மீ்ண்டு வா..!அச்சம் தவிர்..!
நாம் பிறப்போம் என்பது நமக்கு முன்னமே தெரியுமா?;
இந்த தாய் தந்தையர்க்கு, உலகின் இந்த இடத்தில் தான் பிறப்போம் என்பதை முன்பே அறிந்தோமா?
இல்லை நம் தாய் தந்தையர் இந்த உருவில், இந்த குணங்களை கொண்டு நாம் தான் பிறப்போம் என்பதை அறிவாரா?
ஒவ்வொரு நொடியும் நம் மனதில் வரும் எண்ணங்கள், நம் பார்வை மாற்றங்கள், நாம் சந்திக்கப் போகும் மனிதர்கள், அதனால் நமக்கு கிடைக்கப் போகும் அனுபவங்கள் என எதையுமே அறியாமல் தான் வந்து பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் எதோ மரணத்தை மட்டும் அதை நாம் அறிந்து வைத்ததை போல, அது நமக்கு கெடுதல் தான் போல், அதை நினைக்கையிலேயே உதறலெடுத்து துயரம் கொள்கிறோம்.
இருக்கும் நேரம் மற்றவருக்கு தொந்தரவு கொடுக்காமல், இவர் ஏன் இன்னும் இருக்கிறார் என மற்றவரை நினைக்க வைக்காமல் வாழ்ந்தால் போதும்.
உயிர் வந்ததின் மூலம் தெரியாது, உயிர் போவதின் மூலமும் தெரியாது. இதில் மரணம் மட்டும் ஏன் அச்சத்தை கொடுக்க வேண்டும்? பிறப்பது ஆரம்பமுமில்லை, இறப்பது முடிவுமில்லை. இறப்பின் அச்சமே மற்ற எல்லா அச்சங்களுக்கும் அச்சாணியாக அமைகிறது. அதை நீக்கிவிட்டால் அழகாக, அன்பாக, அருமையாக வாழ்ந்து விடைபெற்றுச் சென்று விடலாம். எனவே அச்சம் தவிர்!