திருச்சி ரெங்கநாதரின் அதிசயம்... நேரில் நிரூபித்த கடவுளின் மகிமை...!
திருச்சி ரெங்கநாதனின் மகிமையை ஒட்டுமொத்த உலகமும் புரிந்து கொண்ட நாள் ஆயுதபூஜை தினமான கடந்த வெள்ளிக்கிழமை.
தேனிமாவட்டம் சின்னமனுாரை சேர்ந்த ஆன்மீகவாதியும், தேசியவாதியுமான என்.பாஷ்யம் கூறியதாவது:
(இந்த பதிவு சனாதனத்தையும், தெய்வங்களையும் நம்பும் ஆன்மீகவாதிகளுக்கு மட்டுமே)
கடந்த வெள்ளிகிழமை ஆயுதபூஜையன்று மாலை இந்தியாவின் திருச்சிராப்பள்ளி திடீர் கவனம் பெற்றது. காரணம் திருச்சியில் இருந்து ஷார்ஜா நோக்கி கிளம்பிய ஏர் இந்தியா விமானம் சக்கரங்களின் "ஹைட்ராலிக்" பொறிமுறையில் ஏற்பட்ட கோளாறில் சிக்கியது. இதனால் சக்கரங்கள் ஏறி இறங்காது. நிலையினை கணித்த விமானி விமானத்தை தரையிறக்க முற்பட்டார்.
விமான பயண நெறிகளின்படி இம்மாதிரி விவகாரத்தை கையாள பல்வேறு பயிற்சிகள் உண்டு. எல்லா தொழிலிலும் அவசரகால நெறிமுறை உண்டு. விமானங்களுக்கு அது நிறைய உண்டு. என்னதான் விமானம் தரையிறங்கி மறுபடியும் பறக்கும்முன் நிறைய சோதனைகளும், ஆறுமாதத்துக்கு ஒருமுறை முழு பரிசோதனையும் செய்தாலும், எந்த பாகம் எப்போது கோளாறு செய்யும் என்பது கணிக்க முடியாதது.
மனிதன் குறைவுள்ளவன் அவன் செய்யும் எந்திரமும் அப்படியே தான் இருக்கும். இக்கட்டான நேரங்களில் இறைவன் தான் வழிநடத்த வேண்டும். இதனால் இப்படியான சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். திருச்சிக்கு இது புதிது. ஆனால் உலகமெல்லாம் வழக்கமான ஒன்று. ஒட்டுமொத்த இந்தியாவும் தங்களுக்கு வாழ்வியல் உதவிகரமாக இருந்த ஆயுதங்களை வணங்கிக்கொண்டு இருந்த போது தான் திருச்சியில் விமான கோளாறு ஏற்பட்டது.
இம்மாதிரி விமானங்களில் கோளாறு ஏற்படும் நேரங்களில் இரு விஷயம் செய்வார்கள். முதலில் எரிபொருளை கொட்டி விட்டு இறங்குவார்கள். அல்லது எரிபொருள் தீரும் வரை பறந்து விட்டு தரையிறக்குவார்கள். காரணம் நிறைய எரிபொருளுடன் விமானம் தரையிறங்கும் போது சிக்கல் என்றால் எரிபொருள் எரிய தொடங்கினால் நிலைமை விபரீதமாகி விடும்.
இன்னொரு விஷயம் தவிர்க்க முடியாத நேரம் கடலில் "ப்லோட்டிங்" என மிதக்க விடுதல், கொஞ்ச நேரம் விமானத்தை மிதக்க வைத்து அவசரமாக பயணிகளை வெளியேற்ற முடியும், ஆனால் விமானம் அந்த முறையில் கைவிடப்படும். இரண்டாம் முறை வெகு அபூர்வம். முதல் முறை அடிக்கடி நடக்கும் ஒன்று.
இப்படித்தான் எரிபொருள் தீருவதற்கு விமானி திருச்சியினை சுற்றி வட்டமடித்தார். விமான எரிபொருளை திறந்து விடுவதும் நல்லதல்ல. திருச்சி மக்களுக்கு சிக்கலாகி விடும். இப்படி சுமார் இரண்டரை மணி நேரம் பறந்த பின், இனி எரிபொருளால் பாதிப்பில்லை என்ற பின், விமானி விமானத்தை அவசரகால பொறிமுறையில் தரையிறக்கினார்.
