உயிரில் மறைந்து உணர்வில் நிறைந்த...!
கண்களுக்கு புலப்படவில்லை என்பதற்காக காற்று இல்லை என்றாகி விடுமா?;
உணர்கிறோம், சுவாசிக்கிறோம்.....அதனால் உயிர் வாழ்கிறோம். இதைப் போலவே எள்ளினுள் எண்ணை மறைந்திருப்பதைப் போல, கரும்பினில் சுவை உறைந்திருப்பதைப் போல, மலரில் மணம் நிறைந்திருப்பதைப் போல நம்மில் ஆன்மசக்தியாய் இறைவன் மிளிர்ந்திருக்கிறான்.
எள் என்பது புறப்பொருள் எண்ணெய் என்பது அகப்பொருள் கண்ணுக்கு தெரியும் எள்ளில் நிறைந்திருக்கும் எண்ணை கண்ணுக்கு தெரிவதில்லை. இப்படியே கரும்பிலும், மலரிலும் ஏன் மனிதனிலும் அகப் பொருளாய் மறைந்திருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். அகப்பொருள் என்ற ஒன்றுக்காகத்தான் புறப்பொருள் அமைகிறது.
நாம் எள்ளில் இருந்து எண்ணெய் எடுக்கும் போதும், பூவின் வாசத்தை நுகரும் போதும், கரும்பை உண்ணும் போதும் அதில் உள்ளவற்றை உணரமுடிகிறது. அவற்றை ஒப்புக்கொள்ளவும் முடியும். ஒரு முறை உணர்ந்த பின் கரும்பு இனிப்பு சுவை உள்ளது என்றும், மலர் வாசம் வீசும் என்றும் யாரும் சொன்னால் மறுப்பதில்லை. ஆனால் மனித உடலில் ஆன்மாவாய் இறைவன் உறைந்துள்ளான் என்றால் நம்பத்தான் யாருமில்லை. இந்த உண்மையை உணர்ந்து நாங்கள் கடவுளை அறிவது எப்போது என்று கேட்கிறார் பத்திரகிரியார்.
"எள்ளும் கரும்பும் ஏழு மலரும் காயமும் போல்
உள்ளும் புறமும் நின்றது
உற்றறிவதெக்காலம்?" என்கிறார்.
இதையே சிவவாக்கியாரும், "எங்கும் உள்ள ஈசன் எம்முடல் புகுந்த பின் பங்கு கூறு பேசுவார் பாடு சென்றே அனுகிளார்" என்று சொல்கிறார்.