திருவண்ணாமலையை பார்த்தாலே பாவம் தீரும்..!

திருவண்ணாமலையை பார்த்தாலே பாவம் தீரும்

Update: 2021-06-01 07:59 GMT

ஒருமுறை, பிரம்ம லோகத்திற்கு அஷ்டவசுக்கள் என்னும் எட்டுபேர் வந்தனர். இவர்கள் பார்வதியின் தந்தையான தட்சனின் இன்னொரு மகளான வசுவுக்கு பிறந்தவர்கள். இவர்களுக்கு அனலன், அனிலன், ஆபத்சைவன், சோமன், தரன், துருவன், பிரக்தியூஷன், பிரபாசன் என்று பெயர். இவர்கள், தங்களின் பெருமையை பிரம்மாவிடம் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டனர். இதைக் கேட்ட பிரம்மாவுக்கு கோபம் எழுந்தது. தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது பாவம். அதனால், நீங்கள் செய்த தவப்பயன் எல்லாம் உங்களை விட்டு நீங்கட்டும், என்று சபித்தார். பயந்து போன அவர்கள், அறியாமையால் பிழை செய்து விட்டோம் சுவாமி. பொறுத்தருளுங்கள், என்று வேண்டினர்.மனமிரங்கிய பிரம்மா, பூலோகத்தில் கங்கை கரையில் சிவனை நோக்கி தவமிருந்தால் பாவம் தீரும், என்று பிராயச்சித்தம் கூறினேன். கங்கைக்கரையில் பலகாலம் தவமிருந்த அஷ்டவசுக்களுக்கு காட்சியளித்த சிவன், நீங்கள் தெற்கேயுள்ள அண்ணாமலைக்குச் செல்லுங்கள். அந்த மலையைச் சுற்றி எட்டு பேரும் எட்டு திசைகளில் லிங்கம் அமைத்து தவமிருந்து வாருங்கள். அதன் பயனாக அந்த மலை எட்டு முகத்துடன் உங்களுக்கு காட்சியளிக்கும். அதைப் பார்த்ததும் உங்களின் பாவம் தீரும்,என்று அருள்புரிந்தார்.

அதன்படியே தவமிருந்த அஷ்டவசுக்கள் பாவம் நீங்கி மேலுலகை அடைந்தனர். (இந்த லிங்கங்களே, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அஷ்ட லிங்க கோவில்களாக உள்ளன) இதைப் போலவே, ஒருமுறை தேவலோக நடனப் பெண்ணான திலோத்தமையும் அண்ணாமலையாரைத் தஞ்சமடைய நேர்ந்தது. இந்திரன் ஒருமுறை பிரம்மாவிடம், பிரம்மதேவரே! இந்திரப்பதவியை அடைய பலரும் தவவாழ்வில் ஈடுபடுகின்றனர். இதைத் தடுக்க வழி செய்யுங்கள், என்று வேண்டிக் கொண்டான். உடனே பேரழகியான திலோத்தமையை உண்டாக்கினார் பிரம்மா. படைத்த அவருக்கே அவள் மீது ஆசை ஏற்பட்டது. அவளோ ஓடி ஒளிந்தாள். பிரம்மா, அவளைத் தேடிக் கண்டு பிடித்ததும், மானாக மாறி ஓட்டம் பிடித்தாள். பிரம்மாவும் கலைமான் வடிவெடுத்து பின் தொடர்ந்தார். தப்பிக்க வழியில்லாத அவள், ஒரு கிளியாக மாறி விட்டாள். பிரம்மாவும் ஆண் கிளியாக மாறி திலோத்தமையை விரட்டிப் பிடித்தார். அந்த இடத்தில் திருவண்ணாமலையாகிய திருத்தலம் கண்ணுக்குத் தெரிந்தது. அண்ணாமலையில் வீற்றிருக்கும் சிவனை மனதில் தியானித்தபடியே திலோத்தமை அபயம்.... சுவாமி' என்று சரணடைந்தாள்.

அடைக்கலம் வந்தவரை ஆதரிக்கும் சிவனும் மலையைப் பிளந்தபடி, ஒரு வேடனாக எங்கள் முன் தோன்றினார். பார்வதி வேடுவப் பெண்ணாக சுவாமியின் பின் வந்தாள். வேதங்கள் நான்கு நாய்களாக அவர்கள் முன் நின்றன. அவரது வில்லையும், கூரிய பார்வையும் கண்ட பிரம்மாவுக்கு அறிவுக்கண் திறந்தது. திலோத்தமைக்கு செய்த பழிச்செயலை எண்ணி வருந்தி மன்னிப்பு கேட்டார். அப்போது சிவன் பிரம்மாவிடம், படைத்த நீயே ஒரு பெண் மீது ஆசை கொண்டது மகாபாவம். ஆனாலும், பாவம் தீர்க்கும் பவித்திரமான அண்ணாமலையைப் பார்த்ததால் நீ பிழைத்தாய், என்று அருள்புரிந்தார். கொடிய பாவம் செய்தவர்களும் மனம் திருந்தி அண்ணாமலையையும், அண்ணாமலையாரையும் தரிசித்தால் பின்வரும் சந்ததிகளை பாவத்தின் பயன் அணுகாது.

Tags:    

Similar News