நம் கஷ்டங்களை நீக்கும் சக்தி யாரிடம் உள்ளது..!

இறைவனடி சேர்ந்த நமது முன்னோர்களும், பெற்றோர்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்து கொண்டிருக்கிறார்கள்.;

Update: 2024-05-08 06:16 GMT

அமாவாசை தர்ப்பணம் (கோப்பு படம்)

நமது முன்னோர்கள் எங்கிருந்தோ நம்மை ஆசீர்வதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற இந்த விஷயம் பல ஆயிரம் ஆண்டுகளாக இந்துக்களால் நம்பப்பட்டு வரும் ஐதீகம். நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது.

மறுபிறவிகள் எடுத்தாலும் அல்லது முக்தியை அடைந்தாலும் அல்லது பித்ருலோகத்திலேயே இருக்கும் காலத்திலும் நம் பித்ரு பூஜைகள் எவ்விதம் அவர்களைச் சென்றடைகின்றன.

சரீரத்தை விட்டுவிட்ட ஜீவன் மரணமடைந்த தினத்திலிருந்து ஒன்பது நாட்கள் சரீரம் இல்லாமல் இப்பூவுலகிலேயே வாசம் செய்கிறது. இந்த ஒன்பது நாட்களும் அந்த ஜீவனின் பசி, தாகம் ஆகியவற்றைப் போக்குவதற்காகவே தான் விசேஷ பூஜைகளை செய்கிறோம். பத்தாவது தினத்தன்று அந்த ஆத்மாவிற்குக் கட்டை விரல் போன்ற அளவும், அமைப்பும் கொண்ட சூட்சும சரீரம் ஏற்படுகிறது. அந்த சூட்சும சரீரத்தின் மூலம் அந்த ஆத்மாவின் மேல் உலகப் பயணம் ஆரம்பிக்கிறது. அன்று தான் ஒரு சிறிய சடங்கு மூலம் அந்த ஜீவனுக்கு நாம் விடை கொடுத்து அனுப்புகிறோம்.

பின்பு சந்திரன், செவ்வாய் போன்ற பல கிரகங்களையும் கடந்து, ஆறாவது மாதம் அந்த ஜீவன் அழகான நீரூற்றுகளும், சோலைகளும், அட்சயவடம் என்ற விருட்சங்களும், குன்றுகளும் நிறைந்த பித்ருக்களின் உலகை அடைகிறது. ஆறு மாத இடைவிடாத பயணத்தால் ஏற்பட்ட களைப்பு நீங்க அந்த ஜீவன் மனமகிழ்ச்சியுடன் பூமியில் தனது பிள்ளைகள் திதி பூஜையின் மூலம் அளிக்கும் உணவை (அமுதம்) உண்டு அதனால் மனநிறைவு பெற்றுத் தங்களுக்கு பக்தியுடன் உணவளித்ததற்காகத் தனது குழந்தைகளை ஆசீர்வதிக்கின்றது.

சிறிது காலம் பித்ருக்களின் உலகில் தங்கி, இளைப்பாறி மனநிறைவு பெற்ற அந்த ஜீவன், மீண்டும் தன் பயணத்தைத் தொடர்கிறது. தான் உலகில் உடலைத் துறந்த ஓராண்டு முடிவில், அதே திதியன்று தர்மதேவதையின் வைவஸ்வதம் என்ற தலைநகரத்தை அடைகிறது. மிகப்பெரிய புண்ணிய நகரமாகிய இதன் அழகையும், ஒளியையும், புனிதத்தையும் புராதன நூல்கள் விவரிக்கின்றன.

பூவுலகில் வாழ்ந்தபோது தெய்வத்திடம் பக்தி, சத்தியத்தைக் கடைப்பிடித்தல், மற்ற உயிர்களிடம் கருணை, திருக்கோயில்களைத் தரிசிப்பது, புனர்நிர்மாணம் செய்வது, புண்ணிய நதிகளில் நீராடுதல், பித்ரு பூஜைகளைத் தவறாது செய்தல் போன்ற புண்ணிய காரியங்களைச் செய்துள்ள உத்தம ஜீவர்களை தர்மராஜன் தங்கமயமான தனது சிம்மாசனத்திலிருந்து இறங்கிவந்து கையைப் பிடித்து அன்புடன் வரவேற்று, சம ஆசனமளித்து மரியாதை செய்து அவரவரது புண்ணிய காரியங்களுக்கேற்ப பிற புண்ணிய உலகங்களுக்கு அனுப்பி வைக்கிறார்.

