ஆடி அமாவாசை சந்தேகங்கள்... நம்பிக்கைகள்...தெளிவுகள்!
மாதந்தோறும் அமாவாசை வருகிறது. அப்படியிருந்தும் ஏன் ஆடி அமாவாசைக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம்?;
ஏனெனில் பித்ரு லோகத்தில் வாழும் நம் முன்னோர்களான புண்ணிய ஆத்மாக்கள் சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் வரும் இந்த நாளில் தான் நம்மைக் காண பூமிக்கு வருவதாக ஐதீகம். ஆகவே தான் இந்த நாளில் அவர்களை மனதார நினைத்து அவர்களுக்கு நன்றி செய்யும் பொருட்டு தர்ப்பணம், வழிபாடுகள் போன்றவற்றை செய்து அவர்களின் ஆசிகளைப் பெறுகிறோம்.
அமாவாசையன்று நல்ல விசயங்கள் துவங்கலாமா?
அமாவாசையில் ஒரே நேர்க்கோட்டில் வரும் சூரியன், சந்திரன் கிரகங்களின் ஆகர்ஷணசக்தியால் மனித மூளையின் உணர்வுகளும் பாதிக்கப்பட்டு மாற்றங்கள் நிகழ்வதாக கண்டறிந்துள்ளனர். மனம் கொந்தளிக்கும் இந்த நாட்களில் நடத்தப்படும் நல்ல விசயங்களில் பாதிப்புகள் வரலாம் என்பதால் இந்த நாளில் நல்ல காரியங்களைத் தவிர்ப்பது நல்லது.
சுபகாரியங்கள் செய்வதும் தவறா?
சில சூழல்களால் மனத் தெளிவுடன் முன்னரே திட்டமிட்ட சுப காரியங்கள் செய்வதில் தவறில்லை. ஆனால், வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து நன்மைகளைத் தரக்கூடிய புதிய செயல்களாய் இருந்தால் நன்கு சிந்தித்து இந்த நாளினைத் தவிர்த்து வளர்பிறை எனப்படும் தொடர்ந்து வரும் நல்ல நாளில் துவங்குவதே நல்லது.
அமாவாசையன்று மவுன விரதம் இருப்பது நல்லதா?
பொதுவாகவே வாரத்தில் ஒரு நாள் மவுன விரதம் இருப்பது நல்லது. உடலும் மனமும் பரபரப்பாகி, இதனால் பதட்டமும் கோபமும் வரலாம் என்பதால் இந்த நாளில் கட்டுபாடற்ற நாவினை அடக்க மவுன விரதம் இருப்பது மிகச் சிறந்தது. இதனால் பல பிரச்சினைகள் தவிர்க்கப்படும். கோயில்களை நாடிச் சென்று அமைதியுடன் தெய்வ தரிசனத்தில் மனம் ஒன்றுவதும் இந்த காரணத்திற்காகத்தான்
அமாவாசையில் அடிபடக் கூடாது என்கிறார்களே?
அன்றைய நாளில் உடல் ரீதியான மிகக் கடினமான பணிகளை ஒத்திவைப்பது நல்லது. காரணம் எதிர்பாராத விதமாக அடிபட்டு ரத்தக் காயங்கள் ஏற்பட்டால் அந்த நாளின் வீர்யத்தால் அவ்வளவு எளிதில் ஆறாது என்பார்கள்.
முன்னோர் தர்ப்பணம் தர வழியே இல்லாதவர்கள் என்ன செய்யலாம்?
அம்மன் சிவன் கோயில்களுக்கு சென்று அவர்களை மனதார நினைத்து வணங்கலாம். நம்மால் முடிந்த அளவுக்கு தானங்களும் தர்மங்களும் செய்வது அவர்களின் ஆசிகளை பெற்றுத் தரும் எளிய வழியாகும். ஒரு துளி நீரில் உருவாகி நீரில் கரையும் உடலில் உறைந்த ஆத்மாக்களுக்கு நன்றி சொல்ல பரிசுத்த நீர் நிலைகளை நாட வேண்டும். ஆனால் சூழலால் நதி நிலைகளுக்குச் செல்ல முடியவில்லை எனும் கவலையின்றி ஏழு நதிகளையும் மனதில் நினைத்து வீடுகளில் நீராடலாம்.
இது போன்ற பல சந்தேகங்கள் இருந்தாலும் நமது முன்னோர்கள் வகுத்திருக்கும் நியதிகளை கடைப்பிடிக்க வேண்டியது நமக்கு நன்மையே தரும் என்ற நம்பிக்கை கொள்வோம்.