சென்னை அணிக்கு 5வது ஐபிஎல் கோப்பை! குஜராத்தை வீழ்த்தி அசத்தல்!
ஐந்தாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.;
ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை தடைபட்டதால் ரிசர்வ் தினமான திங்கள்கிழமை இரவு துவங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து வீச்சைத் தேர்வு செய்ய, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
மழைக்கு வாய்ப்பு இருப்பதனால் இரண்டாவது பேட் செய்வது சாதகமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சஹா மற்றும் கில் இருவரும் களம் புகுந்தனர்.
முதல் இரண்டு ஓவர்களில் குஜராத் அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அந்தநேரத்தில் அழகாக லட்டு மாதிரி வந்த கேட்சை தீபக் சாஹர் கோட்டை விட, அடுத்த ஓவரிலிருந்து கில் அடித்து நொறுக்கத் துவங்கினார். அவரைத் தொடர்ந்து சஹாவும் அதிரடி காட்டத் துவங்கினார்.
இவர்கள் பெரிய ஸ்கோர் அடிக்காவிட்டாலும் தமிழக வீரர் சாய் சுதர்ஷன் அதிரடியை கட்டவிழ்த்து விட்டார். சென்னை பவுலர்களை முக்கியமாக பதிரனா ஓவரையே வெளுத்து தான் யாருக்கும் பயந்தவனல்ல என்று அதிரடி காட்டினார்.
சாய் சுதர்ஷன் 47 பந்துகளில் 96 ரன்களும் விருதிமான் சஹா 39 பந்துகளில் 54 ரன்களும் சுப்மன் கில் 20 பந்துகளில் 39 ரன்களும் எடுத்திருந்தனர்.
சென்னை அணி தரப்பில் பதிரனா 4 ஓவர்களில் ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார். ஜடேஜா, சாஹர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. முதலில் 215 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் 1 ஓவர் முடிவதற்குள் மழை வந்தது. இதனால் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
துவக்கம் முதலே அதிரடியைக் காட்டிய சென்னை அணி வீரர்கள் பவுண்டரிகளையும் சில சிக்ஸர்களையும் விளாசினர். 16 பந்துகளைச் சந்தித்து 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ருத்துராஜ் கெய்க்வாட்டும், 25 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டெவான் கான்வேயும் அவுட் ஆகி வெளியேறினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஷிவம் துபே, அஜிங்யா ரஹானே இருவரும் நல்ல ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இருவரும் தலா 2 சிக்ஸர்களை அடித்தனர். ரஹானோ 13 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆக அவருக்கு பிறகு வந்த அம்பத்தி ராயுடு 8 பந்துகளைச் சந்தித்து 2 சிக்ஸர்களையும் 1 பவுண்டரியும் விளாசி 19 ரன்களில் நடையைக் கட்டினார். தோனி டக்அவுட் ஆனார். அதன் பிறகு கடைசி நேரத்தில் களமிறங்கினார் ஜடேஜா.
கடைசி ஓவரை மோகித் சர்மா வீச ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 13வது ஓவர்களிலேயே சென்னை அணியின் வெற்றி வாய்ப்பு மங்கிக்கொண்டே இருந்தது. அந்த ஓவரையும் மோகித் சர்மாதான் வீசியிருந்தார்.
அம்பத்தி ராயுடு 6,4,6 என விளாச, அடுத்தடுத்து அவரையும் தோனியையும் விக்கெட் எடுத்து சென்னை அணி ரசிகர்களின் மனதில் பயத்தை ஏற்படுத்தினார். கடைசி ஓவரிலும் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மோகித் சர்மா முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டபோது சென்னை அணியின் வெற்றி கைக்கெட்டும் தொலைவில் இருப்பது ஒருபுறமும், மோகித் சர்மா மறுபுறமும் இருந்தது திக் திக் நிமிடங்களாக இருந்தது.
5வது பந்தை மோகித் வீச அதனை சிக்ஸருக்கு பறக்க விட்டார் ஜடேஜா. அடுத்ததாக கடைசி பந்திலும் அழகாக தட்டி விட்டு பவுண்டரிக்கு அனுப்பி சென்னை அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.