று விட்டனர்.
ரவீந்திரா 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா கேட்சை தவறவிட்டார். அதேபோல பும்ராவும் ஒரு கேட்சை தவறவிட்டார். இதன் காரணமாக அவர்களது ரன்கள் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஆனால் அதன் பின்னர் வந்த வீரர்கள் மளமளவென சரிந்தனர் இதன் காரணமாக நியூசிலாந்து அணி 273 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக மிட்சல் 130 ரன்கள் வைத்திருந்தார். அந்த வகையில் 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையை நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு வழங்கியது.
இதனை தொடர்ந்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பந்தடிக்க தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மாவும், அதிரடி ஆட்டக்காரர் சுப்மன் கில்லும் களம் இறங்கினார்கள். இந்த ஜோடியினர் நன்றாக பார்ட்னர்ஷிப் சேர்ந்து நியூசிலாந்து அணி வீரர்களின் பந்துகளை எல்லாம் சிக்சர், பவுண்டரி என அடித்து துவம்சம் செய்தனர். ஆனால் நீண்ட நேரம் அவர்களால் நீடிக்க முடியவில்லை. நியூசிலாந்து வீரரின் வேகப்பந்தில் முதலில் கேப்டன் ரோஹித் சர்மா கிளீன் போல்ட் ஆனார். அதைத் தொடர்ந்து சுப்மன் கில்லும் அவுட் ஆனார்.
இதனை தொடர்ந்து இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் கோலியும், கே. எல். ராகுலும் களம் இறங்கினார்கள். இவர்கள் நிதானமாக ஆடி இந்திய அணியின் ரன்களை உயர்த்தி கொண்டே சென்றனர். இடையில் கே எல் ராகுல் ரன் அவுட் ஆக அவருக்கு பதிலாக ஜடேஜா இறங்கினார். ஜடேஜா, கோலி ஜோடி நன்றாக பார்ட்னர்ஷிப் சேர்ந்து ரன்களை குவித்தனர். கோலி 95 ரன்கள் எடுத்திருந்தார் அப்போது அவர் ஒரு சிக்ஸ் அடித்து தனது சதத்தை எடுத்து விடலாம் என்று நினைத்தபோது கேட்ச் அவுட் ஆனார்.
அதன் பின்னர் ஷமி வந்தார். இந்த நேரத்தில் இந்தியா வெற்றி பெற 13 பந்துகளில் நான்கு ரன்கள் தேவை இருந்த போது ஜடேஜா ஒரு பவுண்டரி அடித்து ஆட்டத்தை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அந்த வகையில் இந்திய அணி 48 ஓவர்களில் 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் வலுவான நியூசிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தி பழி தீர்த்து உள்ளது. இந்த 2023 ஆம் ஆண்டு உலககோப்பை போட்டியை பொறுத்தவரை இந்திய அணி இதுவரை 5 போட்டிகளில் பங்கேற்று 5 போட்டிகளிலும் வெற்றிவாகை சூடி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதுவரை முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து அணி இந்தியாவிடம் தோற்றதால் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.