ஆனி உத்திர தரிசனம் பார்க்கலாம் வாங்க...!
சிவனுக்கு உகந்த நாட்களில் ஒன்றாக ஆனி உத்திரம் அமையப்பெற்ற ஒரு நன்னாள் ஆகும்.;
உலகெங்கிலும் வாழும் மக்களுக்கெல்லாம் பரம்பொருளாக இருந்து இந்த உலகையும், மக்களையும் காத்தருள்கின்ற சிவனுக்கு உகந்த நாட்களில் ஒன்றாக ஆனி உத்திரம் அமையப்பெற்ற ஒரு நன்னாள் ஆகும்.
சிவபெருமானின் 64 மூர்த்தி வடிவங்களில் நடராஜர் முக்கியமானவா் ஆவார். ஆடலரசரான நடராஜருக்கு சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை, மாசி வளர்பிறை சதுர்த்தசி என ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த 6 நாட்களில் மார்கழி திருவாதிரையும், ஆனி உத்திரமும் சிறப்பு வாய்ந்தவை.
இந்த இரண்டு நாட்களில் மட்டும் தான், சிதம்பரம் நடராஜருக்கு அதிகாலை நேரத்தில் அபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற நாட்களில் மாலை நேரத்தில் தான் அபிஷேகம் நடைபெறும்.
சிவபெருமானின் பஞ்ச சபைகளில் பொற்சபையாகவும், பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் ஆலயம்.
நடராஜப் பெருமான் ஆடும் ஆனந்தத் தாண்டவம் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்து தொழில்களையும் உணர்த்துகிறது. வலது கையில் உள்ள உடுக்கை படைத்தலையும், உயர்த்திய வலது கரம் காத்தலையும், இடது கரம் அழித்தலையும், ஊன்றிய பாதம் மறைத்தலையும், மற்றொரு தூக்கிய நிலையில் உள்ள கால் அருளலையும் குறிப்பதாகக் கூறப்படுகிறது.
திருமஞ்சனம்: திருமஞ்சனம் என்றால், மகா அபிஷேகம் என்று பொருள். திருமஞ்சனம் என்பது தெய்வத்தை நீராட்டிக் குளிர்விக்கும் நிகழ்வாகும். தேவர்களின் சந்தியா காலமாக விளங்கும் ஆனி மாதம், இறை வழிபாட்டிற்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை உத்திர நட்சத்திர நாளில் நடைபெறும். இதுவே ஆனித் திருமஞ்சனம் என்று போற்றப்படுகிறது. சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுக்கு நடத்தப்படும் ஆனித் திருமஞ்சன விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
நடராஜருக்கு அபிஷேகம் ஏன்? அக்னி நட்சத்திரம் வைகாசியில் முடிந்தாலும், ஆனியில் கோடை வெப்பம் மிகுந்து காணப்படுவதால், இந்த வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து நடராஜப் பெருமானைக் குளிர்விப்பதற்காக, ஆனித் திருமஞ்சன விழா நடைபெறுகிறது. பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர் என 16 வகை குளிர்ந்த பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகின்றது.
நடராஜப் பெருமானுக்கு செய்யப்படும் ஆனித் திருமஞ்சன தரிசனத்தை கண்டால், பெண்கள் தீர்க்க சுமங்கலியாகவும், கன்னியருக்கு நல்ல இடத்தில் திருமணம் அமைவதாகவும் நம்பப்படுகிறது.
பலன்கள்: செல்வ வளம் பெருகும், கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும், பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடும், ஆண்களுக்கு மனதில் தைரியமும், உடல்பலமும் கூடும்.