கெட்ட கனவுக்கு என்ன பரிகாரம் செய்யணும்..?
கெட்ட கனவுகள் கண்டால் சிலருக்கு அன்றைய தூக்கமே போய்விடும். அந்த அளவுக்கு மனதில குழப்பங்களை ஏற்படுத்தும்.;
கெட்ட கனவுகள் கண்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்று இந்த கட்டுரையில் காண்போம் வாங்க.
மனோதத்துவ ஆய்வுப்படி நினைவகளின் எச்சமே கனவு என்றாலும் கூட ஆன்மீகத்தில் கெட்ட கனவுகள் வந்தால் அதற்கு தீர்வு கூறப்பட்டுள்ளன. அதாவது பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன.
மனிதர்களின் ஓய்வுக்கு இயற்கை தந்துள்ள ஒரு வழி தூக்கம். அந்த தூக்கத்தில் சில நேரங்களில் கெட்ட கனவுகள் வருவது உண்டு. மனதில் சஞ்சலங்கள் அல்லது குடும்பத்தில் பிரச்னைகள் இருந்தால் நிச்சயமாக அதன் வெளிப்பாடாக கனவுக தோன்றுவது இயல்புதான் என்றாலும் மனது கேட்காது.
துன்பங்கள் வந்து வாழ்க்கையில் கஷ்டப்படுத்துமோ என்ற எண்ணங்கள் வரும். தூக்கம் போய் புதிய வியாதிகள் வரலாம். அதனால் அந்த எண்ணங்களை சாந்தி படுத்துவதற்குத்தான் ஆன்மீகத்தில் பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. அந்த நம்பிக்கை அவர்களுக்குள் ஒரு மாறுதலை ஏற்படுத்தும்.
அப்போ எந்த மாதிரியான கெட்ட கனவுகளுக்கு என்ன செய்ய பரிகாரம் செய்ய வேண்டும் என்று கீழே தரப்பட்டுள்ளன.
1. பாம்புகள் மற்றும் பிற விஷ ஜந்துகள் கனவில் தொடர்ந்து வந்து அச்சமூட்டினால் கருடன் மீது இருக்கும் விஷ்ணுவின் படத்தை பூஜை செய்து வழிபட்டால் விஷ ஜந்துகள் சம்பந்தமான கனவுகள் வராது.
2. நோய், வியாதி போன்ற கனவுகள் தொடர்ந்து வந்தால் தன்வந்திரி மந்திரம் கூறி தன்வந்திரியை வழிபாடு செய்ய வேண்டும். இதற்கு ஆஞ்சநேயர் வழிபாடும் தீர்வை அளிக்கும்.
3. பேய், பிசாசு போன்றவையை காண்பது அல்லது எந்த காரியங்களும் தடைபடுவது போல கனவு வந்தால் பிள்ளையாரை வழிபடவேண்டும். பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்து அவரின் அகவலையும் படித்து வந்தால் இது போன்ற கெட்ட கனவுகள் நம்மை நெருங்காது.
4. பணக் கஷ்டம், பண இழப்பு, பண நஷ்டம் போன்ற கனவுகளைக் கண்டால் மகாலக்ஷ்மியை வழிபட வேண்டும்.
5. கல்வி தடைப்படுவதுபோல கனவு வந்தால் சரஸ்வதி தேவி மற்றும் ஹயகிரீவர் மந்திரங்களை கூறி வழிபாடு செய்து வரலாம்.
6. குறிப்பிட்ட தெய்வம் மட்டுமே கனவில் அடிக்கடி வந்தால் அந்த தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபட்டு வர நம்மை பிடித்த சகல கஷ்டங்களும் விலகும்.
7. இறந்தவர்கள் அடிக்கடி நமது கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் பெருமாளுக்கு ஏகாதசி விரதம் இருந்து பெருமாளை வழிபட வேண்டும். சாமிக்கு பொங்கல் வைத்தும் இறந்த நம் முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் வழிபட வேண்டும்.
பொதுவான குறிப்பு
கெட்ட கனவுகளைக் கண்டால் காலையில் எழுந்ததும் குளித்து விட்டு பெருமாளை அல்லது இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்து வழிபட வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்வதால் நமது மனம் தெளிவடையும். மேலும் கோவிலுக்குச் சென்று ஒரு அர்ச்சனை செய்வது நல்லது.
காக்கும் கடவுளான பெருமாளை கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி வழிபடுவதன் மூலம் கெட்ட கனவுகளில் இருந்து தப்பிக்கலாம்.
அச்சுதா..! கேசவா..! விஷ்ணுவே..! சத்ய சங்கல்பரே..! ஜனார்த்தனா..! ஹம்ஸ நாராயணா..! கிருஷ்ணா! என்னை காத்தருள வேண்டும்” என்று சொல்லி பெருமாளை வணங்கினால் கேட்டவை எல்லாம் தூர ஓடும்.