இரவில் நல்ல தூக்கம் வேண்டுமா?
இரவில் நல்ல தூக்கம் வேண்டுமா? சில குறிப்புகளை விரிவாக பார்ப்போம்.;
இரவில் நல்ல ஆழ்ந்த, நிம்மதியான தூக்கம் என்பது நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. ஆனால், மன அழுத்தம், பதட்டம் காரணமாக தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஏராளம். இந்த இரவு நேர அவஸ்தைக்கு என்ன தான் தீர்வு? பக்க விளைவுகள் இல்லாத இயற்கை வைத்தியத்தை நோக்கி பலர் திரும்புகின்றனர். உங்கள் சமையலறையிலேயே உங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் அளிக்கக்கூடிய சில பானங்கள் உள்ளன.
1. மஞ்சள் பால் - மனதிற்கு அமைதி
இந்திய பாரம்பரியத்தில் மஞ்சளின் இடம் மகத்துவம் வாய்ந்தது. மஞ்சளில் உள்ள குர்குமின் (curcumin) என்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் நமது உடலை நோய்களிடம் இருந்து மட்டுமல்ல, கவலைகளிலிருந்தும் பாதுகாக்கிறது. இரவு படுக்கப் போகும் முன் ஒரு டம்ளர் சூடான மஞ்சள் பால் அருந்தினால் மனம் அமைதியாகி, தூக்கமின்மையும் மறையும்.
2. சாமந்தி டீ - பதட்டத்திற்கு நிவாரணம்
அலுவலகம், வீடு என்று ஓய்வேயில்லாமல் ஓடும் வாழ்க்கையில் ஏற்படும் பதட்டம் நிம்மதியான தூக்கத்தை உடைக்கிறது. சாமந்திப் பூவின் இதழ்களால் காய்ச்சப்பட்ட டீ இந்த பதட்டத்தைக் குறைப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் அபிஜெனின் (apigenin) இதில் நிறைந்துள்ளது.
3. தேங்காய் தண்ணீர் - தசைகளுக்கு இதம்
தினசரி வேலைகளுக்குப் பிறகு நம் உடல் தசைகள் சோர்வில் தளர்ந்திருக்கும். தேங்காய் தண்ணீரில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் தசைகளைத் தளர்த்தி உடலுக்கு இதமளிக்கின்றன. உடல் அமைதி பெறும்போது, இயற்கையாகவே தூக்கம் வரத் தொடங்கும்.
4. லெமன் பாம் (Lemon balm) தேநீர் - கலங்கிய எண்ணங்களுக்கு தெளிவு
கவலை தரும் எண்ணங்களே தூக்கம் கெடக் காரணமாக இருக்கலாம். லெமன் பாம் என்ற இயற்கை மூலிகையின் இலைகளைக் கொண்டு செய்யப்படும் தேநீர், மனதை தெளிவாக்கி, கவலைகளைக் குறைப்பதோடு, மனச்சோர்வை எதிர்த்து போராடுவதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
5. பாதாம் பால் - இயற்கை தூக்க மாத்திரை
வைட்டமின் ஈ, மெக்னீசியம் நிறைந்த பாதாமை அரைத்து பாலுடன் சேர்த்து அருந்தினால் அற்புதமான பலன்களைப் பெறலாம். உடலுக்கு நல்ல கொழுப்பை அளிப்பது மட்டுமின்றி, இதிலுள்ள மெலடோனின் மற்றும் டிரிப்டோபன் (tryptophan) என்ற வேதிப்பொருட்கள் இயற்கையான தூக்கத்தை வரவழைக்க உதவுவதாகத் தெரிகிறது.
6. அஸ்வகந்தா பால் - மன அழுத்தத்தை சமாளிக்க...
ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடம் வகிக்கும் அஸ்வகந்தா, மன அழுத்தத்தையும், கவலையையும் போக்கும் அருமருந்தாக செயல்படுகிறது. அஸ்வகந்தா வேர் பொடியை சூடான பாலுடன் கலந்து அருந்துவதனால் நரம்புகள் தளர்ந்து அமைதி ஏற்படுவதை நீங்களே உணர்வீர்கள்.
7. செர்ரி சாறு - வேகமாக தூங்க இதுதான் வழி
அமெரிக்காவில் செய்யப்பட்ட ஓர் ஆய்வு, புளிப்பு செர்ரி சாறு அருந்துவது, தூங்குவதற்கு எடுக்கும் நேரத்தைக் குறைத்து, ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவுவதாக தெரிவிக்கிறது. உடலில் மெலடோனின் அளவை சீராக்கி, விழித்தல்-தூக்கம் சுழற்சியை மேம்படுத்த செர்ரி உதவுகிறது.
8. வலேரியன் வேர் தேநீர் - தூக்கமின்மைக்கு சிறந்தது
நூற்றாண்டுகளாக ஐரோப்பிய நாடுகளில் தூக்கமின்மைக்கு வலேரியன் வேரை மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த வேரிலுள்ள கபா (GABA) என்னும் நியூரோடிரான்ஸ்மிட்டர் மூளையை அமைதியுறச் செய்து தூக்கத்தை வரவழைக்கிறது.
இந்த பானங்கள் பெரும்பாலானவர்களுக்கு பாதுகாப்பானவையே என்றாலும், நீரிழிவு, இரத்த அழுத்தம், வேறு ஏதேனும் நோய்களுக்காக மருந்து உட்கொள்பவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் புதிய பானங்களை உணவில் சேர்ப்பதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது அவசியம்.
ஆழ்ந்த உறக்கத்திற்கான பொதுவான அறிவுரைகள்
- படுக்கைக்கு செல்வதற்கு குறைந்தது 2 மணிநேரம் முன்பே இரவு உணவை முடித்து விடுவது நல்லது.
- காபி, டீ போன்ற பானங்களை தவிர்ப்பது நல்லது.
- இரவு படுக்கச் செல்லும் முன் மொபைல், மடிக்கணினி திரைகளை பார்ப்பதைத் தவிர்க்கவும்.
- இந்த இயற்கை பானங்களை உங்கள் இரவு நேர வழக்கமாக்கி, அமைதியான நிம்மதியான தூக்கம் என்ற வரத்தைப் பெறுங்கள்!