திட்டமிடல் இல்லாத திடீர் சுற்றுலா சென்ற அனுபவம் இருக்கிறதா?

Unexpected tourist experience- எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல் திடீரென சுற்றுலா சென்றால், என்ன அனுபவங்கள் கிடைக்கும் என்பதை குடும்பத்துடன் சென்ற ஒருவரின் பதிவின் வாயிலாக அறியலாம்.

Update: 2024-08-10 17:34 GMT

Unexpected tourist experience- திடீர் சுற்றுலா தரும் அதிசய அனுபவங்கள் ( மாதிரி படங்கள்)

Unexpected tourist experience- சுற்றுலா என்பது சில மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு பல முன்னேற்பாடுகளை கவனமாகச் செய்து மேற்கொள்ளும் ஒரு பயணம் ஆகும்.

இப்படியாக பல விஷயங்களைத் திட்டமிட்டுச் செய்தாலும் கூட சுற்றுலாவின் போது பல சிரமங்கள் ஏற்படுவது சகஜம். பயணங்களில் ஏற்படும் பிரச்னைகள், சுற்றுலாத் தலங்களில் எதிர்பாராத பலவிதமான பிரச்னைகள், எதிர்பாராத மழை, செல்லும் வாகனங்களில் பழுது ஏற்பட்டு வழியிலேயே நின்று விடுதல் முதலானவற்றால் சுற்றுலா சில சமயங்களில் சற்று குறையுடனே முடியும்.

மேலும் உடன் வரும் நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருடன் எதிர்பாராத மனத்தாங்கல்கள் ஏற்பட்டு பிரச்னைகள் பெரிதாகி மனக்குறையுடன் வீடு திரும்பும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவது சகஜமே. இப்படியாக முன்னேற்பாடுகளுடன் செல்லும் சுற்றுலாவைத் திட்டமிட்ட அன்று தொடங்கி பல இடங்களுக்கும் சென்று திரும்பி வரும்வரை டென்ஷனாகவே பலருக்கு அமையும்.


எவ்வளவுதான் முன்னேற்பாடுகளைச் செய்து சுற்றுலா சென்றாலும் அதிலும் பல சிக்கல்கள் ஏற்படுவது சகஜம்தான்.

எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாமல் எந்த ஒரு திட்டத்தையும் போடாமல் திடீரென்று சுற்றுலா செல்ல முடிவு செய்து எப்போதாவது சுற்றுலா சென்ற அனுபவம் உங்களுக்கு உண்டா? உண்மையில் கூறவேண்டும் என்றால் எந்த பயணத்திட்டத்தையும் போடாமல் எந்த ஊருக்குச் செல்வது என்று முடிவு செய்யாமல் நினைத்தவுடன் புறப்பட்டுச் செல்லும் இத்தகைய திடீர் சுற்றுலாக்கள் மிக வெற்றிகரமாக முடியும்.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால் ஒருநாள் இரவு நாளை காலையில் ஒரு சுற்றுலா புறப்பட வேண்டும் என்று முடிவு செய்தோம். எங்கே செல்லுவது என்று யோசித்த போது காரைக்குடிக்குச் செல்லலாம் என்று முடிவு செய்தோம்.

மறுநாள் காலை நான் எனது குடும்பத்தினருடன் ஒரு டிராவல் பேகில் சில துணிகளை எடுத்துக் கொண்டு கல்பாக்கத்திலிருந்து புறப்பட்டோம். கல்பாக்கத்திலிருந்து விழுப்புரம் வழியாக திருச்சிக்குச் சென்று அங்கிருந்து காரைக்குடிக்குச் சென்றோம். அங்கு எங்களுக்குத் தெரிந்த ஒரு நண்பர் இருந்தார். அவரிடம் கூறி தங்குவதற்கு ஒரு நல்ல ஹோட்டலை புக் செய்யச் சொன்னோம். மாலை ஐந்து மணிக்கு காரைக்குடிக்குச் சென்றோம். ஹோட்டலில் தங்கி மறுநாள் காலை ஒரு காரில் புறப்பட்டு நகரத்தார் கோவில்கள், அரியக்குடி, திருமயம் கோட்டை, குன்றக்குடி, திருக்கோஷ்டியூர், கானாடுகாத்தான், ஆயிரம் ஜன்னல் வீடு முதலான இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். இரண்டு நாட்களில் காரைக்குடி பகுதியை எவ்வளவு பார்க்க முடியுமோ அவ்வளவு சுற்றிப் பார்த்தோம்.


மறுநாள் காரைக்குடியிலிருந்து புறப்பட்டு ஊருக்குத் திரும்ப முடிவு செய்தோம். காரைக்குடி பேருந்து நிலையத்திற்குச் சென்றபோது அங்கிருந்து மதுரைக்கு ஏராளமான பேருந்துகள் சென்று கொண்டிருப்பதைக் கண்டு மதுரைக்கு எவ்வளவு நேரப் பயணம் என்று கேட்ட போது ஒன்றரை மணி நேரம் என்றார்கள். உடனே மதுரை செல்லும் பேருந்தில் ஏறி மதுரைக்குச் சென்றோம். அன்று முழுவதும் மதுரையைச் சுற்றிப் பார்த்தோம். மறுநாள் காலை மதுரையிலிருந்து புறப்பட்டு செங்கற்பட்டிற்கு வந்து அங்கிருந்து பேருந்து மூலம் கல்பாக்கத்தை அடைந்தோம்.

சுற்றுலா செல்ல எந்த திட்டமிடுதலும் இல்லை. எங்கே செல்லப் போகிறோம் ? எந்தெந்த சுற்றுலாத் தலங்களைப் பார்க்கப் போகிறோம் என்றைக்கு ஊருக்குத் திரும்பப் போகிறோம் எப்படித் திரும்பப் போகிறோம் என்று எதுவும் தெரியாது. 

பலமுறை திட்டமிடுதலுடன் சுற்றுலா சென்ற எங்களுக்கு எந்த திட்டமிடுதலும் செய்யாத இந்த பயணம் வெற்றிகரமாக முடிந்தது எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. இதன் பெயர்தான் திடீர் சுற்றுலா.

நீங்களும் இதுபோல ஒரு திடீர் சுற்றுலா சென்று பாருங்கள். உங்களுக்கு பல புதிய அனுபவம் கிடைக்கும்.

Tags:    

Similar News