ஆன்மீகம் வளர இப்படியும் ஒரு காரணம்?
இறைவனை பற்றி அவதுாறு பேசுபவர்களாலும் ஆன்மீகம் அதிகம் வளரத்தான் செய்கிறது.;
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் வெளியூர் சென்றாலும் கூடவே பூஜைப் பெட்டியை எடுத்துச் செல்வது வழக்கம். தொடர்ந்து 57 வருடங்கள் ஒரு நாள்கூட இடைவெளி இன்றி முருகப்பெருமானுக்கு பூஜை செய்தவர். எம்.ஜி.ஆருக்கு எத்தனையோ பட்டங்கள் இருந்தாலும், 'பொன் மனச் செம்மல்' என்பது அனைவராலும் சொல்லப்படுவது. அப்பட்டத்தை வழங்கியவர் இவரே.
தியாகராஜ பாகவதர் கதாநாயகனாக நடித்து ஒரு வருடத்துக்கு மேல் ஓடிப் புகழ் பெற்ற 'சிவகவி' திரைப்படத்துக்கு வசனம் எழுதியவர் வாரியாரே. தமிழின் பெருமை பற்றி வாரியார் கூறியது இது... 'பாரிஸ் நகர நூல் நிலையத்தில் மடக்கிவைத்துள்ள பீரோக்களை நீட்டிவைத்தால், ஆறு மைல் நீளம் வரும். மிகப் பெரிய நூலகம். அதில் எண் ஒன்று போட்டு பைபிள் உள்ளது. எண் இரண்டு போட்டு திருக்குறளை வைத்திருக்கிறார்கள்!' மானம் என்ற சொல் தமிழில் தவிர வேறு எந்த மொழிகளிலும் இல்லை!. எம்பெருமான் திருவருளாலே...' என்ற வார்த்தைகள் இல்லாமல் அவர் பேசியதே இல்லை!.
20 வயதுக்கு மேல், அவர் மேல் சட்டை அணிந்தது இல்லை. ஆட்டோகிராஃப் கேட்பவர்களுக்கு 'இரை தேடுவதோடு இறையையும் தேடு' என்ற வார்த்தைகளையே பெரும்பாலும் எழுதிக் கையெழுத்து இடுவார். இனி வாரியார் சொன்னதிலிருந்து சில முத்துக்களை பார்க்கலாம்:
‘கம்’ முனு இரு: “கம்முனு சும்மா இரு. எல்லாம் தானே நடக்கும்” என்று பேச்சுவாக்கில் சொல்வதுண்டு. உண்மையில் “கம்” என்பது விநாயகரின் பீஜ மந்திரம். “ஓம் கம் கணேசாய நம” எனபதாகும். ‘கம்’ என்ற விநாயக மந்திரத்தை உச்சரித்து கொண்டே இருந்தால், எல்லா காரியங்களும் மங்களமாகவே முடியும் என்பதே இதன் பொருள்.
உலாவ இடமா இல்லை : “வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்” என்று பாடினார் பாரதியார். அங்கு ஏன் உலாவ வேண்டும்? உலாவ பீச், பார்க் என்று எத்தனையோ இடம் இருக்கிறதே? அங்கெல்லாம் உலாவுவோம் என்று ஏன் எழுதவில்லை. காரணம், பாரத தேசத்தின் அந்தப்புற எல்லையாக இருக்கிறது பனிமலை. அங்கே இருப்பவர்கள், நாட்டை காக்கும் இராணுவ வீரர்கள். அவர்கள் எல்லாம் ஒரே இடத்தில் இருந்தால், பகைவர்கள் நுழைந்து விடுவார்களே. அதனால் தான் வெள்ளிப் பனி மலையில் உலாவிக் கொண்டே, நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாரதி இப்படி பாடினான்.
வேறுபாடு இல்லா பெண் உலகம்: எல்லா வேறுபாடுகளும் ஆண் உலகிலேயே காணப்படுகின்றன. பெண் உலகுக்கு இந்த வேறுபாடுகள் கிடையாது. ஐயர்,செட்டியார், நாயுடு, முதலியார் முதலிய ஜாதிப் பெயர்கள் எல்லாம் ஆணின் பெயரை ஒட்டியே வருகின்றன. பெண் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும் மீனாட்சி அம்மாள், காமாட்சி அம்மாள் என்று தானே வழங்குகின்றன.
