மைக்ரோசாப்ட்டை பின்னுக்கு தள்ளிய என்விடியா
உலக சந்தை மதிப்பில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியது என்விடியா நிறுவனம்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி உலகின் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனம் என்ற சாதனையை தனக்காக்கி கொண்டுள்ளது என்விடியா நிறுவனம்.
என்விடியா கார்ப்பரேஷன் நிறுவனம் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்ட ஒரு அமெரிக்க பண்பாட்டு தொழில் நுட்ப நிறுவனம் ஆகும். 1993ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் முதலில் கம்ப்யூட்டர் சிப்கள் மற்றும் உதிரி பாகங்களை தயாரித்து வந்தது. பின்னர் கிராபிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் அசுர வளர்ச்சி கண்டது. இதன் காரணமாக என்விடியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது.
இதன் விளைவாக சில நாட்களுக்கு முன்பு பங்குச் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி 2ம் இடத்தை பிடித்தது என்விடியா. பங்குச் சந்தைகளில் என்விடியாவின் பங்குகள், 3.4% அளவிற்கு ஏற்றம் கண்டது. இதனால் என்விடியாவின் சந்தை மூலதனம் 3 லட்சத்து 34,000 கோடி டாலராக அதிகரித்தது.
இதையடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி உலகின் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனம் என்ற சாதனையை என்விடியா நிறுவனம் படைத்துள்ளது. 2024ல் மட்டும் என்விடியாவின் சந்தை மதிப்பு சுமார் 175% அளவிற்கு உயர்வினை கண்டுள்ளதால் அதன் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் இடையே போட்டி நிலவுகிறது.