அந்தப் புண்ணிய உலகங்களில், தாங்கள் செய்துள்ள நற்செயல்களுக்கு ஏற்ற காலம் வரை சுகங்களை அனுபவித்து, அந்த உத்தம ஜீவன்கள், மீண்டும் பூமிக்குத் திரும்பி முற்பிறவியை விட உயர்ந்த பிறவியை எடுக்கிறார்கள்.

இதற்கு மாறாக, உலகில் வாழ்ந்த போது மமதையினால் பாவம் செய்தவர்கள் புண்ணிய உலகங்களுக்குச் செல்லாமல் வேறு சில உலகங்களுக்கு சென்று விட்டு மீண்டும் பூவுலகில் மனிதர்களாகவோ அல்லது பிராணிகளாகவோ அல்லது புழு, பூச்சிகளாகவோ பிறவி எடுக்கின்றனர்.

இவ்விதம் பிறவி, மரணம், மறுபிறவி என்ற பயணத்தின் போது அவரவர்களுடைய பிள்ளைகள், பெண்கள், பேரன்கள், பேத்திகள் செய்யும் பித்ரு பூஜையின் பலன்கள் சூரியபகவானால் நம்மிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டு, இதற்காக என்றே படைக்கப்பட்டுள்ள பித்ரு தேவதைகளின் திருக்கரங்களில் ஒப்படைக்கப்படுகின்றன.

அவ்விதம் ஒப்படைக்கப்பட்ட பித்ரு பூஜா பலன்களைப் பித்ரு தேவதைகள் எடுத்துச் சென்று, நமது மறைந்த மூதாதையர் எங்கு இருக்கிறார்களோ,எப்பிறவி எடுத்திருக்கிறார்களோ, அதற்கு ஏற்ப உணவாகவும், நீராகவும் மாற்றி கொடுத்து விடுகின்றனர். இதனால் பசி, தாகம் நீங்கி நமது முன்னோர்கள் மனநிறைவு அடையும்போது அந்தப் புண்ணியத்தின் பலனைப் பித்ரு தேவதைகள் ஏற்று சூரியபகவானிடம் அளித்துவிடுகின்றனர். சூரியன் அந்தப் பலனை நமக்குத் திரும்ப தந்துவிடுகிறார்.

நமது முன்னோர்களில் சிலர் மகத்தான புண்ணியத்தைச் செய்து, அதன் பலனாக பிறப்பு இறப்பு அல்லாத முக்தி நிலையை அடைந்திருந்தால், அத்தகைய பித்ருக்களுக்கு நாம் செய்யும் பூஜா பலன்களை இறைவனே ஏற்றுக்கொண்டு, அதற்குப் பிரதிபலனாக, பல நன்மைகளை நமக்கு அளித்தருள்கிறான்.

நமது முன்னோர்களில் எவரெவர் முக்தி நிலையை அடைந்துள்ளனர் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாததால், பித்ரு பூஜைகளைத் தொடர்ந்து நாம் செய்யவேண்டும் என சப்தரிஷிகளும் உறுதியாக கூறியுள்ளனர்.

நாம் செய்யும் எந்தப் பித்ரு பூஜையும் வீணாவதில்லை. அதனால் திருப்தியும், மனநிறைவும், மகிழ்ச்சியும் அடைந்து, நம் பித்ருக்கள் நம்மை ஆசீர்வதிக்கும் போது, அந்த ஆசி நம்மை ஏராளமான துன்பங்களில் இருந்து காப்பாற்றி விடுகிறது. ஆதலால் தான் பித்ருபூஜைகளின் மகத்தான புண்ணிய பலன் அளவற்றது என்பதையும், எக்காரணத்தைக் கொண்டும் பித்ரு பூஜைகளை விட்டுவிடக் கூடாது என்றும் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகிறோம்.

பாவங்களில் பெரிய பாவம் பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பது தான். அமாவாசையில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து, அவர்களது அருளையும், ஆசியையும் பெறுவோம். நம் கஷ்டங்கள் எவ்வளவு பெரிதாக இருப்பினும் அதை அடியோடு நீக்கும் சக்தி மறைந்த நம் முன்னோர்களுக்கு உண்டு என்பதை மறந்து விடக் கூடாது.

Tags:    

Similar News