ஆசிய சாம்பியன்ஷிப் வலுதுாக்கும் போட்டி: தங்கம் வென்ற அவினாசி வீரர்
ஆசிய சாம்பியன்ஷிப் வலுதுாக்கும் போட்டியில், அவினாசி வீரர் தங்கப்பதக்கம் வென்று, மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.;
திருப்பூர் மாவட்டம், அவினாசி காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன்; வலுதுாக்கும் பயிற்சியாளர். இவது மகன் பிரபு, 23. கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் படிக்கிறார். வலுதுாக்கும் வீரரான இவர், துருக்கி - இஸ்தான்புல் நகரில் நடந்த, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று, 74 கிலோ எடைப்பிரிவில், 727.50 கிலோ எடை துாக்கி தங்கம் வென்றார்.
கடந்த, 2015ம் ஆண்டு வலுதுாக்கும் விளையாட்டில் பயிற்சி பெற துவங்கிய பிரபு, 2016, 2017 மற்றும், 2019ம் ஆண்டுகளில் பாரதியார் பல்கலை கழக அளவில் நடந்த வலுதுாக்கும் போட்டியில், தங்கப்பதக்கம் வென்றார். கடந்த, 2019ம் ஆண்டு, தேசிய அளவிலான ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கப்பதக்கம் தக்க வைத்தார்.
கடந்த, 2019-2020ல், இந்திய பல்கலை கழக அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார். 2019, 2020, 2021ம் ஆண்டு மாநில அளவிலான, ஜூனியர் பிரிவு வலுதுாக்கும் போட்டியில், தங்கம் வென்றார். அதே ஆண்டு, தேசிய அளவிலான சீனியர் பிரிவு போட்டியில் வெள்ளி வென்றார். தங்கம் வென்ற பிரபுவை, பலரும் பாராட்டி வருகின்றனர்.