சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் பஞ்சு, சோழி வைத்து பூஜை
திருப்பூர் அருகே சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில், இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு மற்றும் சோழி வைத்து பூஜை செய்ய உத்தரவாகி இருக்கிறது.;
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. வேறு எங்குமே இல்லாதவாறு, இங்கு ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. பக்தர்களின் கனவில் முருகப்பெருமான் தோன்றி, குறிப்பிட்ட பொருளைக் கூறி, அதை உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்ய உத்தரவிடுவார்.
இவ்வாறு கனவில் உத்தரவு பெற்ற பக்தர், கோவிலில் தெரிவிக்க வேண்டும். கோவிலில், சாமி முன்பு பூ போட்டு கேட்டு அதன் பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பது வழக்கம். அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை, அந்தப் பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு உத்தரவான பொருள், ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம் என்பது காலம் காலமாக உள்ள ஐதீகமாகும்.
அவ்வகையில், திருப்பூர் நாச்சிபாளையத்தை சேர்ந்த பானுமதி (வயது 40) என்ற பக்தரின் கனவில், இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு, சோழி ஆகிய பொருட்கள் வைக்க உத்தரவானது. சுவாமியிடம் பூ கேட்டு உத்தரவு கிடைத்ததை அடுத்து, நேற்று முதல் உத்தரவு பெட்டியில், அந்த பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.