புரட்டாசி மாதத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்?

புட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும், அங்கு இருக்கும் திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவர்.;

Update: 2024-09-19 04:40 GMT

ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாசபெருமாள்.

புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும், பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். முன்னோர்களின் ஆசியை பெற்றுத்தரும் மிக அற்புதமான மாதம் ஆகும்.

புரட்டாசி மாதத்தில், சூரியன் 'கன்னி' ராசியில் பெயர்ச்சியாகி தென்திசையை நோக்கி தனது பயணத்தை தொடங்கும் மாதமாக இருக்கிறது. தென்திசை என்பது 'எமதர்மன்' இருக்கும் திசையாகும்.

புரட்டாசி மாதத்தில் புதனையும், இவரின் அதிபதியான மகாவிஷ்ணுவையும் வழிபடுவதால் சனி, ராகு, கேதுவால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும். புதனின் நட்புக்கிரகம் சனி. எனவே இவரை வழிபடுவதால் சனி தோஷம் நீங்கும். புதன் சகல கலைகளிலும் வல்லவர். புதன் புத்திக்கூர்மை, கற்றல் போன்றவற்றுக்கு அதிபதி. ஆகையால் இவரை வழிபடுகிறவர்களுக்கு அறிவைக் கொடுப்பார்.

புரட்டாசி மாதத்தில் செய்ய வேண்டியவை :

இந்த மாதத்தில் வரும் நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமியில் குழந்தைகளுக்கு புதிதாக கல்வி கற்றுக்கொள்ள தொடங்குவது சிறந்தது. பெருமாள் வழிபாடும், நவக்கிரக வழிபாடும் சிறந்தது.

புரட்டாசி மாதத்தில் செய்யக்கூடாதவை :

புதிய வீடு வாங்குதல், புதிதாக தொழில், வியாபாரம் தொடங்குதல், கிரகப்பிரவேசம் அல்லது புதுமனை புகுவிழா செய்தல், வாடகைக்கு குடிபுகுதல் போன்ற சுபகாரியங்கள் இந்த மாதத்தில் செய்யப்படுவதில்லை.

புரட்டாசி வெள்ளி:

புரட்டாசி மாத தொடக்கத்தில் இருந்து பெருமாள் கோயிலுக்கு செல்வதும், பெருமாளை வழிபடுவதும் எண்ணற்ற நன்மைகளை நமக்கு வாரி வழங்கும். அதேபோல், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை நினைத்து சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவதும், லட்சுமி ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வழிபடுவதும் விசேஷமானது. நீண்டகால கடன் தொல்லையில் இருந்து விடுபட மகாலட்சுமி வழிபாடு சிறந்தது. குறிப்பாக புரட்டாசி வெள்ளிக்கிழமையில், மகாலட்சுமியை வழிபடுவதால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

புரட்டாசி பௌர்ணமி :

புரட்டாசி மாத பௌர்ணமியில் பெருமாளையும், குலதெய்வங்களையும் மனதார வழிபட்டு வந்தால் மகத்தான பலன்களை பெறலாம். புரட்டாசி பௌர்ணமி அன்று அம்பாளை பிரம்மன், விஷ்ணு, இந்திரன் முதலியோர் போற்றி துதித்தனர். அதன் விளைவாக குளிர்ச்சியான ஒளி பொருந்திய முகத்துடன் பௌர்ணமியில் சாந்த சொரூபிணியாக அன்னை காட்சியளித்தாள்.

மகாளய அமாவாசை :

மாதம் மாதம் அமாவாசை வருகிறது. ஆனால் நம் முன்னோர்கள் ஆடி, புரட்டாசி மற்றும் தை அமாவாசையை மட்டும் சிறப்பாக வழிபட்டு வந்துள்ளனர். இவை அனைத்தையும் விட புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகிறது. இது மிகவும் விஷேசமானதாகும்.

ஒவ்வொரு வருடமும், மகாளய அமாவாசை நாளில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் அளித்து வழிபடுவது வழக்கம்.

நவராத்திரி:

மக்களை துன்புறுத்தி வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனுடன், ஆதிபராசக்தி 9 நாட்கள் போரிட்டு 10வது நாளில் அவனை வதம் செய்து வெற்றி கொண்டதாக நம்பப்படுகிறது. இதனை நினைவுக்கூறும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

நவராத்திரியானது புரட்டாசி அமாவாசையை அடுத்த பிரதமை திதியிலிருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாட்களாகும். இந்த ஒன்பது நாட்களும் கொலு வைப்பது, சக்தியை வழிபடுவது, சுமங்கலிகளுக்கு மங்கல பொருட்கள் வழங்கி மகிழ்வது என விமர்சையாக நடைபெறும்.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி :

நவராத்திரி பண்டிகையின் முக்கிய விழாவாக ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி கொண்டாடப்படுகிறது. கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்திற்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்திற்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

கல்வியும், நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றை கடவுளாக கருதி வழிபடுவதே இதன் ஐதீகம்.

நவராத்திரி பண்டிகை நாளில் 9 நாட்களும் பூஜை செய்ய இயலாதவர்கள் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாளில் பூஜை செய்து வணங்குவார்கள். 

Tags:    

Similar News