அக்னி ஸ்தலம் குளிர்ந்தது: கிரிவலம் வந்த பக்தர்கள் மனம் நிறைந்தது
அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் விடிய, விடிய ஏராளமானோர் கிரிவலம் சென்றனர்.;
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மதியம் 12.15 மணியளவில் தொடங்கி இன்று (திங்கள்கிழமை) காலை 10.20 மணியளவில் நிறைவடைகிறது. இந்த நிலையில் நேற்று பவுர்ணமி மட்டுமின்றி, வைகாசி மாத பிறப்பு மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கிரிவலம் சென்றனர்.
மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பொது தரிசன வழியில் சாமி தரிசனம் செய்ய சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் ஆனதாக பக்தர்கள் தெரிவித்தனர். வரிசையில் வந்த பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டது. பகலில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
சில இடங்களின் தரையில் சூடு தாங்க முடியாமல் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நிழலை தேடி ஓடி சென்றனர். நேற்று மாலை 4 மணி முதல் திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்யத்துவங்கியது. பின்பு 6 மணிக்கு மேல் பலத்த மழையாக பெய்தது. இன்று காலை விடிய விடிய லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் குளிர்ந்த சாரல் காற்று வீசத்தொடங்கியது. கிரிவலம் வந்த பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்த பஸ்கள், ஈசான்ய மைதானம், அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள நகராட்சி மைதானம், திருக்கோவிலூர் சாலையில் உள்ள மைதானம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக பஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.
கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன்பு பக்தர்கள் கற்பூரம், தீபம் ஏற்றி வழிப்பட்டனர். பக்தர்களின் பாதுகாப்பை கருதி போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.