எளியமுறையில் கடவுளை அறிய வழிகாட்டிய ராமகிருஷ்ண பரமஹம்சர்!

இராமகிருஷ்ணர் தெரியாதவர்கள் மிகக் குறைவே என்று சொல்லலாம்.;

Update: 2024-08-16 02:59 GMT

பல இடங்களில் உற்பத்தியான ஆறுகள் ஒரே கடலில் வந்து சேருவது போல, சமய மார்க்கங்கள் அனைத்தும் ஒரே இறைவனை அடையும் வழிகள் என்றும், இறைவனை அடைய அவரவருக்குப் பிடித்த வழிகளில் கடைப்பிடிக்க வழிகாட்டிய மகான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.

எந்த சமய ஆன்மிகக் கருத்துக்களையும் குறை சொல்லாமலும், எந்த ஒரு வழிமுறைக்கும் முக்கியத்துவம் அளிக்காமலும், எல்லா சமயப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அனைத்து சமயக் கருத்துக்களையும் ஒருங்கிணைக்கும் சமய சமரச வாழ்க்கை வாழ்ந்தவர் மகான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். மகான் ராமகிருஷ்ண பரமஹம்சருடைய உபதேசங்கள் உபநிஷத்துக்குச் சமானம் என்றால் மிகையாகாது. மிக கடினமான வேத, உபநிஷத்து கருத்துக்களை கூட அனைவருக்கும் புரியும் வண்ணம் சிறிய கதைகள் மூலம் சொன்னவர்.

பரமஹம்சர் உபதேசங்களைக் கேட்க கல்கத்தாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் அவரைத் தேடி வந்தனர். அவரைத் தேடி வந்து தங்களைச் சீடர்களாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினர். இவர்களுள் நரேந்திரன் குறிப்பிடத்தக்கவர். கடவுளைக் காண வேண்டும் என்ற தேடல் இறுதியில் பரமஹம்சரின் சீடராக அவரை ஆக்கியது. பரமஹம்சரின் முக்கிய புகழ்பெற்ற சீடராக அவர் விளங்கினார். இந்த நரேந்திரன் தான் பின்னாளில், ஒரு மகானாக, விவேகானந்தராக உயர்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சமாதிக்கு பிறகு, சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட ராமகிருஷ்ண மடங்கள், இன்றளவும் ஆன்மீக வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகின்றன.

விவேகானந்தரின் கேள்விகளும், சிறப்பான வாதங்களும் பரமஹம்சருக்கு மிகவும் பிடித்திருந்தன. இதனால் பரமஹம்சருக்கு மற்ற சீடர்களை விட, இளம் வயதுச் சீடரான விவேகானந்தர் மீது மிகுந்த பற்று இருந்தது. விவேகானந்தர் ஒரு முறை ராமன், கிருஷ்ணர் போன்ற கடவுளின் அவதாரங்கள் குறித்த தகவலைக் கேட்டுக் கொண்டிருந்த போது பரமஹம்சர், “ராமனாகவும், கிருஷ்ணனாகவும் வந்தவர் எவரோ, அவரே ராமகிருஷ்ணனாக வந்திருக்கிறான்!” என்று விவேகானந்தருக்குத் தமது அவதார ரகசியத்தை வெளிப்படுத்தினார். அதன் பிறகு ராமகிருஷ்ண பரமஹம்சர் என்று உலகம் முழுவதும் போற்றும் மகான் ஆனார்.

மகான் ராமகிருஷ்ண பரமஹம்சர் உபதேசங்களைக் கேட்க வருவோரின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. அவர் தன்னைத் தேடி வருபவர்களுக்கு உபதேசம் செய்வதுடன், மற்ற நேரங்களில் சீடர்களுடன் ஆன்மீகம் குறித்து விவாதங்கள் புரிவார். அப்போது அவரை வந்து அடிக்கடி சந்தித்த மகேந்திரநாத் குப்தா என்பவர் தினமும் அவர் கூறும் கருத்துக்களையும், அவர் புரிந்த விவாதங்களையும் குறிப்பெடுத்து எழுதி வைத்துக் கொண்டார். இந்தக் குறிப்புகளே, பின்னாட்களில் The Gospel of Sri Ramakrishna என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. இது தமிழில் “ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்” என்ற பெயரில் மூன்று பாகங்களாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கர்மமார்க்கம், ஞானமார்க்கம், பக்திமார்க்கம் இப்படி எந்த வழியிலும் இறைவனை அடைய முடியும். இறைவன் ஒரு கற்பவிருட்சம். நாம் அதன் நிழலில் எப்பொழுதும் இருக்க வேண்டும். கடவுள் எல்லா மனிதர்கள் இடத்திலும் உள்ளார். ஆனால் எல்லா மனிதர்களும் கடவுளிடம் இல்லை. நீங்கள் பைத்தியமாய் இருங்கள். உலக சுகங்களுக்காக அல்ல, இறைவனின் அன்பு வேண்டி பைத்தியமாய் இருங்கள். கடவுள் தரிசனம் கிடைத்தவருக்கு நல்லது, கெட்டது, உயர்ந்தது, தாழ்ந்தது என்ற பாகுபாடு இருக்காது.

