கோயில்களில் மார்கழி மாத பிரதோஷ வழிபாடு: குவிந்த பக்தர்கள்
கைலாசநாதர் சமேத செண்பகவல்லி திருக்கோவிலில் மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டி அருள்மிகு கைலாசநாதர் சமேத செண்பகவல்லி திருக்கோவிலில் மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு அங்குள்ள நந்தி சிலைக்கு பால் இளநீர் சந்தனம் ஜவ்வாது மஞ்சள் தேன் போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மல்லிகை, ரோஜா, முல்லை, அரளி, செம்பருத்தி, செவ்வரளி, தாமரை, கனகாம்பரம், சாமந்திப்பூ, செவ்வந்திப்பூ,தாழம்பூ, வாடாமல்லி, ஜாதிமல்லி, மலர்கள் கொண்ட சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.
முன்னதாக மூலவர் அருள்மிகு கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
மதுரை:
மதுரை மாவட்டம், சோழவந்தான் விசாக நட்சத்திர திருக்கோயிலான பிரளயநாத சிவன் ஆலயத்தில், பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு, இக்கோயில் அமைந்துள்ள நரசிம்மர், சனீஸ்வரலிங்கம், நதிகேஸ்வரன், மற்றும் சுவாமிக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அலங்காரம் செய்யப்பட்டு, சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இவ்விழாவில், கோயில் செயல் அலுவலர் இளமதி , தொழில் அதிபர் எம்.வி.எம்.மணி, பள்ளி தாளாளர் மருது பாண்டியன், கவுன்சிலர் வள்ளிமயில் மற்றும் பக்த கோடிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதே போல, மதுரை அருகே திருவேடகம் ஏடகநாதர் சுவாமி ஆலயம், தென்கரை மூலநாத சுவாமி ஆலயம், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், மதுரை தாசில்தார் நகர் ஆலயம் வர சித்தி விநாயகர் ஆலயம், மதுரை அண்ணாநகர் யாணைக்குழாய் முத்துமாரியம்மன் ஆலயம், சர்வேஸ்வர ஆலயம், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் திருக்கோவில், மதுரை இம்மையில் நன்மை தருவார் திருக்கோவில், பழைய சொக்கநாதர் ஆலயம் ஆகிய கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.