பல் கூட தேய்க்காமல் பக்தருக்கு அருளிய பெரியவா..!

கனவில் தோன்றும் நிகழ்ச்சிகள், மனதினுடைய வெறும் கற்பனைகள் தானா? அல்லது அவைகளுக்கு ஏதாவது பலன் உண்டா ?;

Update: 2023-08-18 04:28 GMT

மஹா பெரியவா (கோப்பு படம்)

கனவுகள் பற்றி வேதாந்திகளும், விஞ்ஞானிகளும் எந்த முடிவிற்கு வந்தாலும் சரி, சாமான்ய ஜனங்களுக்குக் கடவுளும், மகான்களும் கனவில் தோன்றுவது அருள் புரிவதற்காகவே என்பது தான் அனுபவ நம்பிக்கையாகும்.

2005-இல் அக்டோபர் மாதம் ஸ்ரீ பெரியவாளின் அணுக்கத் தொண்டர் குமரேசனுக்கு ஒருநாள்  விடியற்காலைப் போழுதில் ஒரு கனவு. ஸ்ரீபெரியவாள், “குமரேசா, எழுந்திரு. வெளியே போக வேண்டும்” என்று எழுப்புகிறார்கள். குமரேசன், “நான் பல்கூடத் தேய்க்கவில்லை. பெரியவாளுடன் போவதற்கு வேறு யாரையாவது கூப்பிடலாமே ?” என்று கேட்ட போது, “நான் கூடத்தான் பல் தேய்க்கவில்லை. நீதான் கூட வரவேண்டும்” என்று தீர்மானகாகக் கூறிவிட்டார்கள்.

கொஞ்சதூரம் போனதும் ஒரு குளம். நீயும் பல் தேய்; நானும் தேய்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லி விட்டுப் பின் மறுபடியும் நடை. “ஒரு பெரியவர் உடம்பு சரியில்லாமல் படுத்திருக்கிறார். அவருக்குப் பிரசாதம் கொடுக்க வேண்டும். அதற்குத்தான் உன்னைக் கூப்பிட்டுக் கொண்டு போகிறேன்".


அந்த வீட்டிற்குப் போனதும் யாரென்று நிச்சயமாகத் தெரியாத ஒருவருக்கு குமரேசன் மூலம் பிரசாதம் கொடுக்கும்படி உத்திரவாயிற்று. பின், திரும்பி வந்ததும், “நீ தூங்கு; நானும் படுத்துக் கொள்கிறேன்” என்றார்கள்.

குமரேசனுக்கு விழிப்பு வந்து விட்டது. காலை ஏழு மணிக்கு, சென்னை வேளச்சேரியிலிருந்து குமரேசனுக்குப் பழக்கமான வைத்யநாதன் என்பவரிடமிருந்து போன் வந்தது. அப்பாவிற்கு ராத்திரி ஒரு கனவு. ஸ்ரீ பெரியவாள், “குமரேசனிடம் பிரசாதம் கொடுத்தனுப்பியுள்ளேன். பெற்றுக்கொள்” என்றாராம்.

அவருக்கு ஸ்ட்ரோக் வந்து நடக்க முடியாத நிலை. தகவல் அறிந்ததும் குமரேசன், மகா ஸ்வாமிகள் அதிஷ்டான பிருந்தாவனத்திலிருந்து பிரசாதம் எடுத்துக் கொண்டு சாயந்திரம் வேளச்சேரி போய்ச் சேர்ந்தார். வீட்டிலுள்ளோர் எவ்வளவு வற்புறுத்தியும் வைத்யநாதனுடைய தகப்பனார் பிரசாதம் கைக்குக் கிடைக்கும் வரை தண்ணீர் கூடக் குடிக்கவில்லையாம் !” இப்படியெல்லாம் பல சிறப்புகளை புரிந்தவர் மஹாபெரியவா.

Tags:    

Similar News