முறுக்குப்பாட்டியிடம் முறுக்கின பெரியவா..!
"ஒருநாள் நீ காத்திருப்பே பார்" என மகா பெரியவா முறுக்கு பாட்டியிடம் முறுக்கின சம்பவம் பற்றி பார்க்கலாம்.;
இது மகாபெரியவாவின் பால்ய பிராயத்தில் நடந்த ஒரு சம்பவம். அப்போது மகாபெரியவர் திண்டிவனத்தில் பள்ளி மாணவனாக இருந்த தருணத்தில் அவர் வசித்த தெருவில் ஒரு பாட்டி முறுக்கு செய்து விற்று வந்தாள். பாட்டியின் வயிற்றுப்பாடே அதில் தான் இருந்தது. பாட்டியின் கைப்பக்குவம் அலாதியானது. பெரியவர் அப்போது அப்பாவிடம் முறுக்கு சாப்பிட அரையணா பெற்றுச் சென்று அதில் முறுக்கு வாங்கிச் சாப்பிடுவதோடு, தன் நண்பர்களையும் வாங்கச் சொல்லி ஊக்கப்படுத்துவார். இதனால் பாட்டிக்கு வியாபாரம் நன்கு நடந்தது.
ஒருநாள் பெரியவர் பாட்டியிடம் பெருமையாக தன்னால் தான் பாட்டிக்கு நல்ல வியாபாரம் என்று கூற பாட்டியும் ஒப்புக்கொண்டு சிரித்தாள். அப்படியே, "என் கைப்பக்குவமும் எல்லாரும் வாங்கிச் சாப்பிட காரணம்" என்றாள்.
"அப்ப நான் காரணம் இல்லையா?" என்று கேட்கவும் பாட்டி, "நீயும் ஒரு காரணம். இப்ப அதுக்கு என்னடா வந்தது?" என்று கேட்டாள். "அதுக்கென்ன வந்ததா? ஒரு தடவையாவது ஒரு முறுக்கையாவது நீ எனக்கு சும்மா தந்துருக்கியா?" என்று பெரியவர் கேட்கவும் பாட்டிக்கு கோபம் வந்து விட்டது.
"நான் அப்படி எல்லாம் தரமாட்டேன். இஷ்டமிருந்தா வாங்கு. இல்லாவிட்டால் வாங்காதே" என்று பாட்டி கூற பெரியவரும் சளைக்காமல்,"அப்புறம் நான் நிஜமாலுமே வாங்க மாட்டேன் தெரிஞ்சுக்கோ" என்றார்.
"சரிதான் போடா...நீ வாங்கலேன்னு தான் நான் அழறேனாக்கும்" என்றாள் பாட்டியும். "பாட்டி யோசித்து பேசு.." "இதுல யோசிக்க என்ன இருக்கு? நீ பெரிய கலெக்டரு பாரு.." என்றாள் பாட்டி. "அப்ப கலெக்டரா இருந்தாதான் மதிப்பியா?" என்றார் மகாபெரியவா.
"நான் கலெக்டரையே கூட என்னை மதிச்சாண்டா மதிப்பேன்." "சரி..இனி நான் உன் கடைல முறுக்கு வாங்கவே மாட்டேன்" என்றார். "ரொம்ப முறுக்கிக்காதே...நீ வரணும்னு நான் ஒண்ணும் இங்க பூர்ண கும்பத்தோட காத்திருக்கல.." பாட்டி அப்படி சொல்லவும் பெரியவருக்குள் ஒரு இனம் தெரியாத வேகம்... "ஒருநாள் காத்திருப்பே பார்.." என்றவராக விடை பெற்றார். பாட்டியும் அதை அன்று விளையாட்டாகத் தான் எடுத்துக் கொண்டாள்.
காலம் சில வருடங்களிலேயே பாட்டியை பூர்ணகும்பம் எடுக்க வைத்து விட்டது. ஒரு மடாதிபதியாக காசியாத்திரை எல்லாம் முடிந்து கும்பகோணம் நோக்கி பெரியவர் திரும்பிய சமயம் திண்டிவனம் குறுக்கிட்டது. தான் ஓடியாடித் திரிந்த ஊர்...பள்ளிப் பிராயத்தில் எவ்வளவோ நண்பர்கள்! ஆசிரியர்கள்! எல்லோரும் பெரியவர் பல்லக்கில் அமர்ந்து வருவதைப் பார்த்தபடி இருக்க பெரியவாளுக்குள்ளும் அந்த நாள் ஞாபகங்கள்.
பல்லக்கை விட்டு இறங்கி நடந்தே வந்தவராய் நண்பர்களை எல்லாம் சந்தித்தார். எல்லாருடைய பெயரையும் ஞாபகம் வைத்திருந்து சொல்லி அழைத்தார். பெரியவர் படித்தது ஒரு கிறிஸ்தவப் பள்ளியில்.. அதன் ஆசிரியர்கள் சிலர் பாதிரியார்கள். அவர்களும் பெரியவரை காண வந்தனர். அவர்களுக்கெல்லாம் தங்களிடம் பயின்ற மாணவன் 'ஜெகத்குரு'வாக திகழ்கிறான் என்பதில் பெருமை.
அப்படியே தான் வசித்த தெருப்பக்கமும் பெரியவர் சென்றார். தெருவே விழாக்கோலம் பூண்டிருந்தது. வாசலில் கோலம் போட்டு எல்லோரும் பயபக்தியுடன் காத்திருந்தனர். இதில் தாய், தந்தை, சகோதரர்க்கு மட்டும் இடமில்லை. சன்யாச தர்மப்படி சன்யாசியாகி விட்ட நிலையிலேயே குடும்ப உறவுகள் நீங்கி விடுகின்றன. உறவோடு இருந்தவர்களுக்கும் ஜெகத் குருவாகி விடுகிறார். அவர்களும் குரு என்றே சொல்ல வேண்டும்.
அப்போது பாட்டி வீட்டை கடந்த போது அப்படியே வாசலில் நின்று உள்ளே பார்வையை விட்டு, "பாட்டி எங்கே?" என்று கேட்டார். பாட்டியை அழைக்க சிலர் உள்ளே சென்றனர். பாட்டியோ பூர்ணகும்பம் சகிதம், தயக்கத்தோடு உள்ளேயே முடங்கியிருந்தாள். காரணம்?
அன்று பேசிய பேச்சு.... அன்று "ஒருநாள் நீ காத்திருப்பே பார்" என்று பெரியவர் சொன்னதும் பலித்துவிட்டது. பூர்ணகும்பத்துடன் பாட்டி தயங்கித் தயங்கி வெளியே வந்தாள். பெரியவரை நேருக்குநேர் பார்க்க அவளுக்கு கூச்சமாக இருந்தது. பெரியவரிடமோ புன்னகை. பூர்ணகும்பத்தை வாங்கிக்கொண்டே "பாட்டி சவுக்கியமா இருக்கியா?" என்று பழசைக் கிளராமல் கேட்கவும், பாட்டி, "சர்வேஸ்வரா" என்று காலில் விழுந்தாள்.
அதன்பின் பாட்டிக்கு விசேஷமான ஆசிகளை வழங்கியதோடு "பாட்டி முறுக்குன்னா எனக்கு உசுரு. பாட்டி கைப்பக்குவம் யாருக்கும் வராது" என்று பாராட்டி மகிழ்ந்தார். அதற்கு பிறகு பாட்டிக்கு கிடைத்த மரியாதையை சொல்லித்தான் நீங்கள் தெரியணுமா?