டாக்டர் நஞ்சப்பாவை அதிர வைத்த காஞ்சி மகாபெரியவா!

‘என்ன… ரெண்டு நாட்கள் இந்தக் கிராமத்துலேயே தங்கிட்டுப் போங்கோனு என்கிட்டே உங்களைச் சொல்லச் சொன்னாளா?’’;

Update: 2024-07-28 16:39 GMT

காஞ்சி சங்கராசாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 

ஒரு முறை நேபாள மன்னரது வேண்டுகோளை ஏற்று நேபாளத்துக்கு யாத்திரையாகப் புறப்பட்டார் காஞ்சி மகா பெரியவர். போகும் இடங்களில் எல்லாம் அவரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்களை ஆசீர்வதித்த படியே தனது யாத்திரையைத் தொடர்ந்து கொண்டிருந்தார் காஞ்சிமகான்.

மகா ஸ்வாமியின் வேக வேகமான நடை அவருக்கே உரிய தனிச் சிறப்பு! அவருடன் சென்ற மடத்துப் பணியாளர்களால் ஸ்வாமிகளது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்களின் பாதங்கள் சிவந்தும், காயம் பட்டும் ரத்தம் கசியும் நிலையில் இருந்தன.

கர்நாடக எல்லையில் இருந்த ஒரு கிராமத்துக்குள் பிரவேசித்தார் ஸ்வாமிகள். ஸ்ரீபரமாச்சார்யாரது விஜயம் அறிந்த கிராம மக்கள் ஓடோடி வந்து அவரை நமஸ்கரித்தனர். பிறகு, சகல மரியாதைகளுடன் அவரை வரவேற்று ஆரவாரமாக அழைத்துச் சென்றனர்.

சற்று நேரத்தில் பெரியவாளிடம் வந்த பணியாளர்கள் சாஷ்டாங்கமாக அவர் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்து விட்டு, ‘‘மன்னிக்கணும் பெரியவா! கால்களில் ரத்தம் கசியுமளவு வேதனை. ஆகவே, இரவில் இங்கேயே தங்கிட்டு, நாளைக்குக் காத்தால புறப்பட அனுக்கிரகிக்கணும்!’’ என்றனர் கண்ணீர் மல்க.

அவர்களைக் கருணையுடன் நோக்கிய ஸ்வாமிகள், எதுவும் பேசவில்லை. சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தார். எப்போதோ காஞ்சி மடத்துக்கு வந்து தன்னிடம் ஆசிபெற்றுச் சென்ற கர்நாடகத்தைச் சார்ந்த டாக்டர் ஒருவரைப் பற்றிய நினைவு வர… அந்த டாக்டரது ஊரைச் சொல்லி, ‘அது எங்கிருக்கிறது?’ என்று கிராமத்து வைதீகர்களிடம் விசாரித்தார் ஸ்வாமிகள். மகா பெரியவா குறிப்பிட்ட ஊர், அதிர்ஷ்டவசமாக அவர் தங்கியிருந்த கிராமத்துக்கு அருகில் தான் இருந்தது.

மகா ஸ்வாமி உடனே மடத்தின் பணியாட்களை அழைத்த பெரியவாள், ‘‘உங்களில் நடக்க முடிஞ்ச ரெண்டு பேர் மட்டும் அந்த ஊருக்குப் போங்கோ. அங்கே டாக்டர் நஞ்சப்பாவை பார்த்து, ‘பெரியவா உங்களைப் பார்க்கணும்னு சொன்னார்’ங்கற விஷயத்தைச் சொல்லி… அழைச்சுண்டு வாங்கோ!’’ என்றார். அதன்படி மடத்து சிஷ்யகோடிகளில் இருவர் டாக்டர் நஞ்சப்பாவின் ஊருக்கு விரைந்தனர்.

