"சாமி நல்லா இருக்கேன் : கட்டை (பாத ரக்ஷை) காப்பாத்துது”..!

நாட்டு மருத்துவமும், ஜோஸியமும் தெரிந்திருந்தும் அவருக்கு முடிதிருத்தும் தொழிலே முக்கியமாக இருந்தது.;

Update: 2024-08-06 08:08 GMT

பாத ரக்ஷை (கோப்பு படம் )

 

அந்த ஜோஸ்யரின் வீட்டுப் பெண்கள் மற்ற பெண்களுக்கு பிரசவம் பார்ப்பார்கள். அந்த முடிதிருத்துவரிடம் ஒரு பிராமண மடி பாட்டி வபனம் செய்து கொள்வதுண்டு. ஒருமுறை பாட்டியிடம் இப்படி அந்த ஜோஸியர் குறைப்பட்டுக் கொண்டார்.

"பாட்டியம்மா... என் தொழில்லே அத்தனை வருமானமில்லே. ஜோஸியம் சொல்றதிலேயும் ஒண்ணும் வரமாட்டேங்குது. இந்த முடிதிருத்துற தொழிலை வைச்சுண்டு ஐந்து குழந்தைகளை காப்பாற்றுவது கஷ்டமா இருக்கு" என்று அழாத குறையாக முறையிட்டார்.

அந்த அந்தண பாட்டி பெரியவாளிடம் பக்தி கொண்டவர். அதனால் "உனக்கு மஹாபெரியவான்னு ஒரு நடமாடும் தெய்வம் இருக்கு தெரியுமா..." என்று கேட்டு விட்டு, பெரியவா அப்போது அருளிக் கொண்டிருந்த ஊரைச் சொல்லி "நீ பெரியவா கிட்டே போய் உன் குறையைச் சொல்லு.. அவர் காலிலே சாஷ்டாங்கமாக விழு. அவா உன்னை நிச்சயம் காப்பாற்றுவா".

"உனக்கு என்ன வேணும்னு கேட்டா பெரியவாளோட பாதரக்ஷை வேணும்னு கேட்டுட்டு வா... அவா தந்தா அது உன் பாக்யம்" என்றும் கூறி பாட்டி அவரை அனுப்பினாள். பாட்டி சொன்னவுடன் திருப்பளாத்துரை என்ற ஊரில் பெரியவாளை ஜோஸியர் தரிசிக்க நேர்ந்தது. பல்லக்கை பிடித்தபடி பெரியவா நடந்து சென்ற போது வழியில் இந்த ஜோஸியர், பாட்டி சொல்லி அனுப்பியது போல் நமஸ்கரித்தார்.

பெரியவா அவர் அழுவதை பார்த்து மனது தாங்காமல் "அவருக்கு என்ன வேண்டுமாம். ஏன் அழறார்னு கேளு" என்று கைங்கர்யம் செய்யும் அன்பரிடம் கேட்கச் சொன்னார். அப்படி அவரிடம் கேட்டதும் "எங்க அப்பா இருந்தபோது தொழில் நல்லா போச்சு, இப்போ சாப்பாட்டுக்கே கஷ்டமாயிருக்கு" என்றார் இவர்.

"அதுக்கு நான் என்ன செய்யணுமாம்?" ஒன்றுமே தெரியாதவர் போல் பெரியவா கேட்டார். பாட்டி சொல்லி அனுப்பியபடி அவர் என்ன கேட்பாரென்று பெரியவாளுக்கு நன்றாகவே தெரியும். "எனக்கு நீங்க போட்டுட்டு இருக்கிற கட்டை (பாத ரஷை) கொடுங்க" என்று வெகுளியாக இவர் கேட்டார். சிரித்துக் கொண்டே பெரியவா தன் பாதுகையை அந்த நாவிதருக்குக் கொடுத்தருளினார். ஒரு பாமர பக்தராய் பெரியவாளிடம் பணம் வேண்டும் பொருள் வேண்டுமென கேட்காதவர் இந்த பாதுகையை பாட்டி சொல்லி அனுப்பிய ஒரே காரணத்துக்காக கேட்டாரேயன்றி அதன் விசேஷம் என்ன என்று அவர் அறியவில்லை.

அதன்பின், பரதன் ராமபாதுகையை வைத்து நாட்டை ஆண்டதுபோல் பெரியவா பாதுகையை வைத்துக் கொண்டு ஜோஸியம் சொல்லத் தொடங்கினார். அவர் வாழ்வில் மடமட வென்ற வெற்றிகள். அவர் குறிப்பிட்ட அந்த கட்டையின் மேன்மையால் குவியத் தொடங்கியது.

பெரியவாளின் கருணையினால் பணவரவு மிகுந்து குழந்தைகள் எல்லோரும் நல்ல படிப்பு படித்து டாக்டர், ஆடிட்டர் என்ற உயர்நிலைக்கு வந்து விட்டனர். ஆனால் மாதாமாதம் தவறாமல் அந்த ஜோஸியர் பெரியவா தரிசனத்திற்கு வருவதை நிறுத்தவில்லை. பெரியவா "சௌக்கியமா?” என்று கேட்பாராம்.

"சாமி நல்லா இருக்கேன். கட்டை காப்பாத்துது” என்று சொல்வாராம். ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி வனவாசம் செய்த நாட்களில் அயோத்தியை காப்பாற்றிய ஸ்ரீராமபாத ரக்ஷையைப் போன்று பெரியவாளின் பாதுகை பல பக்தர்களை அவர்கள் இல்லங்களில் காப்பாற்றிக் கொண்டிருப்பது உண்மை.

Tags:    

Similar News