கந்தர் சஷ்டி கவசம்: சக்தியும், பக்தியும் கொடுத்த சூலமங்கலம் சகோதரிகள்
சாதாரணமாக வெளியிடப்பட்ட அந்த ரிக்கார்ட் பல சாதனை ரிக்கார்டுகளை எல்லாம் முறியடித்து வரலாற்று சாதனை படைத்தது;
சகோதரிகள் இருவரும் இணைந்து ஒரு பாடலை பாடி வெளியிட நினைத்து, பல கிராமபோன் ரிக்கார்டு (இசைத்தட்டு ) கம்பெனிகளுக்கும் ஏறி இறங்கி, அலைந்து திரிந்து எவ்வளவோ கெஞ்சிக் கூட கேட்டுப் பார்த்தார்களாம்.
ஆனால் எந்த ஒரு இசைத்தட்டு கம்பெனியும், இதற்கு இசைய மறுத்து விட்டார்களாம். அதற்கு அவர்கள் சொன்ன காரணம். ‘‘ஓதுவார்கள் பலர் பாடியும் , இந்தப் பாடல் மக்களைச் சரியாக சென்று அடையவில்லை. வேண்டாம் இந்த வீண் வேலை. விட்டு விட்டு நீங்கள் வேறு வேலையைப் பாருங்கள்’’.
விடவில்லை அந்த சகோதரிகள். இசைத்தட்டு சுழல்வது போல் , இசைத்தட்டு கம்பெனிகளை , சுற்றி சுற்றி வந்து, சுழன்று வந்து பல முறை முயற்சித்தும் , கீறல் விழுந்த இசைத்தட்டாக , “முடியாது “ என்ற பதிலே திரும்ப திரும்ப வந்ததாம். ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல , அந்த சகோதரிகள் அந்தப் பாடலை பல இராகங்களில் டியூன் போட்டுப் பாடிப் பார்த்தார்களாம்.
முதலில் இந்தப் பாடலை '‘ஆபேரி '’. அடுத்து ‘'சுப பந்துவராளி". '’அதனைத் தொடர்ந்து ‘' கல்யாணி '’. இறுதியாக ‘'தோடி'’. இப்படி நான்கு இராகங்களில் பாடினார்கள்.
'சரி. ரிக்கார்டு போட்டுத் தான் பார்ப்போமே...' என்று ஒரே ஒரு கம்பெனி 1970 - இல் வெறும் 500 ரிக்கார்டுகள் மட்டுமே வெளியிட்டார்களாம். அப்புறம் நடந்தது தான் , எவருமே எதிர்பாராதது. சாதாரணமாக வெளியிடப்பட்ட அந்த ரிக்கார்ட் பல சாதனை ரிக்கார்டுகளை எல்லாம் முறியடித்து வரலாற்று சாதனை படைத்தது. சரி . இப்படி அந்தக் காலத்தில் படாத பாடுபட்டு , கஷ்டப்பட்டு பாடி , இந்த இசைத்தட்டை வெளியிட்ட அந்த சகோதரிகள் யார் ?!
சூலமங்கலம் சகோதரிகள்" அந்தப் பாடல் "கந்த சஷ்டி கவசம்".
துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும், நிமலனருள் கந்தர் சஷ்டி கவசம் தனை.
எவ்வளவு கஷ்டங்களையும் , போராட்டங்களையும் கடந்து வந்திருக்கிறது இந்த கந்த சஷ்டி கவசம் ?!
அதற்குப் பின் கந்தசஷ்டி கவசத்தை பலரும் பலவிதமாக பாடியிருந்தாலும், "சூலமங்கலம் சகோதரிகள்" பாடிய அளவிற்க்கு வேறு எதுவும் நம்மைக் கவரவில்லை. காரணம் , கடின உழைப்புக்கும் , விடாமுயற்சிக்கும் உள்ள ஈர்ப்பு சக்தி. அது தான் இந்த கந்த சஷ்டி கவசத்தின் வெற்றி.
அந்த சூலமங்கலம் சகோதரிகளின் வெற்றி. இசைத்துறையில் சூலமங்கலம் சகோதரிகள் என அழைக்கப்படும் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி ஆகிய இருவரும் பக்திப் பாடல்களுக்குப் புகழ்பெற்ற சகோதரிகள். கர்நாடக இசையிலும் பக்திப்பாடல்களிலும் புகழ்பெற்று விளங்கிய பல இரட்டையருக்கு (ராதா-ஜெயலட்சுமி, பாம்பே சகோதரிகள், ரஞ்சனி-காயத்ரி, பிரியா சகோதரிகள்) இவர்கள் முன்னோடியாக விளங்கினர்.
இச்சகோதரிகள் பிறந்த இடம் தஞ்சாவூர் அருகில் அமைந்துள்ள இசைப்பாரம்பரியம் கொண்ட சூலமங்கலம் கிராமம் ஆகும். இவர்களது தாய்-தந்தையர்: கர்ணம் ராமசாமி ஐயர், ஜானகி அம்மாள். இவர்கள் சூலமங்கலம் கே. ஜி. மூர்த்தி, பத்தமடை எஸ். கிருஷ்ணன், மாயவரம் வேணுகோபாலய்யர் ஆகியோரிடம் முறையான இசை பயின்றனர்.
தமிழ் சினிமாவில் பெண் தொழில்நுட்பக் கலைஞர்கள் அரிது. அதிலும் இசையமைப்பாளர்கள் மிக அரிது. அவ்வாறு பணி புரிந்த கலைஞர்களை ஒரு கை விரலில் எண்ணி விடலாம்.‘சூலமங்கலம் சகோதரிகள்’ என்றழைக்கப்பட்ட ஜெயலஷ்மி [ 1937-2017], ராஜலஷ்மி [1940-1992] ஆகிய இருவரும் இணைந்தும் தனித்தனியாகவும் திரைப்பாடல்களையும், பக்திப்பாடல்களையும் பாடி இருக்கிறார்கள்.
இவர்கள் இணைந்து ஏழு திரைப்படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார்கள். இவர்கள் பாடிய தேசப்பக்திப் பாடல்களும் பக்திப் பாடல்களும் மிகவும் புகழ் பெற்றவை.
சூலமங்கலம் சகோதரிகளில் இளையவரான சூலமங்கலம் ராஜலட்சுமி 1992 மார்ச் 1 இல் காலமானார். மூத்தவர் சூலமங்கலம் ஜெயலட்சுமி 2017 ஜூன் 29 அன்று சென்னை, பெசண்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் தனது 80வது அகவையில் காலமானார்.
‘‘சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட"
இனி இந்தப் பாடலை கேட்கும்பொதெல்லாம் பக்தியும் வரும். சாதிக்க வேண்டும் என்னும் ஒரு சக்தியும் வரும்