சோழர் கோவிலில் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய பாண்டிய அரசன்..! தல வரலாறு அறிவோம்..!
Thiruvidaimaruthur Temple History-பூசை விதிகளைத் தேவர்களுக்கு போதிக்கும் பொருட்டு பரமசிவன் தம்மைத்தாமே அர்ச்சித்துக் கொண்டு காட்சியருளிய தலம் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில்.;
Thiruvidaimaruthur Temple History
சோழர் காலத்து கோவில்களில் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில் பிரசித்திப்பெற்ற கோவிலாக விளங்கிவருகிறது. திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோவில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் என மூவரது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இது சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரிக் கரையில் அமைந்துள்ள 30வது சிவத்தலமாகும். இத்தலம் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. கருவூர்த் தேவர், மாணிக்கவாசகர், பட்டினத்தார் ஆகியோரும் இத்தலம் குறித்து பாடியுள்ளனர். இந்த திருத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
தல சிறப்பு
மருத மரத்தைத் தல தல விருட்சமாகக் கொண்டு சிறப்புற விளங்குகின்ற சிவன் கோவில்கள் இந்தியாவில் மூன்று உள்ளன. முதல் தலம் ஆந்திர மாநிலம் கர்நூல் அருகே உள்ள மல்லிகார்ஜுனம் திருக்கோவில். இரண்டாவது தலம் மத்தியார்ஜுனம் எனப்படும் தலம் தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர். மூன்றாவதாக புடார்சுனம் எனப்படுகின்ற தமிழ்நாடு திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் அருகில் உள்ள திருப்புடைமருதூர் ஆகும். இவை முறையே மல்லிகார்ஜுனம், மத்தியார்ஜுனம், புடார்சுனம் எனப்படுகிறது. அதாவது தலைமருது, இடைமருது, கடைமருது என்று புகழப்படுகின்றன.
வரகுண பாண்டியன் பெற்ற பிரம்மஹத்தி தோஷம்
திருவிடைமருதூர் தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் தொடர்புடையாதாகும். இதன் வரலாறு குறித்து அறிவோம்.
ஒருமுறை வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மாலைவேளை வேட்டை முடிந்து அரண்மனைக்கு குதிரையில் திரும்பிக்கொண்டிருந்தான். அரண்மனை திரும்புவதற்குள் இரவு நேரம் தொடங்கிவிட்டது. அவ்வாறு அரசன் வரும்வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துபோனான்.
இச்சம்பவம் அரசன் அறியாமல் நடந்த சம்பவமாக இருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அந்தணனின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது. சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனின் கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார்.
எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு, சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று, அங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தின் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலுக்குள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று அங்கேயே காத்திருந்தன.
ஆனால், திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அரசனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான். இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.
இத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியாகும். இறைவன் மகாலிங்கேஸ்வரர் தன்னைத்தானே அர்ச்சித்துக் கொண்டு பூசை விதிகளை சப்தரிஷிகள் மற்றுமுள்ள முனிவர்களுக்கு போதித்து அருளிய தலம் இந்த திருவிடைமருதூர். மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார் என்பது வரலாறு.
இத்தலத்தில் வீற்றிருக்கும் மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. மூகாம்பிகைக்கு இந்தியாவில் திருவிடைமருதூரிலும், கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூரிலும் மட்டுமே சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
வரகுண பாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய தலமென்பதால் "பிரம்மஹத்தி" தோஷ நிவாரண தலம் இது என்று புகழ் பெற்றுள்ளது. அருள்மிகு மகாலிங்கஸ்வரர் சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார். மகாலிங்கேஸ்வரர் திருத்தலத்தைச் சுற்றி நான்கு வீதிகளிலும் சிவ ஸ்தலங்கள் உள்ளதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் தலவிநாயகர் ஆண்ட விநாயகர். இத்தலத்தில் சுவாமி, அம்பாள் இருவரது சந்நிதிகளும் கிழக்கு நோக்கியவை. 27 நட்சத்திர லிங்கங்கள் இங்கு அமைந்துள்ளன. தமிழ்நாட்டிலே மகாலிங்கேஸ்வரருக்கான திருத்தேர் மூன்றாவது பெரியத் தேர் ஆகும். பட்டினத்தார் மற்றும் பத்திரகிரியார் ஆகியோருக்கு கிழக்கு மற்றும் மேற்கு கோபுர வாசல்களில் சந்நிதி உள்ளன.
காவிரிக் கரையில் உள்ள 6 சிவ ஸ்தலங்கள்
காவிரிக்கரையில் அமைந்துள்ள 6 சிவ ஸ்தலங்கள் காசிக்கு சமமானதாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும். திருவிடைமருதூரில் உள்ள சிவாலயம் சுமார் 1200 வருடங்களுக்கு மேலான பழமைமிகு ஆலயமாகும். மருத மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட மூன்று கோவில்கள் உள்ளன.
வடக்கே ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படும் தலத்தை வடமருதூர் என்றும், தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் புடார்ச்சுனம் என்றழைக்கப்படும் திருப்புடைமருதூரும் உள்ளது. இவ்விரண்டிற்கும் நடுவே கும்பகோணம்- மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் உள்ளது, திருவிடைமருதூர். நெடிதுயர்ந்த கோபுரங்களும் நீண்ட பிரகாரங்களும் உடைய திருவிடைமருதூர் ஆலயம் மத்யார்ஜுனம் என்று அழைக்கப்படுகிறது.
மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் ஆகிய மூன்றின் சிறப்புகளாலேயே ஒரு கோவில் பெருமை பெறுகின்றது. அந்த வகையில், திருவிடைமருதூர் இறைவன் அருள்மிகு மகாலிங்கேசுவரர் சுவாமியின் சிறப்புகள் கணக்கில் அடங்கா. தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மகாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்று பெருமையோடு அழைக்கப்படுகிறது.
இன்றளவும் மழை பெய்யும் அதிசயம்
மேலும் மேற்கே அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்திற்குத் தனிப் பெருமை ஒன்றுண்டு. மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில் இப்பெருமானுக்கு சிறப்பாகப் பூசை வழிபாடுகளைச் செய்து, மேகராகக் குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களைப் பாராயணஞ் செய்வதால் மழை பொழிவது இன்றளவும் நடைபெற்று வரும் அதிசயமாகும்.
பஞ்சகுரோசத்தலங்கள்
திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் (கருப்பூர்) ஆகிய ஐந்து தலங்கள் பஞ்ச குரோசத்தலங்கள் எனப்படுகின்றன. கும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர், இந்த பஞ்சகுரோசத் தலங்களுக்குச் சென்று விதிப்படி நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்ட பிறகே கும்பகோணம், கும்பேஸ்வரர் கோவில் செல்லவேண்டும். வேதங்களுக்கு அங்கமாக பல நூல்கள் அமைந்ததுபோல கும்பகோணத்திற்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்துள்ளன.
தலம் வந்து வழிபட்டோர்
உமா தேவியார், விநாயகர், முருகன், திருமால், இலட்சுமி, காளி, சரஸ்வதி, வேதங்கள், வசிட்டர், உரோமச முனிவர், ஐராவணம், அகத்தியர், சிவவாக்கியர், கபிலர், வரகுண பாண்டியன் ஆகியோர் வழிபட்ட தலம் என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது.
மூகாம்பிகை அம்மனுக்கு தனி சந்நிதி
மூகாம்பிகை அம்மனுக்கு இத்தலத்தில் தனி சந்நிதி இருப்பது மிகச் சிறப்பாக கருதப்படுகிறது. இந்தியாவிலேயே, ஆந்திர மாநிலம் கொல்லூரிலும், தமிழகத்தில் திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகை அம்மனுக்கு தனி சந்நிதியுள்ளது.கும்பகோணத்தின் கும்பேஸ்வரர் கோவில் மேல வீதியில் மூகாம்பிகை கோவில் உள்ளது.
பிற சந்நிதிகள்
திருவிடைமருதூர், மகாலிங்கேசுவரர் கோவிலில் 27 நட்சத்திரங்களுக்கும் 27 லிங்கங்கள் உள்ளன. நட்சத்திர லிங்க சந்நிதியும், பிற கோவில்களிருந்து வேறுபட்டதாக இடம் மாறிய நவக்கிரக விக்கிரகங்கள் உள்ள நவக்கிரக சன்னதியும் அமைந்துள்ளன.
எங்கே உள்ளது ?
தமிழகத்தில் மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில், கும்பகோணத்தில் இருந்து 9 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. சீனியில் இருந்து வருபவர்கள் திருச்சி-தஞ்சாவூர் -கும்பகோணம் செல்லலாம். திருச்சியில் இருந்தே கும்பகோணத்திற்கு பேருந்துகள் உள்ளன. ரயில் மார்க்கமாகவும் கும்பகோணம் செல்லலாம்.
பஞ்சரத தேரோட்டம்
இக்கோவிலில் சுமார் 180 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சரதத் தேரோட்டம் 23ம் தேதி ஜனவரி 2016ம் ஆண்டில் நடைபெற்றது. விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், மகாலிங்கசுவாமி, தேவி, சண்டிகேஸ்வரர் இந்த ஐந்து தேர்களில் எழுந்தருளினர்.
பாவை விளக்கு
தஞ்சாவூரில் அரசுக்கட்டிலை இழந்த அமரசிம்மன் திருவிடைமருதூர் அரண்மனையில் தங்கி வாழ்ந்தார். அவரது மகன் பிரதாபசிம்மனை அவருடைய அம்மான் பெண்ணான அம்முனு அம்மணி விரும்பி, தன் திருமணம் நிறைவேற இக்கோவிலுக்கு லட்ச தீபம் ஏற்றுவதாக வேண்டிக்கொண்டாள். அவருடைய பிரார்த்தனை நிறைவேறிய பின்னர் லட்சத் தீபம் ஏற்றி, அவற்றுள் ஒரு விளக்காக தன்னுடைய உருவத்தையே பாவை விளக்காக்கித் தன்னுடைய சிற்பமே தீபம் ஏந்தும் அளவுக்குச் செய்தாள். 120 செ.மீ. உயரமுள்ள, பித்தளையால் ஆன இந்த பாவை விளக்கு, அழகிய பீடத்தின் மீது உள்ளது. நின்ற நிலையில் அம்முனு அம்மணி தன் இரு கரங்களாலும் விளக்கினை ஏந்தியுள்ளார். அவருடைய தோளில் கிளி ஒன்று அமர்ந்து உள்ளது. இதன் பீடத்தில் அம்முனு அம்மணியின் காதல் காவியம் தமிழ்ப் பொறிப்புகளாக இடம் பெற்றுள்ளது. ஒரு மன்னரின் மனைவியே தீபம் ஏந்திய பாவை விளக்காக இன்றும் நிற்பது வரலாற்றுச் சிறப்புடைய நிகழ்வாகும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2