அத்தை, மாமா உறவுகள் வருங்காலத்தில் அறுந்து போகும் அபாயத்தில் நாடு
அத்தை, மாமா உறவுகள் வருங்காலத்தில் அறுந்து போகும் அபாயத்தில் ,இப்போது நாடு போய்க்கொண்டு இருக்கிறது.
தமிழ் கலாச்சாரத்தில் அத்தை .,மாமா என்ற உறவுகள் மிக முக்கியமானவை. தாய்மாமன் உறவு என்பதற்கு தலைமுறை தலைமுறையாக தமிழில் பல்வேறு செவிவழி கதைகளும், வரலாற்று நிகழ்வுகளும் சான்றாக கருதப்பட்டு வருகிறது. இன்றும் ஒரு பெண் குழந்தை பிறப்பு, பூப்பெய்தும் காலத்திலிருந்து அவள் திருமணம், இறுதிச் சடங்கு என அனைத்து நிகழ்ச்சிகளிலும் தாய்மாமன் சடங்கு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
பண்டைய தமிழ் காலத்தில் ஒரு பெண் பிறந்து விட்டால் அவள் தாய் மாமனுக்கு தான் சொந்தம் என்ற வழக்கு இருந்திருக்கிறது .அதன் காரணமாகத்தான் பெண் குழந்தையை திருமணம் செய்து கொடுக்கும் பெண் வீட்டார் முதலில் தாய்மாமனுக்கு மாலை அணிவித்து அவனுடைய ஆசீர்வாதம் பெற்ற பின்னரே மணமகனுக்கு தாரை வார்க்கிறார்கள். இது இன்றளவும் தமிழகத்தில் ஒரு வழக்கு மொழியாக உள்ளது.
ஆனால் தற்போது ஒருவனுக்கு ஒருத்தி இருவருக்கு ஒருவர் என்கிற சித்தாந்தத்தின் அடிப்படையில் மக்கள் தொகையை குறைப்பதற்காக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குழந்தை இருந்தாலே போதும் என கருதப்பட்டு வருகிறது. ஒரு குழந்தை போதும் என குழந்தை பிறப்பை நிறுத்திக் கொள்பவர்கள் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் ஒரு குழந்தை பெறுவதற்கே வழியின்றி கருத்தரித்தல் மையங்களை புற்றீசல் கூட்டம் போல தேடி செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதற்கு காரணம் வாழ்வியல் முறை மாற்றம், உணவுகள் முறை மாற்றம், சமூக சிந்தனையில் மாற்றம் என எத்தனையோ காரணங்களை அடுக்கடுக்காக கூறிக் கொண்டே செல்லலாம். இப்படி இதே சூழலில் இந்த உலகம் பயணித்தால் வருங்காலத்தில் அத்தை மாமா என்ற உறவுகளே இல்லாமல் போய்விடும். எப்படி என கேட்கிறீர்களா?
ஒரு வீட்டில் ஒரு பெண் குழந்தையும் ஆண் குழந்தையும் பிறந்தால் அந்த பெண் குழந்தைக்கு பிறக்கும் குழந்தைக்கு அவளது அண்ணன் அல்லது தம்பி தாய் மாமன் ஆகிறான். ஆனால் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொண்டால் அவர்கள் தாய் மகனுக்கு எங்கே செல்வார்கள். இல்லை அத்தைக்கு தான் எங்கே செல்வார்கள். ஆதலால் தமிழ் கலாச்சாரத்தில் அத்தை மாமா சித்தி சித்தப்பா பெரியப்பா என்கிற உறவுகள் எல்லாம் வருங்காலத்தில் இல்லாமலே அறுந்து போய்விடும் ஒரு நிலை உள்ளது .
இதற்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் குழந்தை பிறப்பு என்பது ஒரு பக்கம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றாலும் குழந்தைக்காக ஏங்குவோர்களும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.எனவே அதற்கான வாழ்க்கை முறையையும் உணவியல் முறையையும் கொடுத்து குழந்தை பிறப்பை கட்டுப்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும் குழந்தைக்காக ஏங்கி அலைபவர்களுக்கும் ஒரு தீர்வு கொடுக்க வேண்டும் என்பதே சமூக சிந்தனையாக உள்ளது.
இல்லையேல் இதே நிலை நீடித்தால் திரைப்படங்களிலும், டிவி சீரியல் நாடக தொடர்களில் மட்டும் தான் அத்தை மாமா என்ற பாத்திரங்களை நடிகர் நடிகைகள் கோலத்தில் பார்த்து திருப்தி அடைய முடியும். இல்லை என்றால் இப்போது இருக்கும் பெரியவர்கள் எங்கள் காலத்தில் இப்படியா இருந்தது. என் கூட பிறந்தவர்கள் இத்தனை பேர் அத்தை மாமா என குடும்பமே விழாக்கோலம் பூண்டு இருந்தது என மலரும் நினைவுகளாக தங்களது கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் நிலை தான் ஏற்படும்.