சிறுநீரின் நிறம் சொல்லும் உங்கள் ஆரோக்கியத்தை; எப்படீன்னு தெரிஞ்சுக்குங்க...!
The color of urine indicates health- சிறுநீரின் நிறம் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை எப்படி அறிந்து கொள்வது எனத் தெரிந்துக்கொள்ளுங்கள்.;
The color of urine indicates health- உங்கள் ஆரோக்கியத்தை சிறுநீரின் நிறம் சொல்லும் ( மாதிரி படம்)
The color of urine indicates health- சிறுநீரின் நிறம் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை எப்படி அறிவது
சிறுநீர் என்பது நம் உடலின் கழிவுப் பொருட்களாலும் அதிகப்படியான திரவத்தாலும் உருவாகிறது. இதன் நிறம், வாசனை மற்றும் அடர்த்தி ஆகியவற்றை கண்காணிப்பதன் மூலம் நமது உடல்நலம் குறித்து பல முக்கியத் தகவல்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும். உங்கள் சிறுநீரின் நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள் உடலில் நீரிழப்பு முதல் சிறுநீரக பிரச்சனைகள் அல்லது நீரிழிவு நோய் போன்ற சில தீவிர நோய்களை சுட்டிக்காட்டும் அறிகுறியாக இருக்கலாம்.
இதில், வெவ்வேறு சிறுநீர் நிறங்கள் குறிக்கும் அர்த்தங்கள், அவற்றின் சாத்தியமான காரணங்கள் மற்றும் எப்போது மருத்துவரை அணுகுவது நல்லது என்பது பற்றி விளக்கமாகப் பார்ப்போம்.
சிறுநீரின் நிறங்கள் உணர்த்தும் அர்த்தம்
வெளிர் மஞ்சள் முதல் அடர் மஞ்சள் வரை: ஆரோக்கியமான சிறுநீரின் நிறம் இந்த வரம்பிற்குள் இருப்பது இயல்பானது. சிறுநீரின் மஞ்சள் நிறம், யூரோக்ரோம் (urochrome) எனும் நிறமியினால் ஏற்படுகிறது. உடலில் உள்ள நீரின் அளவைப் பொறுத்து இதன் நிறம் மாறும். அதிக நீர் அருந்தினால் சிறுநீரின் நிறம் வெளிர் மஞ்சளாக இருக்கும். போதுமான நீர் அருந்தாத நிலையில், சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
நிறமற்றது: உடலில் அதிகப்படியான நீர் தேங்கியிருக்கும் போது சிறுநீர் நிறமற்று வெளியேறும். இதற்கு சற்று கவனம் தேவை, ஏனெனில் இது நீர் போதைநிலை (water intoxication) எனும் உடல்நிலையைக் குறிக்கலாம். இதனால் உடல் திசுக்களில் நீர்க்கட்டு ஏற்பட்டு, சோடியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் நீர்த்துப் போகலாம்.
அடர் ஆரஞ்சு: சில வைட்டமின்கள், உணவுகள் மற்றும் மருந்துகள் சிறுநீர் அடர் ஆரஞ்சு நிறத்தில் வெளியேறக் காரணமாகலாம். உடல் நீரிழப்புக்கும் இந்த நிறம் ஒரு அறிகுறியாகும். நீங்கள் போதுமான நீர் அருந்தவில்லை எனில், சிறுநீர் அடர் ஆரஞ்சு நிறத்தில் வெளியேறலாம்.
சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு: சில நேரங்களில் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற சிறுநீர் எந்தப் பிரச்சனையையும் காட்டாமல் இருக்கலாம். பீட்ரூட், ப்ளூபெர்ரி போன்றவை சிறுநீரை இளஞ்சிவப்பு நிறத்தில் மாற்றும். இருப்பினும், இந்த நிறங்கள் கீழ்கண்ட சுகாதாரக் கோளாறுகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTIs)
சிறுநீரக கற்கள்
புரோஸ்டேட் பிரச்சனைகள்
கட்டிகள்
ஈயம் அல்லது பாதரசம் போன்ற சில கன உலோகங்களின் நச்சுத்தன்மை
நீலம் அல்லது பச்சை: சில அரிய மரபணு நிலைகள், உணவில் உள்ள சாயங்கள், பாக்டீரியா தொற்று மற்றும் சில மருந்துகளின் விளைவால் சிறுநீர் நீலம் அல்லது பச்சை நிறத்தில் வெளியேறலாம்.
பழுப்பு: தீவிரமான நீரிழப்பு அல்லது கல்லீரல் & சிறுநீரக நோய்களால் சிறுநீர் பழுப்பு நிறத்தில் வெளியாகலாம். மேலும், ரபார்ப் (rhubarb) போன்ற சில உணவுகளும் இதற்குக் காரணமாகலாம்.
நுரை நிறைந்த அல்லது குமிழ்கள் கொண்ட சிறுநீர்: சிறுநீர் கழிக்கும் போது வேகமாக வெளியேறுவதனால் சிறுநீரில் சிறிது நுரை காணப்படலாம். இருப்பினும், சிறுநீரில் அதிகப்படியான நுரை இருப்பது அல்லது அவை நீண்ட நேரம் இருப்பது சிறுநீரில் புரதம் (Proteinuria) அதிகமாக இருப்பதைக் குறிக்கும். இது சிறுநீரகப் பிரச்சனைகளுக்கான ஒரு அறிகுறியாகும்.
மற்ற முக்கிய அறிகுறிகள்
சிறுநீரின் நிற மாற்றத்துடன் கீழ்க்கண்ட அசாதாரண அறிகுறிகளையும் நீங்கள் கவனித்தால் உடனே மருத்துவரை அணுகுவது முக்கியம்:
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
வலி அல்லது எரிச்சலுடன் சிறுநீர் கழித்தல்
குமட்டல் அல்லது வாந்தி
காய்ச்சல் அல்லது குளிர்
முதுகு அல்லது பக்கவாட்டு வலி
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்
மேற்கண்ட அறிகுறிகளுடன் பின்வரும் சிறுநீரின் நிற மாற்றங்கள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெறவும்.
சிவப்பு, இளஞ்சிவப்பு அல்லது பழுப்பு நிற சிறுநீர்
நுரை நிறைந்த அல்லது குமிழ்கள் கொண்ட சிறுநீர்
உங்கள் சிறுநீர் நிறம், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் பற்றி நிறைய சொல்லும். உங்கள் சிறுநீரின் நிறத்தை கண்காணிப்பது சிறுநீரகப் பிரச்சனைகள், நீரிழிவு நோய் போன்றவற்றைக் கண்டறிய உதவும். உங்கள் உடலின் சமிக்ஞைகளை புரிந்து கொண்டு, எந்தவொரு அசாதாரண மாற்றம் காணப்படும் போதும் அதை உடனே மருத்துவரின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல் முக்கியம். சிறுநீரில் ஏற்படும் நிற மாற்றங்களை புரிந்து கொண்டு கண்காணிப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்களே முன்னெச்சரிக்கையுடன் பாதுகாத்துக் கொள்ள முடியும்.