அதன்பின் ஸ்ரீபரமாச்சார்யார் அருகில் இருந்த அம்மன் கோயில் மண்டபத்தில் தங்கிக் கொள்ள, மற்றவர்களை அந்தக் கிராமத்தின் வைதீக பிராமணர்கள் சிலர் தங்கள் இல்லங்களுக்கு அழைத்துச் சென்றனர். டாக்டரது ஊருக்குச் சென்ற சிஷ்யர்கள், அவரைச் சந்தித்து மகா பெரியவாள் பக்கத்துக் கிராமத்தில் தங்கியுள்ளதைத் தெரிவித்ததுடன், சக சிஷ்யர்களின் உபாதை குறித்தும் பெரியவாளின் விருப்பம் குறித்தும் விளக்கினர்.

அந்த டாக்டருக்கு ஆச்சரியம்! ‘காஞ்சி மடம் சென்று ஸ்ரீபரமாச்சார்யாரை நான் தரிசித்தது ஒரே ஒரு முறைதான். அதுவும் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னதாக! எனினும் ஸ்ரீபரமாச்சார்யார் என்னை மறக்காமல் இருக்கிறாரே’ என்று அந்த மகானது நினைவாற்றலை எண்ணி வியந்தார். சற்றும் தாமதிக்காமல் மடத்து சீடர்களுடன் காரில் ஏறிப் புறப்பட்டார்.

கிராமத்தில், அம்மன் கோயில் முன்பாக காரை நிறுத்தி விட்டு மண்டபத்துக்குள் சென்ற டாக்டர், மகா ஸ்வாமிகள் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். அவரிடம் தொழில், குடும்ப நலன்களைப் பற்றி விசாரித்த பெரியவாள், தம்முடன் வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

டாக்டரும் மடத்துப் பணியாட்களின் பாதங்களைப் பரிசோதித்து, காயங்களுக்கு உரிய மருந்திட்டு, தேவைக்கேற்ப கட்டும் போட்டு விட்டார். அப்போது அவரிடம், ‘‘ஐயா, நீங்க ஒரு உபகாரம் பண்ணணும்’’ என்றனர் மடத்தின் பணியாட்கள்.

‘‘என்ன செய்யணும், சொல்லுங்களேன்.’’

‘‘ஒண்ணுமில்லே… கால்கள் குணமாக ரெண்டு நாளாகலாம். அதுவரை இங்கேயே தங்கிச் செல்லுமாறு நீங்கதான் பெரியவாகிட்டே சொல்லணும்.’’

அவர்களின் நிலைமை டாக்டருக்கு புரிந்தது. ‘சரி’ என்று சொல்லி, காஞ்சி பெரியவரிடம் சென்றவர் தரையில் அமர்ந்தார். பிறகு, ஏதோ சொல்ல முற்பட்டவரைக் கையமர்த்திய பெரியவாள்,

‘‘என்ன… ரெண்டு நாட்கள் இந்தக் கிராமத்துலேயே தங்கிட்டுப் போங்கோனு என்கிட்டே உங்களைச் சொல்லச் சொன்னாளா?’’ என்றார் ஸ்ரீபரமாச்சார்யார்.

டாக்டருக்கு வியப்பு. ‘பெரியவா தங்கியிருப்பது கோயில் மண்டபத்தில். அப்படியிருக்க அடுத்த வீதியில் தங்கி இருக்கும் பணியாளர்கள் சொன்னதை அட்சரம் பிசகாமல் நம்மிடம் சொல்கிறாரே!’ என்று அதிசயப்பட்டார் டாக்டர் நஞ்சப்பா.

‘‘கவலைப்படாதீங்கோ… ரெண்டு நாள் என்ன… அவாளோட கால்கள் குணமாகற வரைக்கும் இங்கே தங்கி, அப்புறம்தான் பொறப்படுவேன்’’ என்று அந்த நடமாடும் தெய்வம் புன்னகைக்க… கண்ணீர் மல்க கைகூப்பி நமஸ்கரித்தார் டாக்டர் நஞ்சப்பா.

Tags:    

Similar News