அதிகம் எது?: பாண்டவர்கள் ஐந்து பேர். கௌரவர்கள் நூறு பேர். அந்த காலத்திலேயே நல்லவர்கள் ஐந்து பேரும், கெட்டவர்கள் நூறு பேரும் ஆக இருந்தார்கள். இப்போது கேட்கவா வேண்டும்?
கள் தேவை: கள்ளை குடித்தால் தான் போதை எனபது இல்லை. ‘கள்’ என்று சொன்னாலே பலர் மயங்கி விடுகிறார்கள். “நீ” என்பதற்கு பதில் நீங்’கள்’ என்று சொல்லிப்பாருங்கள். எல்லாம் அந்த ‘கள்’ செய்யும் வேலை தான்.
சினிமா: இப்போதைய சினிமாக்களை (கவனியுங்க!) பணம் பண்ணும் சாதனமாக ஆக்கிவிட்டார்கள். சினிமாக்கள் மூலம் நல்ல கருத்துக்களை இந்த சினிமாக்காரர்கள் சொல்லாமே? ஏன் சொல்லத் தயங்குகிறார்கள்? நான் ஆயிரம் சொற்பொழிவு நடத்துவதும் சரி, ஒரு நல்ல சினிமா வருவதும் சரி. பணம் சம்பாதியுங்கள். அதே சமயம் சமுதாயத்தையும் உருப்படவிடுங்கள்.
பதவி அலைச்சல்: ராமபிரான், ஆட்சியே வேண்டாம் என்று, பெரிய பதவியை துறந்து தந்தை சொல்லைக் கேட்டு காட்டுக்கு போனார். ஆனால், இப்போது சிலர் பிள்ளையார் கோவில் அறங்காவலர் பதவிக்கே அலையாய் அலைகிறார்கள்.
நாத்திகவாதிகள் வாழ்க: இறைவனை எதிர்த்து பேசி வருவதால், இறைவனின் புகழ் மேலும் வளரும். ஆதலால், இறைவனை எதிர்ப்பவரும் இறைத்தொண்டு தான் செய்கின்றனர். குடையை விரித்து யாரும் சூரியனை மறைத்து விட முடியாது.
கோயில் எதற்கு? : இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும், கோயிலில் உள்ள திரு உருவத்தில் விளங்கித் தோன்றுகின்றான். பசுவின் உடம்பில் பாலைப் பெற முயற்சி செய்கின்ற ஒருவன், பசுவின் கொம்பையோ, காதுகளையோ, வாலையோ வருடினால் பால் கிடைக்குமா? எனவே, பசுவின் பால் பெற விரும்புவோன், பசுவின் மடியை வருடிப் பால் பெறுவது போல, இறைவனின் அருளைப் பெற விரும்புவோன், கோயில் சென்று இறைவன் திருமுன் நின்று வழிப்பட்டு திருவருளைப் பெறுதல் வேண்டும்.
வாரியாரின் அர்த்தமிக்க, அற்புதமான கருத்துக்களை உள்ளடக்கிய வார்த்தை விளையாட்டுகள் தான் மக்களிடம் ஆன்மிகம் எளிதாக சென்றடைய காரணம் என்பது உங்களுக்கு விளங்குகிறது அல்லவா?
தன் குரலை வைத்து ‘மிமிக்ரி” செய்பவர்களை (செய்துவருபவர்களை) பற்றி வாரியார் பின்வருமாறு கூறி இருக்கிறார்.
“என் குரலை நிறைய பேர் “மிமிக்ரி” கிண்டல் பண்ணுகிறார்களே. அதை நான் கிண்டல் என்று சொல்லமாட்டேன். கஷ்டப்பட்டு பயிற்சி செய்து என்னைப் போலவே பேசுகின்றார்களே. அதை எண்ணி ஆச்சரியப்படுவேன். பேசினால் பேசட்டுமே. “முருகா, முருகா” என்று அவர்கள் சொல்லித்தானே ஆக வேண்டும். அது அவர்களுக்குப் புண்ணியம் அல்லவா?