சிவபுராணம் என்றால் என்ன? படிப்பதால் வரும் பயன்கள் என்ன?
சிவபுராணத்தின் பெருமைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.;
சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டது. திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி சிவபுராணம் ஆகும். திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்று போற்றப்படுகிறது. சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது
1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.
2. வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.
3. மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.
3. எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார்.
4. மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.
5. ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில் " மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்" எழுதியது என கையொப்பம் இடப்பட்டிருந்தது.
6. மீண்டும் திகைத்து போய் பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.
7. ஓலைச்சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய் " ஆம் அடியேன் சொல்ல எழுதப்பட்டது தான்" என்று சொல்லி வந்தது பெருமான் தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.
8. தீட்சதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர்.
9. மாணிக்கவாசகர் , மந்தகாசப் புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி " இப் பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள் " என்றார்.
10. அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார்.
11. ஆக , ஆனி - மகம் மாணிக்கவாசகரின் குருபூசை நாள் ஆகும்.
12 சிறப்பு - 1 நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் தொடங்குவது.
13. சிறப்பு - 2 சிவபுராணத்தின் முதல் 6 வரிகள் வாழ்க என முடியும்.
14. சிறப்பு - 3 அதை அடுத்த 5 வரிகள் வெல்க என முடியும்.
15. சிறப்பு -4 அடுத்த 8 வரிகள் போற்றி என முடியும்.
16. இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.
17. சிவபுராணத்தின் 32 வது வரியில் மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் என பாடி இருப்பார். இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.
18. திருவாசகத்தின் 18 வது வரியான அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.
19. ரமண மகிரிஷி , திருவண்ணாமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.
20. காஞ்சி மகா பெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று தங்கள் குறையை கூறினர். பெரியவர் திருவாசகப் புத்தகத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்க சொன்னார். அவர்களுக்கு வரிசையாக 6 குழந்தைகள் பிறந்தன.
21. இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும். "புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகி, பறவையாய் , பாம்பாகி , கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்" என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.