25.5.202 இன்று வைகாசி விசாகம் ..
நட்சத்திரங்கள் இருபத்தி ஏழில், சில நட்சத்திரங்கள் இறைவனுக்கு உகந்த நட்சத்திரங்களாகவும், இறைவன் அவதாரம் எடுத்த நட்சத்திரங்களாகவும் கருதப்படுகின்றது. அந்த அடிப்படையில் வைகாசி மாதம் வரும் விசாகம் நட்சத்திரம் வடிவேலனுக்கு உகந்த நட்சத்திரமாக பக்தர்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வேலனை வழிபட்டால் வெற்றிகள் வந்து சேரும். குமரனை வழிபட்டால் குறைகள் அகலும். கார்த்தி கேயனை வழிபட்டால் கவலைகள் பறந்தோடும். கந்தப்பெருமானை வழிபட்டால் கைநிறையப் பொருள் குவியும்.
வைகாசி மாதத்தில் சந்திரன் பவுர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனாலேயே இந்த மாதம் "வைசாக' மாதம் என்றிருந்து பின்னாளில் "வைகாசி' என்றானது. இந்த மாத பவுர்ணமி நாளை "வைகாசி விசாகம்' என்று குறிப்பிடுகிறோம். இந்த நாளில் தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
வைகாசி விசாக நாள் ஒன்றில்தான், தாணு அபர்ணா விசாக அவதாரம் நிகழ்ந்தது என்கிறது சோமாஸ்கந்த தத்துவம் எனும் புராதன நூல். அதாவது, சிவபெருமான் ஓங்கி உயர்ந்து வளர்ந்த மரமாக நிற்க, அம்பிகை பார்வதி அந்த மரத்தில் பற்றிப் படர்ந்த கொடியாகப் பிணைந்திருக்க, அந்த மரத்தின் கீழ் சிறிய கன்றுச் செடியாக ஆறுமுகன் தோன்றினாராம். முதன்முதலாக அமைந்த சோமாஸ்கந்த வடிவம் அதுவே.
ஆழ்வார்களில் தலைமையானவராகப் போற்றப்படும் நம்மாழ்வார், வைகாசி விசாகத் திருநாளில்தான் பிறந்தார். திருவரங்கனே, 'இவர் நம் ஆழ்வார்' என அன்போடு அழைத்தாராம். ஒன்பதாம் நூற்றாண்டில், திருக்குருகூர் என்ற ஆழ்வார் திருநகரியில், பிரமாதி வருடம், வைகாசி மாத விசாக நட்சத்திரத்தில் தோன்றியவர். வைகுண்டத்தின் தலைமைத் தளபதியாகக் கருதப்படும் விஷ்வக்சேனரின் அவதாரமே இவர் என்று கூறுவர்.
பகவான் புத்தர் அவதாரம் செய்தது, ஞானம் பெற்றது, பரிநிர்வாணம் அடைந்தது ஆகியன எல்லாம் வைகாசி விசாக நாட்களில் நிகழ்ந்தன. அதனால்தான் பௌத்தர்கள் வைகாசி விசாக நாளைப் புத்தபூர்ணிமா என்று கொண்டாடுகின்றனர். இது உலகம் முழுவதும் கொண்டாடப்படும் திருநாளாகும்.
அன்னை பராசக்தியை ஞானேஸ்வரியாகப் போற்றுகின்றோம். அவள் வைகாசி விசாக நாளில் ஞானேஸ்வரியாகக் காட்சி தருகின்றாள். சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் அன்னை கற்பகவல்லி, வைகாசி விசாக நாளில் ஞான பரமேஸ்வரியாகக் காட்சி தருகிறாள். அந்நாளில் அவள் இடுப்பில் ஞானவாளுடன் காட்சி தருகிறாள். அது அன்பர்களின் அஞ்ஞானத்தை வேரோடு வெட்டி எறியும் ஞான வாளாகும். இத்தகைய காட்சிவேறெந்தக் கோயிலிலும் காணக்கிடைக்காதது.