அப்போதும் விமானம் தீப்பற்றும் வாய்ப்பு உண்டு தான். ஆனால் விமானத்தில் இரண்டரை மணி நேரம் திருச்சி ரெங்கநாதனை சுற்றி வந்த 141 பேருக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் வேண்டிக் கொண்டிருந்தது. நெருக்கடி நேரத்தில் உதவி செய்யத்தான் திருச்சி ரெங்கநாதன் இருக்காரே. அவர் கை விடுவாரா? கை விடவில்லை. அதனால் விமானிகளின் மனத்திற்குள் தைரியமாகவும், புத்திசாலித்தனமாகவும், விமான பயணிகளின் மனத்திற்குள் தைரியசாலியாகவும் இறங்கினார் ரெங்கநாதன். இதனால் தான் சாதுர்யமாக விமானியால் அதனை தவிர்க்க முடிந்தது. ரெங்கநாதனின் அருள் பெற்ற இந்த விமானிகள் சாதித்து காட்டினார்கள்.
விமானி இக்ரோம் மற்றும் இந்தோனேசிய பெண் விமானி மைத்ரி ஆகியோர் அதனை சாதித்தனர். இது விமானிகளுக்கான பயிற்சி என்றாலும் மிக்க கவனமும் சாதுர்யமும் வேண்டும். அவர்கள் சாதித்திருக்கின்றர்கள்.
இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் பயணிகளை எப்படி இவர்கள் மனவுறுதியுடன், அச்ச உணர்வின்றி, பதற்றமின்றி வைத்திருந்தார்கள் என்பது. அதுதான் அங்கே அவசியம். அரங்கனாதன் அருளால் அதை மிகச்சரியாக செய்திருக்கின்றார்கள். இந்த விமானங்களில் இருந்த பைலட்களுக்கும், பயணிகளுக்கும் தேசமெங்கிருந்தும் வாழ்த்துகள் குவிந்தன.
இது தான் ரெங்கநாதனின் மகத்தான விஷயம். விமானம் திருச்சியினை சுற்றும் போது நமக்கு தெரிந்த முக்கிய விஷயம் அவர்கள் அந்த அரங்கனை சுற்றுகினறார்கள் என்பது தான். ஆம், அரங்கனும் அவர்களை கைவிடவில்லை. பத்திரமாக தரையிறக்கி பார்த்து கொண்டார். ஆக அந்த ஐ.எக்ஸ் 613 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்த பயணிகளே! நீங்கள் கொடுத்து வைத்தவர்கள், சுமார் இரண்டரை மணி நேரம் திருவரங்க நாதனை கருடன் போல் சுற்றும் வாய்ப்பு உங்களுக்குத்தான் கிடைத்திருக்கின்றது.
இப்படி சுற்றிய பின் அரங்கனா எப்படி உங்களை கைவிடுவார்? நிச்சயம் மாட்டார். அதனால் இனியாவது திருச்சியில் இருந்து கிளம்பும் போதோ அல்லது தரையிறங்கும் விமானங்கள் கோயில் புறாக்கள் போல அரங்கனை மும்முறை சுற்றி கொள்ளட்டும். அன்றே தெய்வத்தின் அடுத்த அதிரடியும் நடந்தது.
விமானத்தை தரை இறக்கிய பயணிகளை மீட்ட சில நிமிடங்களில் சென்னை அருகே மைசூர் சென்ற எக்ஸ்பிரஸ், நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில் ஏழு பெட்டிகள் தடம் புரண்டன. இரண்டு பெட்டிகள் எரிந்து போயின. கிட்டத்தட்ட இந்த இரண்டு சம்பவங்களால் தமிழக அரசும், இந்திய அரசும் பதைபதைத்து போனது.
இந்த சம்பவத்திலும் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. காரணம் என்று நவராத்திரியின் கடைசி நாள். ஆயுதங்களுக்கு இந்தியர்கள் அனைவரும் வழிபாடு செய்து கொண்டிருந்த நேரம். இந்தியர்கள் வணங்கிய தெய்வங்கள் ரயில் விபத்திலும் இதனை தாங்கள் மக்களுடன் வாழ்வதை நிரூபித்துக் காட்டின. திருச்சி ரெங்கநாதனுக்கும், இந்திய தெய்வத்திற்குள் சனாதன தர்மத்தை கடைபிடித்து வாழும் ஒட்டுமொத்த இந்தியாவும் நன்றி செலுத்திக் கொண்டிருக்கிறது. இவ்வாறு கூறினார்.