பக்தி என்றால் என்ன? பக்தியின் நோக்கம் என்ன?
பரமாத்மாவாகிய கடவுளின் மீது ஏற்படும் நாட்டமே பக்தி எனப்படுகிறது.;
இல்வாழ்வில் உள்ளவர்களின் மனதை புலன் மயக்கங்களில் இருந்து விடுவித்து மேன்மையடையச் செய்வதே பக்தியின் நோக்கமாகும். பண்டைய காலங்களில் ப்ரம்மச்சரியம், கிரஹஸ்தம் ஆகிய இரண்டு நிலைகளிலும் பக்தியானது நம்பிக்கையோடு கூடிய ஆரம்ப நிலைப் பயிற்சியாகத்தான் விளங்கியது.
வானப்பிரஸ்தம் என்ற ஆசிரமத்தில் நுழையும் போதுதான் அது தீவிரமடைகிறது. அப்போது கிரியையும் வளர்கிறது. அதாவது மலர் பறித்தல், மாலை கட்டுதல், பூஜை முறைகளைக் கையாளுதல், இறை அடியார்களுக்கு தொண்டு செய்தல் போன்ற கிரியைகள். இத்தகைய சரியை, கிரியை வழிகளில் சென்று பாமரர்களும் பயனடையும் பொருட்டு ஆலயங்கள் அமைக்கப்பட்டன. ஆலயம் என்பது ஆன்மாவை பதியாகிய இறைவனோடு லயமாக்குகிற புனிதமான இடம் என்பது பொருள்.
கோ என்றால் அரசன். அதாவது உலகுக்கே அரசனாகிய இறைவன் வாழும் வீடு, அதுவே கோயில். எனவே தான் உலகிலும், உடலிலும் உள்ள தத்துவங்களை விளக்கும் விதமாக ஆலயங்களும், அதிலமைந்துள்ள மூர்த்தங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
எனவேதான் நம் முன்னோர்கள் ஆலயங்களை அமைப்பதற்கென்று சில ஆகமங்களை உண்டாக்கி வைத்தார்கள். அத்தகைய ஆலயங்களில் சென்று வழிபடுவதற்கும் கூட சில விதிமுறைகள் காணப்படுவது எதற்காகவென்றால், ஆலய வழிபாட்டின் மூலம் மனமானது லயப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.
ஆனால், இன்றைய நிலையோ வேறு விதமாக இருக்கிறது. ஏதோ கோயிலுக்கு போக வேண்டுமே என்ற நிர்பந்தம் இருப்பதாகக் கற்பித்துக் கொண்டு போகிறார்கள். பல ஊர் கதைகளைப் பேசிக் கொண்டு வலம் வருகிறார்கள். உட்காராமல் போனால் சனீஸ்வர பகவானும் அவர்களுடனேயே வீட்டுக்கு வந்து விடுவார் என்று சொல்லி கொஞ்ச நேரம் அமர்ந்து விட்டு போகிறார்கள்.
இதனால் யாதொரு பயனுமில்லை. உட்காருவது என்றால் தியானத்தில் அமர வேண்டும் என்பதே கருத்து. மன ஒருமைப்பாடும், ஆன்ம நேயமும், எல்லாம் இறையாற்றலின் சொரூபமே என்ற பரந்த நோக்கும் வளர வேண்டும் என்தற்காகவே ஆலய வழிபாடு அமைந்துள்ளது. மனமானது சிதறலடையாது இறைவனின் பால் செலுத்தப்பட வேண்டும் என்பதே நோக்கம்.
அதுவே பயிற்சி. மனம், மொழி, மெய் ஆகிய திரிகரண சுத்தியுடன் தான் ஆலயங்களுக்குள் போக வேண்டும் என்பது கோட்பாடு. இறை சிந்தனையல்லாது வேறு எந்த உலக விவகாரங்களும் மனதில் இருக்கக் கூடாது என்பது விதி.
நான் என்ற அஹங்கார எண்ணத்தை கொடிமரத்திற்கு முன் உள்ள பலிபீடத்தில் பலியிட்டு விழுந்து வணங்கி விட்டே உள்ளே செல்ல வேண்டும். கூச்சலும், கோஷங்களும் உண்மையான வழிபாடு ஆகாது. அமைதியும், சாந்தமும் கொண்ட மனதோடு தான் ஆலய வழிபாடு மேற்கொள்ள வேண்டும். பல மகான்களும், ஞானிகளும் ஆழ்ந்து எண்ணிய ஆழமான, உயர்ந்த எண்ணங்கள் நிரம்பிய இடம் ஆலயமாகும். எனவே வழிபாடு முடிந்தவுடன் சிறிது நேரம் தியானம் செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
அவ்வாறு தியானிப்பதன் மூலம் அத்தகைய உயர்ந்த எண்ணங்களும், நோக்கங்களும் தியானிப்பவர்கள் உள்ளங்களிலும் பிரதிபலிக்கும். இதுவே ஆலய வழிபாடு செய்பவர்கள் பெறும் பெரிய பேறாகும். இத்தகைய மனப்பான்மையுடன் மக்கள் சென்று வழிபட வழிபட ஆலயத்தின் சக்தியானது இன்னும் அதிகமாகும்.
ஆலயத்திலிருந்து சக்தியைப் பெறுவதோடு ஆலயத்தின் சக்தியையும் பெருக்கும் சேவையை நாம் செய்கிறோம். ஆலய வழிபாட்டின் ஒப்பற்ற பயன் இதுவேயாகும். அன்புடனும், ஒருமனதுடனும் சேவிப்பவர்களை ஆண்டவன் நல்வழிப்படுத்துவதோடு முடிவில் தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்.