உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அரை இறுதி போட்டிக்குள் நுழையும் தகுதி பெற்றுள்ளது.;
உலகக் கோப்பை கிரிக்கெட் எனப்படும் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா உட்பட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
இதில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களில் அதிக புள்ளிகள் பெறும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும் .அந்த வகையில் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா இதுவரை பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அதிக புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் 29 ஆவது லீக் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று பகல் இரவு ஆட்டமாக தொடங்கியது. இந்த போட்டியில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்தும் ,முன்னாள் சாம்பியன் இந்திய அணியும் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த வகையில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவும் ,கில்லும் களம் இறங்கினார்கள். இந்த ஜோடியினர் சேர்ந்து விளையாடி ரன்களை எடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த ஜோடி அதிக நேரம் நீடிக்க வில்லை. கில் கிளீன் போல்ட் ஆகி தனது விக்கெட்டை இழந்தார்.
அதனை தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினார். அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கோலி இந்த ஆட்டத்தில் ஒரு ரன்கூட எடுக்காமல் முட்டையில் வெளியேறியது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் வந்த ஸ்ரேயஸ் அய்யரும் சோபிக்கவில்லை. குறைந்த ரன்களிலேயே அவுட் ஆனார்.ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா ரன்களை குவிக்கும் நோக்கத்தில் கவனமாக ஆடிக் கொண்டு இருந்தார். அவராலும் அதிக நேரம் தாக்குபிடிக்க முடியவில்லை 87 ரன்களில் அவுட் ஆனார்.
இதனைத் தொடர்ந்து கே.எல். ராகுல் களமிறங்கினார் கே எல் ராகுல், சூர்ய குமார் யாதவும் ரன்களை எடுத்தனர். விக்கெட்டுகள் ஒவ்வொன்றாக விழுந்து கொண்டு இருந்தாலும் மிடில் மற்றும் இறுதியாக இறங்கிய வீரர்களின் கவனமான ஆட்டத்தால் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்திருந்தது .
230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சோபிக்க வில்லை. இதனால் 30 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டை பறி கொடுத்தனர். கேப்டன் பட்லர் கூட அதிக ரன் எடுக்க முடியாமல் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியாக இங்கிலாந்து அணி 34.5 ஓவர்களில் அனைத்து விக்டெ்டுகளையும் இழந்து 129 ரன்களை மட்டும் எடுத்தது.
இதன் காரணமாக இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தான் பங்கேற்ற ஆறாவது லீக் போட்டியிலும் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்குள் நுழையும் பிரகாசமான வாய்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளிகள் பட்டியலிலும் 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.