உயர்ந்தோரின் வெற்றி ரகசியம்: அன்றாடப் பழக்கங்களே!
அசாத்திய சாதனையாளர்களின் ரகசியம் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.;
உலகில் பலர் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு இலக்குகள். சிலரது இலக்குகள் எட்டாக்கனியாக இருக்கும். சிலர் அவற்றை அசால்ட்டாக சாதிப்பர். அவர்களின் மன உறுதி, கடும் உழைப்பு, நேர மேலாண்மை போன்றவை அவர்களை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றிருக்கும். தினசரி வாழ்வில் எத்தனையோ செயல்களை மனிதன் செய்து கொண்டிருக்கிறான். அன்றாடச் செயல்பாடுகளைச் சரியாகச் செய்யும் போதே வெற்றியானது அவனை நெருங்க ஆரம்பித்துவிடுகிறது. இக்கட்டுரையில், உச்சத்தை அடைந்தவர்களின் அன்றாடப் பழக்கங்களை ஆராய்வோம்.
அதிகாலையில் எழுதல்
"விடியற்காலையில் எழுபவன் வித்தகன்" என்பதை மனதில் வைத்திருப்பவர்களே வெற்றிப்பாதையில் முதலடி எடுத்து வைக்கின்றனர். தொழிலதிபராகட்டும், திரை நட்சத்திரமாகட்டும், அதிகாலையில் எழுவது அவர்களின் பொதுவான பழக்கம். அதிகாலை நேரம் மனதை அமைதிப்படுத்தி, நாளைக்குரிய திட்டங்களைத் தெளிவாகச் சிந்திக்க உதவும். புத்துணர்ச்சி நம்மைத் தழுவும்.
சிந்தனைகளை எழுதுதல்
சிந்தனை தெளிவு இருந்தால் செயல் தெளிவும் பிறக்கும். பல வெற்றியாளர்களின் பொதுவான வழக்கம் தங்களது எண்ணங்களை ஒரு நோட்டில் எழுதி வைப்பது. இதனால் மனதில் ஓடும் குழப்பமான எண்ண ஓட்டங்கள் ஒழுங்குபெறும். நாளின் முன்னுரிமைகளை வரிசைப்படுத்திக்கொள்ள முடியும். சிறிய குறிப்பாக இருந்தாலும், காலப்போக்கில் அதுவே வெற்றிக்கான அடித்தளமாக அமைகிறது.
உடற்பயிற்சி நமக்கே உரித்தான நேரம்
உடல் ஆரோக்கியமின்றி மன ஆரோக்கியம் இல்லை. வெற்றியாளர்கள் தங்களின் பிசியான நேரத்திலும் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது உடற்பயிற்சிக்கு ஒதுக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மன அழுத்தம் குறைவதோடு, நாள் முழுவதற்கான சுறுசுறுப்பும் கிடைக்கிறது. நடைபயிற்சி போன்ற எளிய உடற்பயிற்சியே கூட நீண்ட நாள் பலன் அளிக்கும்.
வாசிக்கும் ஆர்வம்
"வாசிப்பவன் வாழ்பவன்". உலக நடப்பு, தமது துறை சார்ந்த தகவல்கள், என தாகம் அடங்காமல் வாசிக்கும் பழக்கம் வெற்றிபெற்றவர்களுக்கு உந்துதலாக இருக்கிறது. அவர்களது அறிவுச் செல்வம் அதிகரிப்பதோடு, எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கும் ஞானமும் வளர்கிறது. புத்தகம் வாசிப்பதைப் போல, பயனுள்ள கட்டுரைகள் மற்றும் இதழ்களையும் வாசிப்பது சிறப்பு.
தனித்துவமான இலக்கு
பொத்தாம் பொதுவான இலக்கை வைத்துக்கொண்டு சாதிக்க நினைப்பவர்களால் உச்சம் தொட முடியாது. தமக்கென தனித்துவமான லட்சியங்களை நிர்ணயித்துக்கொள்பவர்களே, போட்டியின்றிப் பீடு நடை போடுகின்றனர். அந்த இலக்கை அடையக் கடின உழைப்பையும், தம் முழு விடாமுயற்சியையும் செலுத்துவார்கள்.
நேரத்திற்கு மரியாதை
ஒவ்வொரு விநாடியும் விலைமதிப்பற்றது. நேரத்தின் அருமையை உணர்ந்தவர்களுக்குத்தான் வெற்றியின் ருசி கிடைக்கும். ஒவ்வொரு வேலையையும் செய்வதற்கு என்று நேரம் குறித்துக்கொண்டு கண்மூடித்தனமாகச் செய்யாமல் சிந்தித்தே செயல்படுபவர்களால் வெற்றியின் படிக்கட்டுகளில் வேகமாக ஏற முடியும். நேரம் தவறுதல் என்பது ஒருபோதும் அவர்களிடம் இருக்காது.
தோல்விப் படிக்கட்டுகளில் வெற்றி
தோல்வி இல்லாத மனிதர்களே இல்லை. வெற்றியை மட்டுமே ருசித்துக்கொண்டிருப்பது இயலாத செயல். ஆனால், வெற்றியாளர்கள் என்ன செய்வார்கள்? தோல்விக்கான காரணத்தை அலசுவர். அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வர். தவறை மீண்டும் செய்யாமல் இருக்க முயற்சிப்பர். தோல்வியைக் கூட ஒரு புதிய அனுபவமாக எண்ணுவர். அதுவே அவர்களின் அசைக்கமுடியாத மனஉறுதிக்கு வித்திடும்.
பிறரை வெற்றிபெற வைக்கும் மாய மந்திரங்கள் இல்லை. அன்றாட பழக்கவழக்கங்களை முறைப்படுத்திக்கொண்டாலே போதும், வெற்றிக்கனியை எளிதில் பறித்து விடலாம். மேற்கூறிய அனைத்துப் பண்புகளும் ஒரே நாளில் நம்மிடம் வந்துவிடப் போவதில்லை. தினம் ஒரு வழக்கத்தை நம் வாழ்வில் புகுத்திப் பழகுவதன் மூலம் நம்மையும் மேம்படுத்திக் கொள்ள முடியும். கடுமையான உழைப்புடனும் கனவுகளுடனும் வாழ்க்கைப் பயணத்தில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருப்போம்.