Virinjipuram-மாற்றம் காட்டும் விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர்..!
1300 ஆண்டுகள் பழைமையான ஆலயங்களில் ஒன்றாக வேலூர் மார்கபந்தீஸ்வரர் கோவில் விளங்குகிறது. குழந்தை வரம் தரும் கோவிலாக நம்பிக்கை பெற்றுள்ளது.;
Virinjipuram
விரிஞ்சிபுரம்
வேலுர் மாவட்டத்தில் மாநகருக்கு மேற்கே சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் விரிஞ்சிபுரம் அமைந்துள்ளது. இது நாட்டின் மிகப் பழைய திருத்தலத்தைக் கொண்ட பகுதியாக அறியப்படுகிறது. சிவ ரகசியம், பிரம்மாண்ட புராணம், காஞ்சீ புராணம், காளத்தி மான்மியம், அருணகிரி புராணம் ஆகிய நூல்களில் இந்தத் திருத்தலம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்க்கபந்தீஸ்வரர் கோவில் விரிஞ்சிபுரத்திற்கே தொன்மைமிகு அடையாளமாக திகழ்வது இங்கு அமைந்துள்ள மார்க்கபந்தீஸ்வரர் கோவில் தான். இந்தத் திருத்தலத்தில் ஸ்ரீ மரகதாம்பிகை அம்மையாரும், மார்க்கபந்தீருவரராச சிவபெருமானும் அருள்பாலிக்கின்றனர். நாட்டில் சிறந்து விளங்கும் 1008 சிவ தலங்களில், அனைத்து அம்சங்களையும் பெற்ற சிறப்புத் தலம் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில்.
Virinjipuram
ஒரே உடலில் 1008 லிங்கம்
ஒரு பெரிய லிங்கத்தின் உடலில் 1008 சிவலிங்கம் இந்தத் திருத்தலத்தில் அமைந்திருப்பது கோவிலின் சிறப்புகளில் ஒன்றாகும். மூலவர் இத்தலத்தில் சுயம்பு லிங்கமாகவும் சற்று சாய்ந்த கோனத்திலும் காட்சியளிக்கிறார். சிவலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதற்கு காரணமாக கதைகளும் உண்டு. மேலும், இச்சிலைகளின் வடிவமைப்பும், கல்வெட்டுக் குறிப்புகளும் கோவிலின் உள்ளே சோழர்களால் மறைக்கப்பட்ட புதையல் இருப்பதாக நம்பப்படுகிறது.
விரிஞ்சிபுகழ் பாடும் கல்வெட்டுகள்
விரிஞ்சிபுரத்தைக் குறித்து 18 கல்வெட்டுகள் தென்னிந்தியக் கல்வெட்டுப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் விஜய நகர மன்னர்கள், பல்லவ மன்னர், சோழ மன்னர், சம்புவராய மன்னர் உள்ளிட்டோர் இத்தல இறைவனை வழிபட்டது குறித்த குறிப்பு கல்வெட்டுகளில் மிகத் தெளிவாகத் தெரிகின்றன. விரிஞ்சிபுரத்தின் தொன்மையையும், சிறப்பையும் இந்தக் கல்வெட்டுகள் விளக்குகின்றன.
பிரம்மாவிற்காக தலைகுனிந்த சிவன்
திருவண்ணாமலையில் ஜோதியாய் அருளிய சிவபெருமானின் திருவடியைக் காண முடியாத பிரம்மா, விரிஞ்சிபுரத்தில் மனிதப் பிறவி எடுத்து மார்க்கபந்தீஸ்வரர் திருமுடியைத் தரிசித்தார். அவருக்காக சிவபெருமானே தலையை வளைத்து அருளிய பெருமை இத்தலத்திற்கு உண்டு.
கட்டிடக்கலை நயம்
மார்க்கபந்தீஸ்வரர் கோவில் சோழர்களின் கட்டிடக் கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் உள்ளது. இக்கோவிலின் வடக்கு கோபுர வாயில் வருடத்தின் அனைத்து நாட்களுமே திறந்த நிலையில் இருக்கும். இதன் வழியாகத்தான் தேவர்கள் அன்றாடம் வந்து இறைவனை வழிபடுவதாக நம்பப்படுகிறது. இத்தலத்தில் மூன்று பைரவர்கள் அருள் பாலிக்கின்றனர். கோவிலின் ஒவ்வொரு சுவர்களிலும், தூண்களிலும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்திருப்பதை காணலாம்.
Virinjipuram
தீர்த்தகுள மகிமை இத்தலத்து சிம்ம தீர்த்த குளம் தனிச்சிறப்புடன் விளங்குகிறது. கோவிலின் முதல் பிராகாரத்தில் தென் கிழக்காக அமைந்துள்ள இது ஒருசிங்கத்தின் வாய் வழியாக நுழைந்து செல்லும் முறையில் நடபாவிக் கிணறாக அமைந்துள்ளது. குழந்தைகள் இன்றி தவிப்போர் இத்தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை வேண்டினால் குறிப்பிட்ட காலத்திலேயே குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இவைத் தவிர சூலி தீர்த்தம், சோம தீர்த்தம் என வேறு இரு தீர்த்தக்குளங்களும் இங்கே உள்ளது குறிப்பிடத்தக்கது.
