ஆசிய விளையாட்டு போட்டி:வெண்கலம் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை
ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் மகளிர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் தமிழ்நாட்டு வீராங்கனை வித்யா வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார்.;
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய விளையாட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். தற்போது 19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த போட்டி தொடரின் 11வது நாளான இன்று 400 மீட்டர் மகளிர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் தமிழ்நாட்டு வீராங்கனை வெண்கலம் பதக்கம் வென்றார். 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் 55.68 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வீராங்கனை வித்யா அசத்தினார்.
இதன் மூலம் பெண்களுக்கான 400மீ தடை தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு தடகளப் போட்டியில் மற்றொரு பதக்கம் கிடைத்தது.
வெண்கலப் பதக்கம் வென்ற வித்யாவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை சகோதரி வித்யா ராமராஜ் அவர்களுக்கு, தமிழ்நாடு பாஜக சார்பாக மனம் நிறைந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரி வித்யா ராமராஜ், பாரதத்தின் தங்க மங்கை, பி.டி.உஷா அவர்களின் 39 ஆண்டு கால தேசியச் சாதனையை சமன்செய்து, இறுதிப் போட்டிக்கு நேரடித் தகுதி பெற்றிருக்கிறார் என்பது மிகவும் சிறப்பு. சகோதரி வித்யா ராமராஜ், மென்மேலும் பல சாதனைகள் படைத்து, தேசத்தைப் பெருமைப்படுத்த மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது. 800 மீட்டர் ஓட்டத்தில் பந்தய தூரத்தை கடந்து 2-ம் இடம் பிடித்த இந்தியாவின் முகமது அஃப்சல் வெள்ளி வென்றுள்ளார்.