திருவானைக்கோயில் கட்டிய கோச்செங்கட் சோழன்..!
திருவானைக்கோயில் திருச்சி மாவட்டம் ஜம்புகேஸ்வரர் ஆலயம் 1800 வருடங்கள் பழமையானது.;
இந்த கோயில் கோச்செங்கட்சோழ நாயனாரால் கட்டப்பட்டது. வரைபடம் தொழில் நுட்பம் இல்லாத காலத்தில் கற்பனைக்கு எட்டுமா? இந்த எழில் மிகுந்த பிரம்மாண்டமான கட்டிடக்கலை..
பார்க்கும் பொழுது பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் தன்னுள் மறைத்து வைத்திருக்கின்றது.. இன்று கற்பனையில் கூட எட்டாத சிற்பம்... சிற்பக் கூட கட்டிடக்கலை. மின்சாரம் இல்லாத காலத்திலேயே நம்மிடம் இவ்வளவு தொழில்நுட்பம் இருந்திருக்கிறது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்..
புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.
சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டு வந்து வழிபட்டது.
யானை சிலந்தி பின்னிய வலையை தேவையற்றதாக கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார்.
சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலை மீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோயில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன.
கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.
இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.