கடுகளவு தற்பெருமை இருந்தாலும் கடவுளை உணர முடியாது. நான் வாழும் வரை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அனைத்து மதங்களும் ஒன்றே என உணரவேண்டும். இல்லற வாழ்வில் இருந்தாலும் இறையருள் பெற விரும்புபவர்கள் அவ்வப்போது தனிமையை நாடிச் சென்று இறைவனை தொழ வேண்டும்.

உலக வாழ்வில் ஈடுபட்டாலும் இறைவனே நமக்கு வாழ்வளிப்பவர் என்னும் உள்ள உறுதியோடு வாழ வேண்டும். மக்களுள் பெரும்பாலானோர் புகழுக்காகவோ, புண்ணியத்தைத் தேடும் பொருட்டோ பரோபகாரம் செய்கின்றனர். அத்தகைய சேவைகள் சுய நலத்தை அடிப்படையாகக் கொண்டவை. மனத்தூய்மையால் மட்டுமே பிரபஞ்ச உண்மையினை உணர முடியும்.

அறியாமையின் காரணமாகத்தான் அகம்பாவம் மனிதனுக்கு ஏற்படுகின்றது. அந்த அகம்பாவம் மனிதனை அழிக்கின்றது. உண்மையாய் எளிமையாய் இறைவனிடம் வேண்டினாலே போதும். இறைவனுக்கு கேட்கும். இரவில் தெரியும் நட்சத்திரங்கள் பகலில் தெரிவதில்லை என்பதால் நட்சத்திரங்கள் இல்லை என்று சொல்ல முடியாது. ஆகவே மனிதா உனக்குக் கடவுள் தெரியவில்லை என்பதால் கடவுள் இல்லை என்று சொல்லாதே.

சிலருடைய உள்ளம் கல்சுவர் போல உறுதியாக இருக்கும், அதில் ஆணி அடித்தால் அது வளைந்து போகும். அதுபோல எவ்வளவு முயன்றாலும் அவர்களுக்கு ஆன்மீக விஷயம் எதுவும் உள்ளே போகாது.

முத்தாய்ப்பாக பரஹம்சர் சொன்ன ஒரு சின்ன கதை.

பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒருமுறை, பேலூர் காளி கோயிலுக்குச் சென்றிருந்தார். அப்போது, அங்கிருந்த கோயில் ஊழியர்கள், ‘நாங்க தினமும் பண்ற பிரசாதத்தை எங்கிருந்தோ வர்ற எறும்புகள் வந்து மொய்க்கிறதே. அதனால், கடவுளுக்கும் படைக்க முடியலை. பக்தர்களுக்கும் அதைக் கொடுக்க முடியலை’என்று சொல்லி புலம்பினார்கள்.

அவர்கள் சொல்வதைக் கேட்ட பரமஹம்ஸ்ர், ‘இன்னிக்கு கோயில் வாசல்ல ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைச்சிருங்க. அப்புறம் எறும்பு உள்ளே வரவே வராது பாருங்க’ என்றார்.

பகவான் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்னபடியே கோயில் ஊழியர்கள் வாசலில், சர்க்கரையை ஒரு கைப்பிடி எடுத்து வாசலில் போட்டார்கள். சிறிது நேரத்தில், எறும்புகள் சாரைசாரையாக வந்தன. கோயில் வாசலை அடைந்தன. அங்கே இருந்த சர்க்கரையைக் கண்டன. சர்க்கரையோடு சர்க்கரையாகக் கலந்து புரண்டன. சிறிது நேரத்தில், வந்தவழியே திரும்பிச் சென்றன.

அங்கே... கோயிலின் உள்ளே செய்து வைத்த பிரசாதங்களைப் பார்த்த ஊழியர்களுக்கு நிம்மதி கலந்த அதிர்ச்சி. ‘’பாருங்கள் சுவாமி. நீங்கள் சொன்னது போலவே, சர்க்கரையை கோயில் வாசலில் தூவினோம். எறும்புகள் அதைப் பார்த்துவிட்டு, மொய்த்துவிட்டு, அப்படியே போய்விட்டன. இங்கே பிரசாதங்களில் ஒரு எறும்பைக் கூட காணோம். இத்தனைக்கும் விதம்விதமான பிரசாதங்கள் இருக்கின்றன. எப்படி சுவாமி இப்படி?’’ என்று கேட்டார்கள்.

பரமஹம்ஸர் சிரித்துக் கொண்டே சொன்னார்... ‘’என்ன செய்வது... அந்த எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதானே’’ என்றார். அங்கிருந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. பரமஹம்ஸரே தொடர்ந்தார். ‘’மனிதர்களும் வாழ்க்கையில் உயர்ந்த லட்சியங்களையெல்லாம் வைத்திருப்பார்கள். ஆனால் நடுவிலே கிடைக்கிற அற்ப சந்தோஷங்களுக்கு மயங்கி, மேலே போகாமலேயே விட்டுவிடுகிறார்கள்’’ என்று சொன்னாராம். எறும்பின் சின்னதான செயலைக் கொண்டே உலகத்து மனிதர்களுக்கே மிக எளிமையாகவும் அழகாகவும் போதித்த பரமஹம்ஸரை அங்கே இருந்தவர்கள், மீண்டும் நமஸ்கரித்தார்கள்.

Tags:    

Similar News