“மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?

"கடவுள் வேறு..கடவுள் சிலைகள் வேறு...!" எவ்வளவு சிம்பிளாக சொல்லி விட்டார் வாரியார்...?

Update: 2024-05-17 06:26 GMT

கிருபானந்த வாரியார் 

கேள்வி:“தெய்வங்கள் மக்களை காப்பாற்றும் என்று கூறுகிறார்கள். ஆனால் தெய்வங்களின் சிலைகளைத் திருடிக் கொண்டு சென்று விடுகின்றனர். அவ்வாறு தங்களையே காத்துக் கொள்ள முடியாத தெய்வங்கள் மக்களை எப்படி காப்பாற்றும் ?”

வாரியார் பதில் : “சிலைகளே கடவுள் அல்ல. மூர்த்தி வேறு. மூர்த்திமான் வேறு. மூர்த்தி என்பது சிலை. மூர்த்திமான் அந்தச் சிலையில் நாம் ஆவாகனம் செய்கின்ற தெய்வம். மின்சாரம் வேறு. மின்சார பல்புகள் வேறு. பல்பில் ஷாக் அடிப்பதில்லை. ஆகவே பல்புகளை திருடும் போது ஏன் ஷாக் அடிப்பதில்லை என்று கேட்பதை போலிருக்கிறது இந்த வினா.

சிலைகளைத் திருடுகின்றபோது, ஆண்டவன் ஏன் அவனுக்கு தண்டனை கொடுக்கவில்லை என்ற வினா எழக்கூடும். கடவுள் கருணைக்கடல். தாய், திருடுகின்ற மகனிடத்தும் அன்பு பாராட்டுவது போல், கடவுள் கள்ளனுக்கும் கருணை காட்டுவார்.

“நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடு” என்கின்றார் இராமலிங்க வள்ளலார்...”

"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்". "ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்" 

வாரியார் உரை 

நாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி வரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல் வினைகளும் பன்மடங்கு வளர்ந்து வரும்.

பகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில், எதிர்வீட்டில் இருக்கக்கூடாது. இருந்தால் அது நமக்கு அஷ்டமத்துச் சனி. மிக்க ஆபத்தைத் தரும்.

மனிதன் வாழ்கின்ற வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக்கூடாது. மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது.

கட்டை அல்லது துணியைக் கொளுத்தினால் முடிவில் கரி சாம்பல்தான் மிஞ்சும். கற்பூரத்தைக் கொளுத்தினால் தீயில் கரைந்து மறைந்து விடுகிறது. ஜீவன் (மனிதன்) சிவத்தில் ஒன்றுபட வேண்டும் என்ற உண்மையை நாம் உணரும் பொருட்டுக் கற்பூர தீபம் காட்டுகிறார்கள். கோயிலில் தரிசனம் செய்பவர்கள் இந்த உண்மைகளை அறிந்து வழிபாடு செய்தல் வேண்டும்.

Tags:    

Similar News