நியூஸிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி..
நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி இன்று நடைபெற்ற 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தியது.;
ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியதால் இந்திய அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து அணியில் உள்ள மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, நியூஸிலாந்தில் மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி விளையாடுவதற்காக தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இளம் வீரர்களான இசான் கிஸன், ஸ்ரேயாஸ் அய்யர், தீபர் ஹூடா, வாசிங்டன் சுந்தர், முகமது சிராஜ் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 18 ஆம் தேதி வெலிங்டனில் நடைபெறுவதாக இருந்த இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் 20 ஓவர் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இரண்டாவது 20 ஓவர் போட்டி இன்று மவுண்ட் மவுங்கானுய் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் இந்திய அணியை முதலிட் பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டார்.
தொடக்க வீரர்களாக இசான் கிஸனும், ரிஷப் பந்தும் களம் இறங்கினர். அடித்து ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 6 ரன்கள் எடுத்த நிலையில் பெர்குசன் வீசிய பந்தில் டீம் சௌதியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பிறகு களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ் நியூஸிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்தார்.
360 டிகிரி வீரர் என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி, கடைசி வரை களத்தில் நின்று 51 பந்துகளில் 111 ரன்கள் எடுத்தார். அவர், 7 சிக்ஸ் மற்றும் 11 பவுண்ட்ரிகளை விளாசினார். இசான் கிஸன் 36 ரன்களிலும், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது.
அதன் பிறகு களம் இறங்கிய நியூஸிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளித்தது. அந்த அணியின் வீரர் பின் ஆலன் ரன் ஏதும் எடுக்காமல் புவனேஸ்குமார் பந்தில் ஆவுட் ஆனார். கன்வே 25 ரன்களிலும், பிலிப்ஸ் 12 ரன்களிலும், மிட்சேல் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் கேன் வில்லியம்சன் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 52 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து முகமது சிராஜ் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியே ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில் தீபர் ஹூடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால், இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி 1-0 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் உள்ளது. மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேப்பியர் நகரில் வருகிற 22 ஆம் தேதி நடைபெறுகிறது.