திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா: இன்று கொடியேற்றம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி திருமலை முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வீதிகளில் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட பல வண்ண மலர்களால் கோவில் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதில் தங்கப் பலிபீடம், கொடிமரம் ஆகியவை பிரத்யேக மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருப்பது பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை சேனாதிபதி உற்சவமும், அங்குரார்ப்பணமும் நடந்தது. கங்கணப்பட்டரும், பிரதான அர்ச்சகர்களும் புற்று மண் எடுத்து வந்து சிறப்புப்பூஜைகள் செய்தனர்.
பிரம்மோற்சவ விழாவில் முதல்-மந்திரி ஒய்.எஸ். ஜெகன்மோகன்ரெட்டி பங்கேற்று மூலவருக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கிறார். மேலும் திருப்பதியில் பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதையொட்டி மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சித்தூர் மாவட்ட கலெக்டர் எம்.ஹரிநாராயணன், திருப்பதி புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெங்கட அப்பலாநாயுடு மற்றும் தேவஸ்தான, அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மேலும் இன்று (வியாழக்கிழமை) அலிபிரியில் இருந்து திருமலை வரை சீரமைக்கப்பட்ட நடைபாதையை திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தொடங்கி வைக்கிறார்.