தென்சிதைக் காவலனான தர்மதேவனுக்கும் விசாக நட்சத்திரம் உரியது. எனவே அன்றைய தினம் எமதர்மனை மனதார நினைத்து வணங்குவதால், அகால மரணம் வராது; மரணபயம் தீரும் என்கிறன்றன புராணங்கள்.
'மழபாடியுள் மாணிக்கமே' என்று சுந்தரமூர்த்தி நாயனார் போற்றிப் பாடிய திருமழபாடி திருத்தலத்து இறைவன், மார்க்கண்டேய முனிவருக்காக முழுவினை கையில் ஏந்தி திருநடனம் புரிந்த தினம் வைகாசி விசாகம். மழு ஏந்தி ஆடியதால் திருமழுவாடி. அதுவே திருமழபாடி.
அர்ஜூனன், கிருஷ்ணரின் அறிவுரைப்படி சிவபெருமானை வேண்டித் தவமிருந்து பாசுபத அஸ்திரத்தைப் பெற்றதும் வைகாசி விசாக நாளில்தான்.
வைகாசி விசாகத்தன்று திருத்தணியில் வழங்கப்படும் விபூதியும் பாதரேணு எனப்படும் சந்தனமும் தீராத வியாதிகளைத் தீர்க்கும்.
ஆந்திர மாநிலம், சிம்மாசலத்தில் நரசிங்கப் பெருமாளை வைகாசி விசாக நாளில் தரிசனம் செய்வர். இந்நாளில் பெருமாளின் உருவத்தை முழுவதுமாக மறைத்திருக்கும் சந்தனக்காப்பை அகற்றிவிட்டு திருமஞ்சனம் செய்வர். பக்தர்களுக்கும் தரிசனம் கிடைக்கும். மறுநாளே மீண்டும் சந்தனக் காப்பிட்டு விடுவார்கள். மீண்டும் அடுத்த வைகாசி விசாகத் தினத்தன்றுதான் திருமஞ்சன தரிசனம்.
முருகனை வழிபட ஆடிக் கிருத்திகை, பங்குனி உத்திரம் போல வைகாசி விசாகமும் மிகவும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது. வைகாசி விசாக நாளில் முருகனை நினைத்து விரதம் இருந்து வணங்குவது சகலவித சம்பத்துக்களையும் தரும்.
'விசாகம் ஸர்வபூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகா சுதம்
ஸதா பாலம் ஜடாதரம் ஸ்கந்தம் வந்தே சிவாத்மஜம்'
விசாக நடந்சத்திரத்தில் அவதரித்தவரும், சகல உயிர்களுக்கும் தெய்வமாக - தலைவராக இருப்பவரும் கார்த்திகை பெண்களின் பாலரும், எப்போதும் குழந்தை வடிவிலேயே காட்சியளிப்பவரும், இளமையானவரும், ஜடாமகுடம் தரித்தவரும், சிவபெருமானின் மைந்தனும் ஆகிய ஸ்கந்தனை வணங்குகின்றேன் .
என்ற துதியை மனதாரச் சொல்லி, மயில்வாகனனை
போற்றி அபிஷேக, ஆராதனைகள் செய்து சகல சங்கடங்களும் நீக்கி வாழ்வில் வளமும் மகிழ்ச்சியும் பெறுவோமாக .
கலியுகத்தின் கண்ட தெய்வமாக விளங்குபவர் கந்தப்பெருமான். அவரது "வேலை" வணங்குவதே வேலையாக கொள்ள வேண்டிய நாள் விசாகத் திருநாளாகும். அன்றைய தினம் குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவற்றைத் தானமாகக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். எனவே விசாகத் திருநாளில் வேலவனின் சன்னிதி செல்லுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று நிம்மதியைக் காணுங்கள்.
எழுத்தும், ஆக்கமும்
-எஸ்.ஆர்.வி.பாலா