விஜயதசமி - வெற்றி நம்வசம் இனி! அம்பிகையை துதித்து அருள் பெறுவோம்
இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தொடங்கும் செயல்கள் வெற்றியை தரும்; குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்வும் நடைபெற்று வருகிறது.
இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது. புரட்டாசி அமாவாசை முடிந்த பத்தாம் நாளில் இது கொண்டாடப்படுகிறது. முந்தைய ஒன்பது நாட்களும், நவராத்திரி விழாவாகும்.
விஜயதசமி நாளில் தொடங்கும் செயல்கள் வெற்றியைத் தரும். ஆயுதபூஜையன்று, மாணவர்கள் புத்தகங்கள், நோட்டு, பேனா, பென்சில் போன்றவற்றை வைத்து வணங்குவது வழக்கம். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று எல்லா துறைகளில் இருப்பவர்களும் ஆயுத பூஜை நாளில் கொண்டாடுவர்.
அடுத்த நாளான விஜயதசமி நாளன்று, புதிய செயல்களை தொடங்குவர். இந்த நாளில் ஞானம், வித்தை மற்றும் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்குவதால், வளமும், நலமும் பெற்று சிறந்து விளங்கலாம். இன்றுதான், குழந்தைகளுக்கு வித்யாரம்பம் எனப்படும் கல்வி கற்கும் பணி தொடங்குவர்.
ஏற்கனவே பயின்று வரும் குழந்தைகள், சரஸ்வதி பூஜை அன்று அடுக்கி வைத்த புத்தகங்களை மீண்டும் விஜயதசமி அன்று பூஜித்து நைவேத்தியத்துடன், ஆரத்தி காட்டி, அந்த நாளில் படிக்க தொடங்குவர். அதேபோல் நிறுவனங்களில் புதிய கணக்கு தொடங்குதல், புதிய முயற்சி, ஒப்பந்தம், பேச்சு போன்றவையும் தொடங்குவதுண்டு.
பொதுவாக, விஜயதசமி நாளானது இந்தியா, நேபாளம் மற்றும் வங்காள தேசம் போன்ற நாடுகளில் பல பெயர்களில் கொண்டாடுவதுண்டு. வட இந்தியாவில் இது தசரா (Dussehra) பண்டிகை ஆகும். சீதையை கடத்திய ராவணன், அவரை விடுவிக்க மறுத்தான். கடைசியில் போரில் இராமன், இராவணனை வென்றார். விஜயதசமியன்று அழித்து போரில் வெற்றி பெற்றதால், வட இந்தியாவில் ராம்லீலா என்ற விழாவாக கொண்டாடப்படுகிறது.
விஜய தசமி நன்னாளில் சிவன் கோயில்களில் பரிவேட்டை எனும் உற்சவம் நடைப்பெறுவதுண்டு. இந்த நாளில் வன்னி மரத்தில் இறைவன் அம்பு விடுவது வழக்கம். இத்தகைய சிறப்பு மிக்க நன்னாளில், அம்பிகையை வழங்கி அருளை பெறுவோம்.