தொடங்கியது அக்னி நட்சத்திரம்: இதையெல்லாம் செய்யவே செய்யாதிங்க!

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று முதல் ஆரம்பம்; இக்கால கட்டத்தில் எதை செய்யலாம், செய்யக்கூடாது என்று ஜோதிடர்கள், மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.;

Update: 2022-05-04 02:15 GMT

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் இருந்தே வெயில் அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்தின் சில இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டிவிட்டது. சென்னையிலும் வெயில் அதிகமாக கொளுத்துகிறது.

இந்நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில்,  இன்று 4-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி 25 நாட்களுக்கு நீடிக்கும். அக்னி வெயில் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும். பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தும். சில மாவட்டங்களில் வெயில் 110 டிகிரியையும் தாண்டிவிடும். இதன் காரணமாக பகல் நேரத்தில் அனல்காற்று வீசும். இரவு நேரத்தில் புழுக்கம் அதிகமாக காணப்படும்.

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

ஜோதிடப்படி, ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சூரியன் பயணிப்பார். அந்த வகையில், சித்திரை மாதம் மேஷ ராசியில் சூரியன் சஞ்சரிக்கும்போது உச்ச பலம் பெறுவதால், அதிக வெப்பம் காணப்படும்.சூரியன் பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யக்கூடிய அந்த நாட்களுக்கு பெயர்தான் அக்னி நட்சத்திரம்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 21ஆம் தேதி முதல் வைகாசி மாதம் 14ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனை 'அக்னி நட்சத்திரம்' என்று கூறுகிறார்கள். இந்து பஞ்சாங்கத்தின் படி, 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் இருப்பதாக கூறப்படுகிறது.

இன்று  புதன்கிழமை அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கி வருகிற 28ஆம் தேதி வரை நீடிக்கிறது. வழக்கத்தைவிட இந்த நாட்களில், சூரியன் அதிக வெப்பத்தை கொடுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். இந்த காலப்பகுதியை கத்திரி வெயில் என்றும் அழைப்பார்கள்.

மருத்துவர்கள், ஜோதிடர்கள் அட்வைஸ்!

அக்னி நட்சத்திர காலகட்டம் என்பது தானம் செய்ய வேண்டிய காலம். குறிப்பாக வறியவர்களுக்கு, உணவு, நீர், உடை ஆகியனவற்றைக் கட்டாயம் தானம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் தானம், மிகுந்த புண்ணிய பலனை ஏற்படுத்தும். குறிப்பாக இன்று நாடு இருக்கும் நிலைமையில் நாம் நம்மாலான உதவியை மற்றவர்களுக்குச் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறு செய்வதன் மூலம் நமக்குப் புண்ணிய பலம் கிடைக்கும் என்பதோடு மனநிறைவும் உண்டாகும்.

கோடையில் உடம்புக்குத் தேவையான முக்கிய உணவும் மருந்தும் தண்ணீர்தான். சாதாரண நாட்களில் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும் என்றால், கோடையில் 5 – 6 லிட்டர் தண்ணீர் உடம்புக்குத் தேவைப்படும். இதை பின்பற்றினாலே, கோடைகால நோய்களில் இருந்து தப்பிக்கலாம்

இந்த நாள்களில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும். வெப்பம் அதிகரிக்கும்போது இயல்பாகவே மனித சக்தி அதிகமாகச் செலவாகும். எனவே, உடல் உழைப்பை அதிகம் கோரும் சில செயல்களை நம் முன்னோர்கள் இந்த நாள்களில் செய்வதைத் தடை செய்தனர்.

குறிப்பாகக் கிணறு வெட்டுதல், பூமிபூஜை செய்வது, கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவது, விதை விதைப்பது, மரம் வெட்டுவது, குழந்தைகளுக்குக் காதுகுத்தி மொட்டை போடுவது ஆகியனவற்றைக் கட்டாயம் செய்யக் கூடாது என்று வகுத்துள்ளனர்.

உணவு, ஆடைகளில் அலட்சியம் கூடாது!

இறுக்கமான ஆடைகள், உள்ளாடைகளால் சருமத்தில் வியர்வை தேங்கி, படர்தாமரை, அரிப்பு, தோல் வீங்குதல் (படர்தாமரை பரவும் இடங்களில் தோல் வீங்கி சிவப்பது) போன்ற பாதிப்புகள் உண்டாகும். உடலை மறைக்கும் பருத்தி ஆடைகளை அணிவது, தோல் வீங்கிய பகுதிகளை கையால் தொந்தரவு செய்யாமல் இருப்பது, முடிந்தவரை உடலைத் தூய்மையாக வைத்திருப்பது, படர்தாமரைக்கான க்ரீம்களை மருத்துவர் ஆலோசனையோடு தடவுவது ஆகியவற்றை மேற்கொண்டாலே இதிலிருந்து தப்பிவிடலாம்.

வெயில் காலத்தில் படுத்தி எடுக்கும் அடுத்த பிரச்னை சூடுபிடித்தல். அடிவயிறு வலிப்பதுதான் சூடுபிடித்தலின் அறிகுறி. அப்படி வலித்தால், அடிவயிற்றில் தொப்புளை சுற்றி நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவுவது, கூடுமானவரை குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்வது, தண்ணீர் அதிகம் அருந்துவது போன்றவற்றை செய்து நிவாரணம் பெறலாம். அடுத்து நீர்க்கடுப்பு.

சிறுநீர் போகும் பொழுது சொல்ல முடியாத அளவிற்கு கடுப்புடன் கூடிய வலி ஏற்படும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இதற்கு வெந்தயத்தை, மோருடன் அல்லது தண்ணீரில் கலந்து சாப்பிடுவது, இளநீர் அல்லது எலுமிச்சை ஜுஸ் அருந்துவதன் மூலம் நிவாரணம் பெறலாம். அதேபோல், எண்ணெய் சேர்த்த உணவுகள், அசைவ உணவுகளுக்கு முற்றிலும் தடை போடுங்கள்.

Tags:    

Similar News