Virinjipuram
புராண வரலாறு
பண்டைக் காலத்தில் விரிஞ்சிபுரம் வழித்துணை நாதர் ஆலயமானது ‘நைமி சாரண்யம்’ என்றழைக்கப் பெற்ற முனிவர்கள் கூடும் புண்ணியத்தலமாக விளங்கியது. சிவபெருமான் கௌரியிடம் கறுப்பு நிறமாய் இருப்பதால் ‘ஹே சங்கரீ’ என அழைக்க விளையாட்டாகக் கேட்டார் எனவும் இதனால் கோபமுற்ற கௌரி பாலாற்றின் வடகரையில் பொற்பங்காட்டினுள் ஜந்து வேள்விக் குண்டங்களை அமைத்து அதன் நடுவே ஒற்றைக்காலில் நின்று தவமிருந்தார் என்பது வரலாறாகக் கூறப்படுகின்றது. அத்தவத்தின்போது சிம்மகுளத்தில் நீராடி தனது கருமேனி நீங்கி பொன்மேனி கொண்ட மரகதவல்லியாக மார்க்கசகாயரின் இடப்பாகத்தில் இடம் கொண்டாள் என்பதும் வரலாறு.
இறைவன், இறைவியர்
இக்கோயிலில் உள்ள இறைவன் மார்க்கபந்தீஸ்வரர் ஆவார். இறைவி மரகதாம்பிகை ஆவார். மூலவரான மார்க்கபந்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக வடகிழக்கு திசையில் சிறிது சாய்ந்த நிலையில் காணப்படுகிறார். மேலும் இக்கோயிலில் விநாயகர், முருகனுடன் வள்ளி,தெய்வானை, தட்சணாமூர்த்தி , பைரவர் , விஷ்ணு துர்க்கை, சரஸ்வதி, பிரம்மா, 63 நாயன்மார்கள் ஆகியோரும் உள்ளனர்.
பூஜைகள்
தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும். பிரதோஷம் வழிபாடு, சிவராத்திரி , வைகாசி விசாகம், சித்ரா பௌர்ணமி, தை அமாவாசை போன்ற நாட்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
Virinjipuram
நம்பிக்கைகள்
கோயிலின் உட்பிரகாரத்தில் தலமரமாக பனைமரம் உள்ளது. இது ஒரு அதிசய பனை மரமாக உள்ளது. அதாவது இந்த பனைமரத்தில் காய்க்கும் பனை காய்கள் கருப்பாகக் காய்க்கின்றன. மறு வருடம் காய்க்கும் பனை காய்கள் வெள்ளையாகக் காய்க்கின்றன. மூலவரின் மீது பங்குனி மாதத்தில் சூரியக் கதிர்கள் விழுகின்றன.
சிம்மக்குள நீராடல் – பிரம்மாவிற்குச் சாப விமோசனம் கிடைத்த கார்த்திகை மாதம் இறுதி ஞாயிறு மகளிர் ஈர ஆடையுடன் நீராடியபின் விரிஞ்சிபுரம் வழித்துணை நாதர் ஆலயத்தில் அமைந்துள்ள மகா மண்டபத்தில் உறங்குவர். அன்றிரவு உறங்குபவர்கள் கனவில் பூக்கள், பழங்கள், புத்தாடைகள் ஆகியவற்றினைத் தாங்கியபடி முதியவர் கனவில் காட்சி தந்தால் அப்பெண்கள் விரைவில் கருத்தரிக்கும் பாக்கியத்தினை அடைவர் என்பது தொன்நம்பிக்கை. இச்சிம்மக்குளத் தீர்த்தத்தின் பீஜாட்சர யந்திரம் ஆதி சங்கரரால் ஸ்தாபனம் செய்யப்பட்டது.
நேரம் காட்டும் கல்
கோயிலின் உள்ளே தென்புறத்தில், “நேரம் காட்டும் கல்” இருக்கிறது. அர்த்த சந்திர வடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் அந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரம் என்று அறிந்து கொள்ளலாம்.
கி. பி 15 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் விஜயநகரப் பேரரசு விரிஞ்சிபுரம் பகுதியினை ஆண்டு வந்தது. மணமகன் வீட்டில் இருப்பவர் மணமகள் வீட்டிற்குப் பொன்னை வரதட்சணையாக வழங்கும் முறை இருந்து வந்தது. இத்தகைய முறையில் மாற்றம் வேண்டும் என எண்ணிய மணமகன் வீட்டாரினால் விஜயநகரப் பேரரசிடம் முறையிடப்பெற்றது.
Virinjipuram
கி. பி. 1426 ஆம் ஆண்டுக் கல்வெட்டின் படி ‘பிராமணர்களில் கன்னடியர், தெலுங்கர், தமிழர், இலாலர் முதலானோர் திருமணம் செய்யுமிடத்து கன்னிகாதானம் ஆகச் செய்திட வேண்டும். அப்படிச் செய்யாமல் பொன் வாங்கி பெண் கொடுப்பது, பொன் கொடுத்து திருமணம் செய்வது அரசத் துரோகம் ஆகும்.
மீறுவோர் சாதியிலிருந்து, சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவர்.’ என விஜய நகரப் பேரரசினால் உத்தரவிடப்பட்டது என்பது அக்கல்வெட்டில் உள்ள தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.
Virinjipuram
எப்படிச் செல்லலாம் ?
சென்னை, திருச்சி, திருவண்ணாமலை என சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வேலூர் செல்லும் சாலை போக்குவரத்துக்கு நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. வேலூரில் இருந்து சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 13 கிலோ மீட்டர் பயணித்து அரசமரம் பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் பயணித்தால் பாலாற்றுக் கரையோரம் உள்ள மார்க்கபந்தீஸ்வரர் கோவிலை அடையலாம்.