கோயில் வழிபாட்டில் தலையிட அரசு அதிகாரிகளுக்கு தடை
கோயில் வழிபாட்டு முறைகளில் தலையிட அறநிலைய அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.;
இந்து கோயில்களில் கடைபிடிக்கப்படும் ஆகம சாஸ்திரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளில் தலையிட இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை என உத்தரவிட்டு ஆந்திர மாநில அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்காக முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு இந்து கோயில்களிலும் மூலவர், உற்சவருக்கு செய்யப்படும் பூஜை முறை அந்தந்த சாஸ்திரங்களின் படி ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சைவ. வைணவ முறைகள் வேறுபட்டிருந்தாலும், பல முக்கிய கோயில்களில் ஒரே முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், சில கோயில்களில் இந்த சம்பிரதாயங்கள் மீது இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளின் ஆதிக்கம் இருப்பதால், பூஜை, நைவேத்திய வேளைகளில் சிக்கல்கள் ஏற்படுவதாக புகார் எழுந்தது. சமய, சம்பிரதாய விஷயங்களில் தவறு நடக்க கூடாது என ஆகம வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அரசு அதிகாரிகள் சிலர் இதை கண்டு கொள்ளாமல், தொடர்ந்து அவர்களது வசதிக்கேற்ப சில கோயில்களில் பூஜைகள் மற்றும் வழிபாட்டு முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி விட்டனர். இனி இதுபோன்ற தவறுகள் நடைபெறாதவாறு ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அரசு தற்போது அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அனைத்து இந்து கோயில்களிலும் ஆகம விதிகளின்படி அந்தந்த சம்பிரதாயங்களை கடைபிடிக்கலாம் என்று கோயில் அர்ச்சகர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கும் வகையிலான அரசாணையை கோயில்கள் அனைத்திலும், பூஜை முறைகள், யாகங்கள், உற்சவங்கள் போன்றவற்றை அந்தந்த கோயில்களின் சம்பிரதாய முறைப்படி நடத்த தற்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, அந்தந்த கோயில் அர்ச்சகர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதை ஆந்திர மாநில அர்ச்சகர்கள் மற்றும் பிராமண சங்கத்தினர் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
ஆந்திராவில் வைகானச, பாஞ்சராத்ர, ஸ்மார்த்த, ஆதிசைவ, வீரசைவ, தந்திர சார, சாத்தாதஸ்ரீ வைஷ்ணவா. சாகதீயம் (கிராம தேவதைகள்) போன்ற ஆகம சாஸ்திரங்களை அந்தந்த கோயில்களில் கடைபிடித்து வருகின்றனர். இந்த சாஸ்திரங்களை பின்பற்றியே கோயில்களில் நித்ய பூஜைகள், சேவைகள், உற்சவங்கள், யாகங்கள், கும்பாபிஷேகங்கள், அத்யயன உற்சவங்கள், பிரம்மோற்சவங்கள் போன்றவற்றை நடத்தி வருகின்றனர். இவை அனைத்தும் அந்தந்த கோயில்கள், தேவஸ்தானத்தில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பிரதான அர்ச்சகர்களின் முடிவுகளின்படியே நடத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 30/1987 பிரிவு- 13 மற்றும் உட்பிரிவு-1ல் தெளிவாக 4 தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அதே சட்டத்தில், கோயில் நிர்வாக அதிகாரிகளுக்கு (இ.ஓ) அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால், அவர்களின் கையே ஓங்கி இருக்கிறது. அர்ச்சகர்கள், பண்டிதர்கள், ஆகம வல்லுநர்கள் கூட அரசு நியமித்த அதிகாரி என்ன சொல்கிறாரோ அதன்படியே செயல்பட வேண்டி உள்ளது. ஆகம சாஸ்திர முறையை அமல்படுத்துவதில் ஏதேனும் தவறு இருப்பின், அதை சுட்டிக் காட்டினால் கூட அரசு அதிகாரிகள் ஏற்றுக்கொள்வது இல்லை எனும் குற்றச்சாட்டும் உள்ளது.
தற்போது ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அரசு பிறப்பித்துள்ள புதிய அரசாணையின்படி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், இணை, துணை, உதவி ஆணையர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கூட இனி ஆகம சம்பிரதாய விவகாரங்களில் தலையிட முடியாது. அனைத்து ஆகமா விவகாரங்களும் மூத்த அர்ச்சகர் அல்லது பிரதான அர்ச்சகர்களின் முடிவுக்கே விடப்பட்டுள்ளது.
துணை ஜீயர், பீடாதிபதிகளிடம் கருத்து: தேவைப்பட்டால், மூத்த ஆகம வல்லுநர்கள் மற்றும் அர்ச்சகர்களுடன் கூடிய ஆகம கமிட்டியை கோயில் நிர்வாக அதிகாரிகள் நியமிக்க வேண்டும். ஒருவேளை இந்த கமிட்டியில் கருத்து வேறுபாடு இருந்தால், ஜீயர்கள். பீடாதிபதிகளின் கருத்துகளை கேட்டு முடிவெடுக்கலாம் என்றும் புதிய அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணையை கொண்டு வந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பாஜகவை பலரும் பாராட்டி வருகின்றனர்.